சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்: டிரம்ப்

2 mins read
747569be-0fc0-4795-8b0d-969c5fa18648
அமெரிக்காவுடன் வர்த்தக உறவு மேற்கொண்டுள்ள நாடுகள் மீதான வரிவிதிப்பு அமெரிக்க உற்பத்தித்துறையை மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார். - படம்: ஏஎஃப்பி

லேன்சிங்: அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பொறுப்பேற்று 100 நாள்கள் ஆகிவிட்டன.

இதைக் கொண்டாடும் வகையில் மிச்சிகன் மாநிலத்தில் அவர் பேரணி நடத்தினார்.

பொருளியல் ரீதியாக அமெரிக்கா சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

“உலகிலேயே மிகச் சிறந்த பொருளியலாக அமெரிக்கா இருந்தது. இப்போது முன்பைவிட சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்,” என்றார் அவர்.

அமெரிக்காவுடன் வர்த்தக உறவு மேற்கொண்டுள்ள நாடுகள் மீதான வரிவிதிப்பு அமெரிக்க உற்பத்தித்துறையை மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடும் என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

பேரணியின்போது அவர் ஜனநாயகக் கட்சியினர், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சாடினார்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப்புக்கு அமெரிக்கர்கள் காட்டி வரும் ஆதரவு குறைந்திருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

வரிவிதிப்பு, பணவீக்கம் குறித்து அமெரிக்கர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

‘டிப்ஸ், சமூகப் பாதுகாப்பு, கூடுதல் நேரப் பணிக்கான ஊதியம் ஆகியவற்றுக்கு வரி விதிக்கக்கூடாது என்று நாடாளுமன்றத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பேரணியில் கலந்துகொண்ட டிரம்ப் ஆதரவாளர்கள் கரவொலி எழுப்ப அவர் தாம் நடைமுறைப்படுத்தியுள்ள மாற்றங்களைப் பட்டியலிட்டுக் கூறினார்.

அதிபர் டிரம்ப் மேடையில் பேசியபோது அவருக்குப் பின்னால் ‘தி கோல்டன் எஜ்’ (பொற்காலம்) என்ற வாசகத்தைக் கொண்ட பதாகை மாட்டப்பட்டிருந்தது.

சட்டவிரோத குடிநுழைவுக்கு எதிராகத் தமது அரசாங்கம் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகளைக் காட்டும் காணொளி பேரணியில் ஒளிபரப்பப்பட்டது.

குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுவோருக்கு மொட்டை அடிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்படுவதைக் காணொளி காட்டியது.

இதைப் பார்த்து, பேரணியில் கலந்துகொண்டோர் ஆரவாரம் செய்தனர்.

தேசிய பாதுகாப்புக்கு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருப்பதாகப் பேரணிக்கு முன்னதாக அதிபர் டிரம்ப் கூறினார்.

செல்ஃபிரிட்ஜில் உள்ள ராணவ முகாம், 21 போயிங் எஃப்-15எக்ஸ் போர் விமானங்களைப் பெறும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்