தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசமடையும் தென்சீனக் கடல் விவகாரம்

1 mins read
1bcbf6c0-f309-4c5c-acfc-fe34a8f89126
போர்ப் பயிற்சியின் ஒரு பகுதியாகப் பிலிப்பீன்சின் வடக்குப் பகுதியில் உள்ள கடலோரப் பகுதியிலிருந்து ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

மணிலா: பிலிப்பீன்ஸ் உரிமை கொண்டாடும் தென்சீனக் கடற்பகுதி தீவு ஒன்றை தன் வசமாக்கிக்கொண்டுள்ளதாக சீனா அறிவித்த ஒரு சில மணி நேரங்களில் அமெரிக்கப் படைகளும் பிலிப்பீன்ஸ் படைகளும் அவற்றின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட தற்காப்புப் பயிற்சிகளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) தொடங்கின.

பிலிப்பீன்சின் வடக்குப் பகுதியில் உள்ள கடலோரப் பகுதியிலிருந்து ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டன.

தென்சீனக் கடல் விவகாரம் குறித்து பிலிப்பீன்சுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தென்சீனக் கடலின் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளும் தனக்குச் சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது.

ஆனால் சட்ட அடிப்படையில் இது செல்லாது என்று அனைத்துலக அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அனைத்துலகக் குரல்களைப் புறக்கணித்து சீனா, தென்சீனக் கடற்பகுதியில் உள்ள தீவைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் அமெரிக்கா-பிலிப்பீன்ஸ் ராணுவப் பயிற்சியில் திட்டத்தட்ட 17,000 வீரர்கள் பங்கேற்றனர்.

போர் பாவனைப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சேன்டி கே என்று அழைக்கப்படும் தியேசியான் தீவை சீனா தன் வசமாக்கிக்கொண்டது என்று சீனாவின் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகமான சிசிடிவி சனிக்கிழமை (ஏப்ரல் 26) செய்தி வெளியிட்டது.

இந்தத் தீவு ஸ்ப்ராட்லி தீவுகளின் ஒரு பகுதி.

பிலிப்பீன்ஸ் ராணுவத்துக்குச் சொந்தமான நிலையம் ஒன்றைக் கொண்டுள்ள பக்-அசா தீவுக்கு அருகில் இந்த சேன்டி கே உள்ளது.

சேன்டி கே தீவை சீனா தன் வசமாக்கிக்கொண்டது தொடர்பாக பிலிப்பீன்ஸ் அரசாங்கம் இன்னும் கருத்துரைக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்