சுகாதாரத்துறை மீது சம்பூஜா நாயுடு ராமசாமி, 20, கொண்டுள்ள ஆர்வம், செவிலியராகப் பணியாற்றிய அவரது மறைந்த தந்தையிடமிருந்து பெற்ற ஆரம்பகால உத்வேகத்திலிருந்து உருவானது.
“நோயாளிகளைப் பராமரித்த அவரது அனுபவங்களைக் கேட்டபோது, என்னுள் ஒருவிதமான வியப்பும் ஆர்வமும் மேலோங்கியது,” என்றார் சம்பூஜா.
காலப்போக்கில், அந்த ஆர்வம் சுகாதாரத் துறையில் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவாக வளர்ந்தது. அதுவே அவரை மருந்தியல் அறிவியல் (Pharmaceutical Science) துறையைத் தேர்ந்தெடுக்கத் தூண்டியது.
“மருந்துகள் குறித்த ஆழமான அறிவைப் பெறுவதற்கும் அந்த அறிவை நோயாளிகளின் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்துவதற்கும் மருந்தியல் அறிவியல் சிறந்த வாய்ப்பை வழங்கியது,” என்று அவர் கூறினார்.
தெமாசெக் பலதுறைத்தொழிற்கல்லூரி 2020ல் நடத்திய பொதுவரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, அவரது கல்விப் பயணம் ஒரு முக்கியத் திருப்பத்தை எட்டியது. “இந்தக் கல்வி நிறுவனத்தில்தான் நான் பயில வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக எனக்குள் தோன்றியது,” என்று அவர் பகிர்ந்தார்.
அங்கு நடைபெற்ற நேரடி அறிவியல் விளக்கக் காட்சிகளும் வளாகச் சூழலும் அவரது கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்குத் தெமாசெக் பலதுறைத்தொழிற்கல்லூரி சிறந்த இடமாக இருக்கும் என்ற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து, அவர் பலதுறைத் தொழிற்கல்லூரி அடிப்படைத் திட்டத்தில் சேர்ந்தார். இதை அவர் தனது வாழ்க்கையின் முக்கிய மைல்கல்லாகக் குறிப்பிடுகிறார்.
“இந்தத் திட்டம் எனது ஒழுக்கத்தையும் விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தியது. மேலும், பட்டயப் படிப்பின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான மனவலிமையையும் எனக்குள் உருவாக்கியது,” என்றார் சம்பூஜா.
படிப்பின் முதல் வாரங்களில் சுயமாகக் கற்றுக்கொள்ளும் முறைக்குப் பழகுவது சவாலாக இருந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். “எனது கற்றலுக்கு நானே முழுப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் அது சற்று கடினமாகவே இருந்தது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், விரிவுரையாளர்களும் நண்பர்களும் அளித்த ஆதரவு, அந்தச் சூழலுக்கு அவர் தன்னைத் தழுவிக்கொள்ள உதவியதோடு, தற்சார்பு, நேர மேலாண்மை, பொறுப்புணர்வு போன்ற பண்புகளையும் வளர்த்தெடுத்தது.
கல்விக்கு அப்பால், சம்பூஜா தலைமைத்துவப் பொறுப்புகளிலும் தன்னை மெருகேற்றிக் கொண்டார். மருந்தியல் அறிவியல் ஆர்வலர் குழுவின் தலைவராகச் செயல்பட்டபோது, தலைமைத்துவம் என்பது வெறும் பணிகளைப் பகிர்ந்தளிப்பதல்ல, மாறாக மனிதர்களைப் புரிந்துகொள்வதே அதன் அடிப்படை என்பதை அவர் உணர்ந்ததாகக் கூறினார்.
டிபி தூதர்களின் (TP Ambassadors) துணைத் தலைவராகப் பணியாற்றியது, அவரது தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியதுடன், பல்வேறு தரப்பட்ட மக்களுடன் பழகும் திறனையும் மேம்படுத்தியது என்றார் சம்பூஜா. 2023ல் மலேசியாவில் நடைபெற்ற தலைமைத்துவ முகாம் போன்ற மறக்க முடியாத அனுபவங்கள், குழுப்பணி, தனிமனித வளர்ச்சி குறித்த அவரது புரிதலை ஆழப்படுத்தின.
மேலும், அந்த அனுபவம், அவரது தன்னம்பிக்கையை வலுப்படுத்தியதுடன், பல்வேறு தரப்பட்ட மக்களுடன் பயனுள்ள தொடர்பை ஏற்படுத்தும் திறனையும் மேம்படுத்தியது. 2023ல் மலேசியாவில் நடைபெற்ற தலைமைத்துவ முகாம் போன்ற அனுபவங்கள், குழுப்பணி, தனிமனித வளர்ச்சி குறித்த அவரது பார்வையை மேலும் ஆழப்படுத்தியதாக அவர் கூறினார்.
அவரது அர்ப்பணிப்பும் முயற்சியும், ‘டெய்சி பே டிபி அறக்கட்டளை இணைப்பாட நடவடிக்கைகள்’ (Daisy Phay TP Foundation CCA) கல்வி உதவித்தொகையையும், பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருதாளர் (Valedictorian) பட்டத்தையும் அவருக்கு பெற்றுத்தந்தன.
“இந்த அங்கீகாரங்கள் என்னைத் தொடர்ந்து முன்னேற ஊக்குவிக்கின்றன. அதே நேரத்தில், விடாமுயற்சி, நிதானம், சமநிலை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் எனக்கு நினைவூட்டுகின்றன,” என்றார் சம்பூஜா.
இன்று, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் செவிலியர் கல்வியைத் தொடர்ந்து, தனது சுகாதாரத் துறை பயணத்தை அவர் உறுதியாக முன்னெடுத்து வருகிறார். வலுவான கல்வி அடித்தளம், தலைமைத்துவ அனுபவங்கள் ஆகியவை தனது பாதைக்கு வழிகாட்டியாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
“முழு மனதுடன் சேவையாற்றி, மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதே என் இலக்கு,” என்று சம்பூஜா குறிப்பிட்டார்.

