தமிழார்வத்தைத் தூண்டிய இலக்கியப் போட்டிகள்

3 mins read
24fbe1dc-143e-495e-82b9-9b5b8154d9e4
ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் 36வது தமிழ் இலக்கியப் போட்டிகளின் மாபெரும் வெற்றியாளராக வாகை சூடிய ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி. - படம்: ராஃபிள்ஸ் கல்வி நிலையம்
multi-img1 of 5

ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் 36வது தமிழ் இலக்கியப் போட்டிகளின் மாபெரும் வெற்றி கிண்ணத்தை ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி கைப்பற்றியது.

இதில், வசனம் பேசி நடிப்பது, தயாரித்த உரையை மேடையில் ஆற்றுவது, கட்டுரை எழுதுவது, பாட்டு பாடுவது, தமிழ்மொழி, பொது அறிவு ஆகியவற்றைச் சோதிக்கும் புதிர் போட்டிகளில் பங்கேற்பது போன்ற தமிழ்மொழி மீதான ஆர்வத்தைத் தூண்டும் பலதரப்பட்ட போட்டிகளில் பங்கெடுத்து மாணவர்கள் பயன்பெற்றனர்.

தமிழ் மாணவர்களிடையே தமிழ்மொழிமீதும் தமிழ் இலக்கியம்மீதும் ஆர்வத்தைத் தூண்டுவதோடு தமிழ் கலாசாரத்தின்மீது ஆழ்ந்த மதிப்பைப் வளர்ப்பதும் இப்போட்டிகளின் நோக்கமாகும்.

உயர்நிலை 1,2 மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி வெற்றியாளர் அறிவியல், தொழில்நுட்பப் பள்ளி, சிங்கப்பூர் மாணவர் அபினவ் கோபி.
உயர்நிலை 1,2 மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி வெற்றியாளர் அறிவியல், தொழில்நுட்பப் பள்ளி, சிங்கப்பூர் மாணவர் அபினவ் கோபி. - படம்: அறிவியல், தொழில்நுட்பப் பள்ளி, சிங்கப்பூர்
புதிர்ப் போட்டியில் முதல் பரிசை வென்ற மாணவர்கள்.
புதிர்ப் போட்டியில் முதல் பரிசை வென்ற மாணவர்கள். - படம்: ராஃபிள்ஸ் கல்வி நிலையம்

அதுமட்டுமல்லாமல், மாணவர்களுக்கு மேடை பயத்தைப் போக்கவும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் இப்போட்டிகள் ஒரு வாய்ப்பை வழங்கி வருகின்றன.

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்களின் ஏற்பாட்டில் கடந்த 36 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன ராஃபிள்ஸ் இலக்கியப் போட்டிகள்.

தமிழ்மொழி விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் இலக்கியப் போட்டிகளில் மொத்தம் 35 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவ்வாண்டு பங்கேற்றனர்.

கட்டுரைப் போட்டி வெற்றியாளர்கள் - அறிவியல், தொழில்நுட்பப் பள்ளியைச் சார்ந்த இளவேனில், ரம்யா. கட்டுரைப் போட்டிச் சவால் கிண்ணத்தையும் அப்பள்ளி வென்றது.
கட்டுரைப் போட்டி வெற்றியாளர்கள் - அறிவியல், தொழில்நுட்பப் பள்ளியைச் சார்ந்த இளவேனில், ரம்யா. கட்டுரைப் போட்டிச் சவால் கிண்ணத்தையும் அப்பள்ளி வென்றது. - படம்: ராஃபிள்ஸ் கல்வி நிலையம்

போட்டிகளை ஏற்பாடு செய்யும் மாணவர்களுக்குத் தமிழ்மொழி மீதான ஆர்வம் அதிகரிப்பதோடு அவர்களின் தலைமைத்துவ திறன்களை வெளிக்காட்டி வளர்ப்பதற்கு இப்போட்டிகள் சிறந்த தளமாக அமைவதாகவும் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழு தலைவர் சதானந்தன் சாண்டில்யன், 16, சொன்னார்.

“ஒவ்வொரு போட்டியையும் எவ்வாறு நடத்துவது என்பதைப் பற்றி எங்களது தமிழாசிரியர்கள் பல பயிற்சிகளை வழங்கினார்கள். இதன்மூலம் எங்களது நிர்வாகத் திறனை வளர்த்துக்கொண்டோம். ராஃபிள்ஸ் மாணவர்களாகிய நாங்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆற்றும் பங்காகவும் இதைக் கருதுகிறோம்,” என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்

வெள்ளிக்கிழமை (11 ஏப்ரல்) நடைபெற்ற இப்போட்டிகளின் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகத் தேசியக் கல்விக் கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளரான முனைவர் எஸ்.பி. ஜெயராஜதாஸ் பாண்டியன் கலந்துகொண்டார்.

பரிசளிப்பு விழாவில் மேற்கூறிய தமிழ்மொழி சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்தத் தமிழ் இலக்கியப் போட்டிகளில் பங்கேற்ற ஒவ்வொரு மாணவரையும் முனைவர் ஜெயராஜதாஸ் மனதார பாராட்டினார். அன்றைய நிகழ்ச்சியில் மட்டும் தமிழில் பேசியதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதை மேன்மேலும் எவ்வாறு நமது வாழ்க்கையில் இணைக்கலாம் என்று சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.

“நீங்கள் ஒரு நாள் தமிழில் பேசவில்லை என்றால், அந்த நாள் வீணான நாள். ஆகவே தமிழில் தினமும் பேசுங்கள். அவசியத்திற்கு ஆங்கிலம், அடையாளத்திற்கு தமிழ்,” என்று முனைவர் ஜெயராஜதாஸ் கூறினார்.

மேடையில் நின்று பாடியது சற்று பயமாக இருந்தாலும் தனது ஆசிரியர், பெற்றோர், தோழிகள் ஆகியோரின் ஆதரவு தனக்கு மிகவும் துணையாக இருந்ததாகப் பாட்டுப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மூன்றாம் உயர்நிலை மாணவி அன்விதா ஆத்ரேயா, 14 கூறினார்.

“தமிழ்மீது நானும் என் சக மாணவிகளும் கொண்டுள்ள பற்றுதான் எங்களுக்கு உண்மையான உந்துதலாக இருந்தது,” என்று அவர் கூறி, ஒட்டுமொத்த போட்டியில் வெற்றி பெற்றதில் பெருமிதம் கொள்வதாகச் சொன்னார்.

மாணவர்கள் தங்களுடைய பள்ளி பொறுப்புகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி, இந்தப் போட்டிக்காகத் தயாரானதாக ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி தமிழ் ஆசிரியர் சாவித்திரி கூறினார்.

“மாபெரும் வெற்றியாளராக மாணவிகள் வாகை சூடியது அவர்களது அயராத உழைப்புக்குக் கிட்டிய பலன். தமிழ் மொழியில் மேலும் சிறப்பாக ஈடுபட இது அவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்கள் ஏற்பாடுசெய்த விளையாட்டுகளில் மாணவர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.
ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்கள் ஏற்பாடுசெய்த விளையாட்டுகளில் மாணவர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர். - படம்: ராஃபிள்ஸ் கல்வி நிலையம்
ஓரங்க நாடகப் போட்டியில் பங்கேற்றவர்களில் சிலர்.
ஓரங்க நாடகப் போட்டியில் பங்கேற்றவர்களில் சிலர். - படம்: ராஃபிள்ஸ் கல்வி நிலையம்
குறிப்புச் சொற்கள்