தொழில்துறைக்கு அடித்தளமாக அமைந்த தமிழ் முரசு வேலைப்பயிற்சி

9 mins read
f6eeb513-2126-4256-9d5b-da8bf7b46228
2014ஆம் ஆண்டு ஜென்டிங் லேனில் செயல்பட்ட தமிழ் முரசு நாளிதழ் அலுவலகத்தில் மா. பிரெமிக்கா. - படம்: மா. பிரெமிக்கா
multi-img1 of 2

தமிழ் முரசு செய்தியறை பல சிங்கப்பூர்த் தமிழ் இளையர்களுக்கு ஒரு சிறந்த பயிற்சிக் களமாக விளங்கி வருகிறது.

இங்கு பணியாற்றியவர்கள் ஊடகவியல், மொழிப் பயன்பாடு, சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

தற்போது வெவ்வேறு துறைகளில் வெற்றியாளர்களாக வலம்வரும் அவர்களில் பலர், தங்கள் வாழ்க்கைப் பயணத்தின் முக்கியமான தொடக்கமாக அந்த வேலைப்பயிற்சி நாள்களை நினைவுகூர்ந்தனர்.

அவர்களில் சிலர், தமிழ் முரசுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் தங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் குறித்துப் பகிர்ந்துகொண்டனர். 

மென்திறனை வளர்த்த செய்தியறை

பன்னாட்டு நிறுவனத்தில் இணையப் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் 32 வயது விஜயகுமார் அருள் ஓஸ்வினின் பயணம் எதிர்பாரா வகையில் தமிழ் முரசு செய்தியறையில் தொடங்கியது.

இணையப் பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் அருள் ஓஸ்வின்.
இணையப் பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார் அருள் ஓஸ்வின். - படம்: அருள் ஓஸ்வின்

இயந்திரப் பொறியியல் பட்டதாரியான அருள் தமிழ்மொழிமீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு நண்பரின் பரிந்துரையின்பேரில் இவர் 2014ஆம் ஆண்டு தமிழ் முரசில் இரண்டு மாத வேலைப்பயிற்சிக்கு சேர்ந்தார்.

“இரண்டு மாதங்களுக்குதான் என்பதால் முயற்சி செய்து பார்ப்போம் என்று நினைத்தேன். ஆனால், அந்த அனுபவம் என் வாழ்க்கையை மாற்றிய ஓர் அனுபவமாக அமைந்தது,” என்றார் அருள்.

2014ஆம் ஆண்டு ஜென்டிங் லேனில் செயல்பட்ட தமிழ் முரசு நாளிதழ் அலுவலகத்தில் அருள் ஓஸ்வின்.
2014ஆம் ஆண்டு ஜென்டிங் லேனில் செயல்பட்ட தமிழ் முரசு நாளிதழ் அலுவலகத்தில் அருள் ஓஸ்வின். - படம்: தமிழ் முரசு

தமது தற்போதைய வேலை தொழில்நுட்பத் திறன்களை அதிகம் சார்ந்ததாக இருந்தாலும், தமிழ் முரசில் அவர் கற்றுகொண்ட மென்திறன்கள் இன்றும் தமக்கு பயனுள்ளதாக இருப்பதாக இவர் குறிப்பிட்டார்.

“தொடர்புத்திறன், பல்வேறு நிலைகளில் உள்ள மக்களுடன் உரையாடும் முறை, இவை அனைத்தும் தமிழ் முரசில்தான் நான் கற்றுகொண்டேன். வெளிநாட்டு ஊழியர்கள் முதல் அமைச்சர்கள்வரை அனைவருடனும் நல்லுறவை வளர்த்து, தெளிவாக யோசனைகளை வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டேன்,” என்று அருள் கூறினார்.

2014ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியின்போது, அருள் அவரை நேர்கண்டார்.
2014ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியின்போது, அருள் அவரை நேர்கண்டார். - படம்: விஜயகுமார் அருள் ஓஸ்வின்

வேலைப்பயிற்சி முடிந்த பிறகும் தமிழ் முரசுக்காக அவ்வப்போது இவர் செய்திகளை எழுதிவந்தார்.

“தமிழ் முரசு எனக்கு தமிழைப் பற்றி மட்டுமன்று, பிற பண்பாடுகளைப் பற்றிய ஆழந்த புரிதலையும் ஏற்படுத்தியது. அந்த விரிவான பார்வை இன்றும் என்னை வழிநடத்துகிறது,” என்றார் அருள்.

அலுவலக வாழ்க்கைக்கு முன்னோட்டம்

தொடக்கக் கல்லூரியை முடித்த கையோடு 18 வயதிலேயே தமிழ் முரசு நாளிதழில் வேலைப்பயிற்சிக்கு சேர்ந்தார் வி. ஹரிணி, 30.

