கோகா: ஜப்பானில் தனது அறையில் உடன் தங்கியிருந்தவரின் வாயைத் தைத்ததாகப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட 49 வயதுப் பெண்மணி தன்னுடன் தங்கியிருந்த 42 வயதுப் பெண்ணின் உதடுகளை ஒன்றாகத் தைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஜூன் 29ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி வாக்கில் தாக்குதல் நடந்ததாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக இபராக்கி மாநிலத்தின் கோகா வட்டாரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் கூறுகின்றன.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உதடுகளில் பல இடங்களில் தையல் காயங்கள் இருந்தன.
பாதிக்கப்பட்ட பெண் அருகில் உள்ள ஒரு கடைக்குச் சென்று ஒரு தாளில் தனக்கு உதவி வேண்டும் என்று எழுதிக் காட்டியுள்ளார்.
பெண்ணின் நிலையைக் கண்ட கடையின் ஊழியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர் காவல் துறையின் விசாரணை தொடங்கியது.
காயங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட பெண்ணால் பேசவும் சாப்பிடவும் முடியவில்லை.
ஏன் பெண்மணி தாக்கப்பட்டார் என்பது உள்ளிட்ட காரணங்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

