பெட்டாலிங் ஜெயா: செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அரசியல்வாதிகளின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவிவரும் நிலையில், ஒரு தேர்தல் வேட்பாளரின் நம்பத்தகுந்த போலிக் காணொளியை உருவாக்க, ஒரு திறன்பேசியும் 15 நொடி ஒலித்துண்டும் மட்டுமே போதுமானது என்று மலேசிய இணையப் பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் ‘ஆபத்தான முறையில் எளிதில் அணுகக்கூடியதாக’ மாறிவிட்டது என்று அதன் தலைவர் சிராஜ் ஜலீல் கூறினார்.
“ஒரு திறன்பேசி அல்லது சாதாரண மடிக்கணினி, ஒரு வேட்பாளரின் பொது உரையிலிருந்து எடுக்கப்பட்ட 15 முதல் 30 நொடி ஒலித்துண்டு, சந்தையில் எளிதில் கிடைக்கும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைக் கொண்ட எவரும், ஒரு குரலை நகலெடுத்து, உதடு அசைவுகளை நிமிடங்களில், இலவசமாக அல்லது சில ரிங்கிட் செலவில் ஒத்திசைக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
அண்மைக்காலமாக இதுபோன்ற காணொளிகள் அனைத்துத் தளங்களிலும் காளான்போலப் பெருகியுள்ளன. அவற்றில் பல, அரசியல்வாதிகள் ஒருபோதும் கூறாத வேடிக்கையான விஷயங்களைக் கூறுவது போன்ற நையாண்டிக் காணொளிகளாகும்.
மற்றவை பொய்யான கூற்றுகளைக் கொண்டுள்ளன. மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது, பாரிசான் நேஷனல் துணைத் தலைவர் முகம்மது ஹசான், அனைவருக்கும் 25,000 ரிங்கிட் வழங்குவதாக உறுதியளிப்பதுபோலக் காட்டிய, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலி டிக்டாக் காணொளி குறித்து வாக்காளர்களை எச்சரித்தார்.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய உள்ளடக்கங்கள் குறித்துக் கவனமாக இருக்குமாறு வியாழக்கிழமை வாக்காளர்களுக்கு நினைவூட்டினார். ஆனால், மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் இதுவரை தம்மிடம் எந்தப் புகாரையும் பெறவில்லை என்றும் கூறினார்.
அரசியல்வாதிகளின் நேரலை ஒளிபரப்புகளும் பத்திரிகையாளர் சந்திப்புகளும், தீய சக்திகள் செயல்படுவதற்கு ஏராளமான உயர் தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளை வழங்குவதால் அவர்கள் எளிதில் இலக்காகிறார்கள் என்று திரு சிராஜ் கூறினார்.
ஒரு வன்போலியைக் கண்டறிய, வாக்காளர்கள் வாய், பற்கள், தாடைப் பகுதியில் ஏற்படும் லேசான மங்கல், இயல்புக்கு மாறான கண் சிமிட்டல் அல்லது வேகமாகப் பேசும்போது பற்கள் மிகவும் வழுவழுப்பாகத் தெரிவதைக் கவனிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், குறிப்பாக உள்ளூர் மலாய் உச்சரிப்புகளில், தட்டையான அல்லது மிகையான தாளத்துடன் கூடிய குரலையும், பின்னணி இரைச்சலில் ஏற்படும் திடீர் மாற்றங்களையும் அவர்கள் கவனிக்க வேண்டும் என்று விளக்கினார்.