இன்று, அவர் உலக வங்கியின் சர்ச்சைத் தீர்வுக் குழுவில் பகுப்பாய்வாளராகச் செயல்பட்டு வந்தாலும், செய்தியறையில் பெற்ற அந்த முதல் வேலை அனுபவம் இன்றும் அவரது தொழில்முறை அணுகுமுறைகளுக்கு அடித்தளமாக இருக்கிறது.

உலக வங்கியின் சர்ச்சை தீர்வுக் குழுவில் பகுப்பாய்வாளராகப் பணிபுரியும் வி. ஹரிணி, 30.
உலக வங்கியின் சர்ச்சை தீர்வுக் குழுவில் பகுப்பாய்வாளராகப் பணிபுரியும் வி. ஹரிணி, 30. - படம்: வி. ஹரிணி

“அந்த வேலைப் பயிற்சிக் காலம் மிகச்சிறந்த முதல்படியாக இருந்தது. ஓர் அலுவலகத்தில் எவ்வாறு பணியாற்றுவது, காலக்கெடுவை நிர்வகிப்பது, முக்கியமாக தன்னம்பிக்கையுடன் செயல்படுவது போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன்,” என்றார் ஹரிணி.

ஒரு செய்தியாளராக இருந்தபோதும் தமது தற்போதைய வேலையிலும் கவனத்துடன் குறிப்புகளைக் கேட்பது, சரியான கேள்விகளை எழுப்புவது, கடினமான சூழ்நிலைகளில் தெளிவாக தொடர்புகொள்வது முக்கியம் என்ற ஒற்றுமைகளை அவர் சுட்டினார்.

வேலைப்பயிற்சிக் காலத்தில், நடிகர் சிவகார்த்திகேயனை நேர்காண ஹரிணிக்கு வாய்ப்பு கிட்டியது.
வேலைப்பயிற்சிக் காலத்தில், நடிகர் சிவகார்த்திகேயனை நேர்காண ஹரிணிக்கு வாய்ப்பு கிட்டியது. - படம்: வி. ஹரிணி

“வேலைப்பயிற்சி முடிந்த பிறகும், தமிழ் முரசுக்காக தொடர்ந்து பல செய்திகளை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வளர்ச்சிக்குத் தேவையான நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் அவர்கள்தான் எனக்கு வழங்கினார்கள்,” என்றார் ஹரிணி.

செய்தியறையின் எழுதும் முறை தம்மிடம் மிகுந்த தாக்‌கத்தை ஏற்படுத்தியதாகக் கூறிய அவர், செய்தியைச் சுருக்கமாக, தெளிவாக, உண்மையை உறுதிப்படுத்தி எழுத வேண்டியிருக்கும் என்பதால் அந்தத் திறனைத் தான் தமிழ் முரசில் வளர்த்துக்கொண்டதாகச் சொன்னார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற ‘யூடியூப் ஃபெஸ்ட்’ நிகழ்ச்சிக்கான செய்தியாளர் அட்டையை அணிந்திருக்கும் ஹரிணி.
சிங்கப்பூரில் நடைபெற்ற ‘யூடியூப் ஃபெஸ்ட்’ நிகழ்ச்சிக்கான செய்தியாளர் அட்டையை அணிந்திருக்கும் ஹரிணி. - படம்: வி. ஹரிணி

தமிழ் முரசின் 90வது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்த இவர், அது பல சிங்கப்பூர்த் தமிழ் இளையர்களின் இயல்பான வளர்ச்சிப் பாதையாக கருதுகிறார்.

“தமிழ்மொழியின்மீது ஆழ்ந்த நாட்டம் கொண்டவர்களின் பயணம், பெரும்பாலும் அங்குதான் தொடங்குகிறது,” என்கிறார் ஹரிணி.

சுகாதாரத்தில் மொழித்திறன்

இன்று பொதுச் சுகாதாரத்தில் பயிற்சி பெற்றுவரும் மருத்துவரான மா. பிரெமிக்கா, 30, கடந்த 2014ல் தமிழ் முரசு நாளிதழில் செய்தியாளராக ஐந்து மாதங்களுக்கு வேலைப்பயிற்சி மேற்கொண்டார்.

