பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள சுதந்திரச் சின்ன வளாகத்தில் (Democracy Monument) மாணவர்களும் இளம் ஆர்வலர்களும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) ஒன்றுகூடி கல்விச் சீர்திருத்தத்துக்காகவும் அரசியல் கொள்கைகளை வரைவதில் இளையர்களை அதிகம் ஈடுபடுத்தவேண்டும் என்றும் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குரல்கொடுத்தனர்.
ஆர்ப்பாட்டம் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததன்று என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மாணவர் குழுக்களின் ஏற்பாடு
ஸ்டூடெம் நெட்வொர்க், ஃபிரீ தாய் யூத் போன்ற மாணவர் குழுக்கள் பேரணிக்கு ஏற்பாடு செய்தன. உலக சிறார் தினத்தன்று ‘வேர் கேட் இயர்ஸ் டு சேஸ் அவுட் நூ’ என்ற கருப்பொருளுடன் பேரணி நடத்தப்பட்டது.
பிரதமர் அனுட்டினின் செல்லப் பெயரைக் கேலிசெய்யும் வகையில் கருப்பொருள் உருவாக்கப்பட்டது. திரு அனுட்டின் பொதுவாக நூ என்று அழைக்கப்படுகிறார். அந்த வார்த்தை தாய்லாந்து மொழியில் எலியைக் குறிக்கும்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திரளத் தொடங்கினர். சிலர் பள்ளி அல்லது பல்கலைக்கழகச் சீருடைகளை அணிந்திருந்தனர். சிலர் பூனைக் காதுகள் வடிவத்தில் இருக்கும் தலைப்பட்டையை அணிந்திருந்தனர்.
கல்வி முறை சாடல்
பேரணியில் பங்கேற்றவர்கள் தாய்லாந்தின் கல்வி முறையையும் அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் விமர்சித்தனர். கல்வியில் இருப்பதாகக் கூறப்படும் சமத்துவமின்மை உள்ளிட்ட சமூகம் சார்ந்த கவலைகளைச் சுட்டிக்காட்டும் பதாகைகளையும் அவர்கள் உருவாக்கியிருந்தனர்.
பட்டப் படிப்பு முடிந்த பிறகு வேலை கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியாத சூழலிலும் இளையர்கள் பலர் வேலை பார்க்கத் தொடங்குவதற்கு முன்னரே மாணவர்களுக்கான கடன்களை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது என்பது ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்று. பள்ளி சார்ந்த அரசாங்கக் கொள்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்குப் போதுமான வாய்ப்புகள் இல்லாததும் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
கம்போடிய எல்லைப் பிரச்சினை
கல்வியைத் தாண்டி தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்சினை தொடர்பிலான வருத்தங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எடுத்துரைத்தனர். எல்லைப் பதற்றத்தால் பொருளியலுக்கும் சமூகத்துக்கும் தீங்கு ஏற்படுகிறதே தவிர இரு நாடுகளுக்கும் நன்மை ஏற்படவில்லை என்பது சிலரின் வாதம்.
இந்நிலையில், பிரதமர் அனுட்டினின் அரசாங்கமும் அவர் தலைவராக இருக்கும் பூம்ஜாய்தாய் கட்சியும் உகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிடில் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் நிலைப்பாடு என்று தெரிவிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
