அணுவாயுதக் குறைப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயார்: ஐநா

அணுவாயுதக் குறைப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயார்: ஐநா

படம்: ராய்ட்டர்ஸ்

16 Nov 2026 - 9:23 pm

2 mins read

மணிலா: சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே இந்த வாரம் நடைபெறவுள்ள உச்சநிலை மாநாட்டில் எடுக்கப்படும் எந்தவோர் அணுவாயுதக் குறைப்பு முயற்சிக்கும் ஆதரவளிக்கத் தயாராய் இருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) தெரிவித்திருக்கிறது.

அத்தகைய முடிவு எட்டப்படுமா என்பதில் நிச்சயமற்றத்தன்மை நிலவும் வேளையில், உலக நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் திங்கட்கிழமை (நவம்பர் 16) இவ்வாறு கூறியுள்ளார்.

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக மணிலா சென்றுள்ள அவர் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

“அணுவாயுதக் குறைப்புத் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டால், அதில் முழுமையாக ஈடுபடவும் அதனை வெற்றியடையச் செய்வதற்குப் பங்களிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று திரு குட்டரெஸ் கூறினார்.

“இதையே நாங்கள் காண விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“நாம் அந்த நிலையை அடைவோம் என்பதற்கு இன்னும் எந்த உத்தரவாதமும் இல்லை,” என்றார் அவர்.

இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள சந்திப்பில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோருடன் அணுவாயுதங்களைக் குறைப்பதற்கான முயற்சிகள் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வலியுறுத்துவார் என்று வெள்ளை மாளிகை கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

திரு டிரம்ப்பின் நான்கு நாள் ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக, ஆசியான் தலைவர்களைச் சந்திக்கவும் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகியவை அடங்கிய ‘குவாட்’ கூட்டமைப்பின் ஈராண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தில் பங்கேற்கவும் அவர் நவம்பர் 17ஆம் தேதி பிலிப்பைன்ஸ் செல்கிறார்.

தென்சீன நகரமான ஷென்‌‌ஷென்னில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மன்றத்திற்கு இடையே திரு புட்டின், திரு ஸி, திரு டிரம்ப் ஆகியோர் சந்திக்கவுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்