அறிவாற்றல் குறைபாடு அல்லது ‘டிமென்ஷியா’ எனப்படும் முது[Ϟ]மைக்கால மறதிநோயின் தொடக்கநிலையைக் கண்டறிவதில் உதவிக்கரம் நீட்ட வந்துள்ளது புதியதொரு பரிசோதனைக் கருவி.
சிங்கப்பூர் மக்கள்தொகையில் ஏறத்தாழ 12.5 விழுக்காட்டினருக்கு மிதமான அறிவாற்றல் குறைபாடு அல்லது முதுமைக்கால மறதிநோயின் முந்தைய நிலை ஏற்படுகிறது. என்றாலும் இந்நிலையைக் கண்டறிவது செலவு மிகுந்ததாக இருக்கக்கூடும்.
இச்சூழலில் இத்தகைய பாதிப்புக்குள்ளாவதைக் கண்டறியும் சோதனையை ஆற்றல்மிக்கதாகவும் கட்டுபடியாகக்கூடிய வகையிலும் வழங்குகிறது ‘ரிகக்னைஸ்’ (ReCognAIze).
மூன்றாண்டு ஆராய்ச்சியோடு மேம்பாடு சார்ந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு பிப்ரவரி மாதம் அதிகாரபூர்வமாக அந்தப் பரிசோதனைக் கருவி அங்கீகரிக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவின் ஆதரவில் அறிமுகம் கண்டுள்ள இந்தப் பரிசோதனைக் கருவி, நினைவாற்றல் தொடர்பான ஆரம்பகால அறிகுறிகளை 15 நிமிடங்களுக்குள் கண்டறியவல்லது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக லீ கொங் சியன் மருத்துவப் பள்ளி உருவாக்கியுள்ள ‘ரிகக்னைஸ்’ கருவி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள நரம்பியல்- அறி[Ϟ]வியல் சார்ந்த விளையாட்டுகளைப் பயன்படுத்தி ஒருவரது அறிவுத்திறன், செயல்பாடு, நினைவாற்றல் ஆகியவற்றை மதிப்பிடுகிறது.
தனியுரிமைப் படிமுறையால் இயக்கப்படும் இந்த விளையாட்டுகள், பயனர்கள் செய்துமுடிக்க வேண்டிய குறிப்பிட்ட சில பணிகளை வழங்கும்.
அதன்படி பயனர்கள் மளிகைப் பொருள் பட்டியலை மனப்பாடம் செய்து பிறகு அதன்படி சரியான பொருள்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான கட்டணத்தைச் செலுத்த, சரியான தொகையையும் தெரிவு செய்ய வேண்டியிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
கைக்கணினியில் செயலியாக இயங்கக்கூடிய இந்தக் கருவி, அதன் முன்னோட்ட மருத்துவப் பரிசோதனைகளில், மிதமான அறிவாற்றல் குறைபாட்டைக் கண்டறிவதில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டு துல்லியத்துடன் செயல்பட்டது.
சிங்கப்பூர் டிமென்ஷியா ஆராய்ச்சி நிலைய இயக்குநரான இணைப் பேராசிரியர் நாகேந்திரன் கந்தையா தலைமையிலான குழுவால் ‘ReCognAIze’ உருவாக்கம் கண்டுள்ளது.
படிப்படியாக மோசமடையும் நினைவாற்றல், அறிவாற்றல் போன்ற மாறுபட்ட அறிகுறிகளைக் கொண்ட கூட்டுக்குறைபாடு டிமென்ஷியா. இதில் நரம்புச்சிதைவு நோய் என்று குறிப்பிடப்படும் ‘அல்ஸைமர்ஸ்’ நோயும் ஒரு வகையாகும்.
2021ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 86,000 பேர் முதுமைக்கால மறதிநோயுடன் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. மூப்படைந்து வரும் சிங்கப்பூரின் மக்கள்தொகையைக் கவனத்தில் கொண்டிருக்கையில் இந்த எண்ணிக்கை 2030ஆம் ஆண்டில் 150,000க்கும் அதிகமாக உயர்ந்திருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
“முதுமைக்கால மறதிநோய் நிச்சயமாக ஒரு பெரும் பிரச்சினை என்பதை நாங்கள் அறிவோம். மேலும், மக்கள் அந்த பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று கூறினார் இச்செயலி உருவாக்கக் குழுவில் அங்கம் வகிக்கும் மருத்துவப் பள்ளியின் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் திரு முகம்மது அட்னான் அஸாம்.
இதன் தொடர்பில் கருத்துரைத்த பேராசிரியர் திரு கந்தய்யா, “மிதமான அறிவாற்றல் குறைபாட்டை முன்கூட்டியே கண்டறிவதால் நோயாளிகள் இந்த பாதிப்பினைத் தடுக்கத் தேவையான வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கும். மேலும் இந்த பாதிப்பு குறித்த போக்கை மாற்றியமைக்கவும் வழிவகுக்கும்,” என்றும் தெரிவித்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்த ‘டிமென்ஷியா’ தொடர்பிலான ‘லான்செட் குழு’வின் அறிக்கையை மேற்கோள் காட்டிய திரு கந்தய்யா, இதன்வழி டிமென்ஷியா பாதிப்புக்கு உள்ளாகும் நிலையை மெதுவடையச் செய்யலாம்; மேலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை 45 விழுக்காடு வரை குறைக்கலாம் என்றும் சொன்னார்.
தற்போதைய சூழலில் $1000க்கும் அதிகமான செலவிலும் பல மணிநேரத்திலும் ‘எம்ஆர்ஐ’ எனப்படும் காந்த அதிர்வு அலை பரிசோதனைவழி கண்டறியும் முறை கையாளப்படுகிறது.
பேனா, தாள் பயன்படுத்திச் செய்யப்படும் எளிமையான சோதனைகூட மூன்று முதல் நான்கு மணிநேரம் பிடிக்கும் என்றார் திரு அட்னான்.
எனினும், தற்போது நிறுவப்பட்டுள்ள ‘ரிகக்னைஸ்’ கருவி, இத்தகைய பரிசோதனைகளை மேலும் எளிமையாக்கும். மேலும், ஏராளமான மக்கள் அணுகும் வகையிலும் அது விளங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் திரு கந்தய்யா.
முழுமையான சுகாதார மதிப்பீட்டின் ஒரு பகுதியாக அடுத்த மூன்று மாதங்களில், ராஃபிள்ஸ் ஹோட்டல் ஆர்கேட், ஸ்டார் விஸ்தாவில் உள்ள ‘ஆஸ்லர் ஹெல்த்’இன் இரண்டு மருந்தகங்களில் உள்ள நோயாளிகளுக்கு ‘ரிகக்னைஸ்’ கருவியின் உதவி இலவசமாக வழங்கப்படவுள்ளது.