நவீன சிங்கப்பூர் இளையர்களைக் கவரும் வண்ணம் பாரம்பரியத்தை விளையாட்டு, நாடகம், இசை, நடனம் என அனைத்து வடிவங்களிலும் வழங்கி, தமிழர்களின் பண்பாட்டை எடுத்துக்காட்டியது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) தமிழ் இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்த ‘பொங்குவதெல்லாம் உண்மை’ கொண்டாட்டம்.
ஜனவரி 26ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை ஆறு மணிவரை நடைபெற்ற இந்நிகழ்ச்சி, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ காங் சியான் விரிவுரை அரங்கில் சிறப்பாக நடந்தது.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட என்டியு, சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக்கழகம், சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 460 தமிழ் மாணவர்களை இந்நிகழ்ச்சி ஒன்றிணைத்தது.
“தமிழ் இளையர்களிடையே நமது பண்பாட்டையும் மரபையும் பரப்புவதே எங்களது நோக்கம். இதுபோன்ற நிகழ்ச்சிகளின்மூலம் நமது தலைமுறையினரைத் தமிழ்ப் பண்பாட்டில் ஈடுபடுத்தி, அதை அவர்களுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் முன்னெடுத்துச் செல்ல ஊக்குவிக்க நினைக்கிறோம்,” என்றார் என்டியு தமிழ் இலக்கிய மன்றத்தின் துணைத் தலைவர் மகாதேவன் ஆகாஷ், 23.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பொங்கல் திருநாளின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பொங்கல் பண்டிகை தொடர்பான விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.
‘மியூசிக்கல் மாடு’ என்ற விளையாட்டில், கண்கட்டி வைக்கப்பட்டிருந்த ‘மாடு’ பாத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு விளையாட்டாளர் மற்றொரு குழுவைச் சேர்ந்த விளையாட்டாளர்களை பிங் பாங் பந்துகளை உருட்டி வெளியேற்ற வேண்டியிருந்தது.
‘கரகாட்டம் சரேட்ஸ்’ என்ற விளையாட்டில், ஒரு விளையாட்டாளர் தங்கள் தலையில் அட்டையால் செய்யப்பட்ட கரகத்தை வைத்து நடனமாடியபடி, மற்றொரு விளையாட்டாளர் நடித்துக்காட்டும் ‘சரேட்ஸ்’ வினாக்களுக்குப் பதிலை யோசிக்க வேண்டியிருந்தது.
நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, ‘பொங்குவதெல்லாம் உண்மை’ என்ற கேலி நாடகம் அரங்கேறியது. இந்த நாடகம், ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பாணியில், பொங்கல் விழாவின் முக்கியத்துவத்தை நகைச்சுவையும் கருத்தாழமும் கலந்து வெளிப்படுத்தியது. நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, விஜயகாந்த் போன்ற தமிழ் பிரபலங்களாக மாணவர்கள் வேடம் அணிந்து, விவாத முறையில் தங்கள் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
தொலைக்காட்சி விளம்பரங்களைப் போல் நாடகத்தின் இடையே, வெவ்வேறு பல்கலைக்கழகங்களின் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கங்களைச் சேர்ந்த மாணவர்கள் நடன, இசை மேடை நிகழ்ச்சிகளைப் படைத்தனர்.
நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும், அரங்கம் முழுவதும் சிரிப்பொலியைத் தொடர்ந்து எதிரொலிக்க வைத்தது. தமிழ் பேசாத பார்வையாளர்களுக்காக, ஆங்கில மொழிபெயர்ப்பில் வசனங்கள் திரையில் காட்டப்பட்டன.
நாடகத்தின் ஒவ்வொரு வசனத்திலும் நகைச்சுவை கலந்திருந்ததால், தான் அதை மிகவும் ரசித்து பார்த்ததாகச் சொன்னார் பங்கேற்பாளர்களில் ஒருவரான சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழக மாணவர் வி.ஈஸ்வர், 24.
முதல்முறையாக இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அத்தனை தமிழ் இளையர்களும் ஒன்றிணைந்து பொங்கலைக் கொண்டாடியது மிகவும் சுவாரசியமான அனுபவமாக அமைந்ததாகச் சொன்னார்.
நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக, விளையாட்டுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த ‘கலக போகர கலகம்’, ‘ரெஜினா மோட்வானி’, ‘சூப்பர்ஸ்டார் சரவெடி’ குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
“சிங்கப்பூர் இளையர்கள் பலர் தீபாவளிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பொங்கல் என்பது ஒரு நாளில் கொண்டாடப்படும் பண்டிகையன்று, நான்கு நாள்களுக்கு நீடிக்கும் என்பதைக்கூட அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.
“இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன்வழி நமது இளையர்களுக்குத் தமிழ்ப் பாரம்பரியத்தின் செழுமையை நினைவூட்டுவதில் பங்கு வகிக்கிறோம் என்று நான் நம்புகிறேன்,” என்றார் ‘பொங்குவதெல்லாம் உண்மை’ கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த வெங்கட்டேஷ் விவேகா, 21.