இடைத்தவணைத் தேர்தலைத் தொடர்ந்து அமெரிக்க நீதித் துறை அதிகாரிகள் பதவி விலகல்

இடைத்தவணைத் தேர்தலைத் தொடர்ந்து அமெரிக்க நீதித் துறை அதிகாரிகள் பதவி விலகல்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

07 Nov 2026 - 11:55 am

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்காவில் இடைத்தவணைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததையடுத்து, அந்நாட்டு நீதித் துறையின் குடியுரிமைப் பிரிவுத் தலைவர், அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிரான சதி குற்றச்சாட்டுகளை விசாரித்து வந்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் பதவி விலகியுள்ளனர்.

அதிபர் டிரம்ப்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞரும் தற்போதைய அமெரிக்கத் தலைமை அரசு வழக்கறிஞருமான டாட் பிளான்ச், குடிசார் உரிமைகள் பிரிவின் துணைத் தலைமை வழக்கறிஞர் ஹர்மீத் தில்லனின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக வியாழக்கிழமை (நவம்பர் 6) அறிவித்தார்.

அக்டோபரிலேயே பதவி விலகல் கடிதத்தை அளித்திருந்ததாகவும், தேர்தல் முடியும் வரை அப்பதவியில் நீடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தில்லன் குறிப்பிட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்புப் பிரிவின் துணைத் தலைமை வழக்கறிஞர் ஜான் ஐசன்பெர்க், தெற்கு புளோரிடா மாவட்ட அமெரிக்க அரசு வழக்கறிஞர் ஜேசன் ரெடிங் குயினோன்ஸ் ஆகியோரின் பதவி விலகல்களையும் டாட் பிளான்ச் உறுதிப்படுத்தியுள்ளார். அதிபர் டிரம்ப்பை பதவியிலிருந்து அகற்ற முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை குயினோன்ஸ் மேற்பார்வையிட்டு வந்தார்.

டிரம்ப் தலைமையிலான நீதித் துறை, அவருக்கு அரசியல் எதிரிகளாகக் கருதப்பட்ட பலருக்கு எதிராகத் தொடர்ச்சியாக வழக்குகளைப் பதிவு செய்துவந்தது. இதில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யத் தயங்கிய அல்லது மறுத்த பல வழக்கறிஞர்கள் முன்னதாகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்