வலுத்துக்கொண்டே வரும் யுத்தத்தாலும், ஒயாமல் துளைக்கும் துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தாலும் நிலவும் பதற்றமிக்க சூழ்நிலையால், காஸாவிற்கு அனுப்பப்படும் உதவிப் பொருள்கள் தேவையுள்ளோரைச் சென்றடையவில்லை என்று அனைத்துலக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
ஏறத்தாழ 22 மாதப் போருக்குப் பிறகும் இந்த அவலம் நீடிப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அமைப்புகளும் உதவிக் குழுக்களும் ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.
காஸாவிற்குள் நுழைய இஸ்ரேல் அனுமதிக்கும் உதவிப் பொருள்கள், பெரும்பாலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போர்க்களத்தில் உள்ள பாலஸ்தீனர்களாலும், மேலும் அங்கு காணப்படும் குழப்பமான சூழல் காரணமாகவும் கொள்ளையடிக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் எதிரான போர் காரணமாக நிகழும் எதிர்பாரா நிகழ்வுகளால் பசியிலும் பிணியிலும் வாடும் மக்களுக்கு அனுப்பப்பட்ட உதவிகள் அவர்களைச் சென்றடைவதற்கு பதிலாகத் திருப்பி விடப்பட்டன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் ஊட்டச்சத்து குறைந்து பசியினால் நலிவுற்ற சிறார்களின் படங்கள் வெளியாகி அனைத்துலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனால் உதவிப் பொருள்கள் குறித்த நடவடிக்கைகள், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவச் சேவை உள்ளிட்டவை மீண்டும் உலகக் கவனத்தைப் பெறத் தொடங்கியுள்ளன.
அனைத்துலக அமைப்புகளால் வழங்கப்படும் உதவிகள் போதுமானதாக இல்லை என்றும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. விமானங்களிலிருந்து வீசப்படும் உணவுப் பொட்டலங்களை பிடிக்கப் புழுதியில் மக்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொள்ளும் பரிதாப நிலையும் பரவலாகத் தென்படுவதாகக் களத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் தெரிவித்ததாகவும் ஆய்வாளர்கள் பதிவிட்டுள்ளனர்.
‘உணவு கிடைக்காமல் போய்விடும் எனும் அச்சத்தால், கரங்களில் கத்தியுடன் மக்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்கின்றனர்,’’ என்று ‘ஏஎஃப்பி’ ஊடகத்திடம் கூறியிருக்கிறார் காஸாவில் உதவிப் பொருளுக்காகக் காத்திருக்கும் ஆமிர் ஸாகோட்.
தொடர்புடைய செய்திகள்
இந்த இடறல்களைத் தவிர்க்க ‘உலக உணவுத் திட்ட’ உதவிகளைக் கொண்டு வரும் ஓட்டுநர்கள், மக்களைச் சென்றடைந்து அவர்கள் தத்தம் உதவிகளைப் பெற்றிட ஏதுவாக வாகனங்களை அவர்களின் இடத்திற்கு இயக்குமாறு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால் பயன்கிட்டவில்லை என்றும் ஆய்வுகள் சுட்டின.
இதற்கிடையே, பாலஸ்தீன இஸ்லாமிய குழுக்கள் வெளியிட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றிய அண்மையக் காணொளி இஸ்ரேலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது பிடிபட்ட ஜெர்மனி, இஸ்ரேல் நாடுகளின் இரட்டை குடியுரிமை பெற்ற 21 வயது பிரஸ்லவ்ஸ்கி மற்றும் 21 வயது டேவிட் ஆகிய இவ்விருவரும் கடும் சோர்வாகவும் மெலிவுற்றும் இருப்பதை அந்தக் காணொளி காட்டியது.
இதனைக் கண்டு மீளாத் துயரில் மூழ்கியுள்ளதாகக் கூறிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரையும் மீட்கும் பணி உறுதியாகத் தொடர்கிறது, என்றார்.
அவர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் துரிதமாகச் செயலாக்கம் காணும் எனவும் அவர் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் கூறியதாகப் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கிட்டத்தட்ட 22 மாத சிறைவாசத்திற்குப் பிறகு மெலிந்த நிலையில் காணப்படும் பிணைக் கைதிகளின் முகம், உலக நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய முயற்சிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்பெறச் செய்துள்ளது.
நேற்று அதிகாலையில், மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கக் கோரி, நெட்டன்யாகுவின் அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் டெல் அவிவின் கடலோரப் பகுதிகளில் திரண்டனர்.
இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் அமைப்பு அதன் அறிக்கையில், காஸாவின் கொடுந்துயர் நிலவரத்துடன் காணொளியையும் மேற்கோள் காட்டி, ‘பஞ்சம் பரவத்தொடங்கிவிட்டது,’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.