வாஷிங்டன்: அமெரிக்காவில் மே 1 ஆம் தேதி, அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் நடந்த அத்தகைய ஆர்ப்பாட்டங்களில் வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் போன்றோரும் கலந்துகொண்டனர்.
குடிநுழைவுக் கொள்கை, வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் குறிவைக்கும் நடவடிக்கைகள், அதிபர் நிர்வாகத்தில் பெரும் பணக்காரர்களின் பங்கு போன்றவற்றை அவர்கள் எதிர்த்தனர்.
தவறுதலாக எல் சல்வடோர் சிறைக்கு அனுப்பப்பட்ட கில்மர் அப்ரெகோ கார்சியாவின் மனைவி ஜெனிஃபர் வாஸ்கஸ் சுரா, வாஷிங்டனில் நடந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் உரையாற்றினார். 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களுடனும் குடியேறிகள் உரிமை ஆர்வலர்களுடனும் இணைந்து அமெரிக்க வழக்கறிஞர் சங்கங்கள் அந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் தவறு நடந்துவிட்டதாக ஒப்புக்கொண்டாலும் அது தன் கணவரைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்ததுடன் கடத்திச் சென்றுவிட்டதாகவும் திருவாட்டி ஜெனிஃபர் கூறினார்.
50 நாள்களாகத் தன் கணவர் துன்பத்தில் உழல்வதாகக் கூறிய அவர், இதைப் பார்க்கும் அனைவரும் தொடர்ந்து போராடுங்கள் என்றார். கில்மரை அமெரிக்காவுக்குக் கொண்டுவரும்படி கூடியிருந்தோர் முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தோர், அதிபர் நிர்வாகம் பெரும் பணக்காரர்களின் லாபத்திற்கு முன்னுரிமை தருவதாகக் குறைகூறினர். மேலும், சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு, அரசுப் பள்ளிகள் ஆகியவற்றில் முழுமையாக முதலீடு செய்யும்படி அதிபருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஃபிலடெல்ஃபியா, லாஸ் ஏஞ்சலிஸ் உட்பட அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் மே தினத்தன்று இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.