மருத்துவராக பணிபுரியும் 30 வயது டாக்டர் மா. பிரெமிக்கா.
மருத்துவராக பணிபுரியும் 30 வயது டாக்டர் மா. பிரெமிக்கா. - படம்: மா. பிரெமிக்கா

வேலையிடத்தில் தாம் வெவ்வேறு சமூகத்தினருடன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகளுக்கும் நம்பிக்கைக்குரிய தொடர்புகளுக்கும் அந்த அனுபவம் ஒரு வலுவான அடித்தளமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றுக் காலத்தில் செங்காங் பொது மருத்துவமனையில் பணியாற்றிய பிரெமிக்கா, வெளிநாட்டு ஊழியர்களைக் கவனித்துக்கொண்டார்.

“அவர்களில் பெரும்பாலானோர் தமிழில் பேசக்கூடியவர்களாக இருந்ததால், அவர்களுடன் நேரடியாக தமிழில் உரையாட முடிந்தது ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இது நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தியதோடு, சிறந்த ஆலோசனைகள் வழங்குவதற்கும் உதவியாக இருந்தது,” என்றார் பிரெமிக்கா.

சுகாதார அமைச்சில் பணிபுரிந்தபோது, கொவிட்-19 தொற்று தொடர்பான பொதுச் சுகாதார வழிகாட்டுதல்களை தமிழில் இவர் மொழிபெயர்த்தார். அத்துடன், இருமொழி சமூக விழிப்புணர்வு அமர்வுகளையும் வழிநடத்தியதுடன் தேசிய சுகாதார முயற்சிகளில் மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டார்.

“தமிழில் எழுதவும் மொழிபெயர்க்கவும், தொடர்புகளை உருவாக்கவும் எனக்கு தன்னம்பிக்கையை வழங்கியது தமிழ் முரசில் நான் செய்த வேலைப்பயிற்சி. ‘என்னாலும் அர்த்தமுள்ள வகையில், நல்ல தமிழில் எழுத முடியும்’ என்ற உணர்வை முதல்முறையாக அப்போது நான் உணர்ந்தேன்,” என்றார் பிரெமிக்கா.

வேலைப்பயிற்சிக் காலத்தில், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனை நேர்காண பிரெமிக்காவுக்கு வாய்ப்பு கிட்டியது.
வேலைப்பயிற்சிக் காலத்தில், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனை நேர்காண பிரெமிக்காவுக்கு வாய்ப்பு கிட்டியது. - படம்: மா. பிரெமிக்கா

வேலைப்பயிற்சிக்காலத்தில் தம் மனத்திற்கு நெருக்கமான சுகாதார தலைப்புகளையொட்டி எழுதுவதற்கான வாய்ப்புகளும் கிட்டியதாக இவர் நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து சில காலத்திற்கு தன்னுரிமைப் பணியாளராகச் செய்திகளை எழுதிய அவர், மருத்துவ பயிற்சிக்கு இடையே தமது இருமொழித்திறனை தமிழ் முரசின்வழி மேலும் வளர்த்துகொண்டார்.

“மொழியின்வழி உறவுகளை உருவாக்கும் திறனை இன்றுவரை நாள்தோறும் நான் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறேன்,” என்றார் பிரெமிக்கா.

சமூகப் பொறுப்புணர்வின் வளர்ச்சி

‘வில்லியம் கிராண்ட் அண்ட் சன்ஸ்’ நிறுவனத்தின் ஆசிய பசிஃபிக் வட்டார வணிகவள மேலாளரான 34 வயது ஜெயசுதா சமுத்திரன், பலராலும் அறியப்பட்ட தொலைக்காட்சிக் கலைஞராகவும் நெறியாளராகவும் விளங்குகிறார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னர், ‘ஏ’ நிலைத் தேர்வுக்குப் பிறகு தமிழ் முரசில் ஏழு மாதச் செய்தியாளர் வேலைப்பயிற்சியுடன் அவரது தொழில்துறைப் பயணம் தொடங்கியது.

‘வில்லியம் கிராண்ட் அண்ட் சன்ஸ்’ நிறுவனத்தின் ஆசிய பசிஃபிக் வட்டார வணிகவள மேலாளர் ஜெயசுதா சமுத்திரன், 34.
‘வில்லியம் கிராண்ட் அண்ட் சன்ஸ்’ நிறுவனத்தின் ஆசிய பசிஃபிக் வட்டார வணிகவள மேலாளர் ஜெயசுதா சமுத்திரன், 34. - படம்: இணையம்

வேலைப்பயிற்சியைத் தொடர்ந்து, அவர் அரசாங்கத்திலும் விளம்பரத் துறைகளிலும் பணியாற்றினார். இருப்பினும், தமிழ் முரசில் பெற்ற அனுபவம், சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதற்கான ஆழமான உணர்வைத் தம்மிடம் உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

“தற்போதைய வேலையில் தமிழை நேரடியாகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், அந்தப் பயிற்சிக்காலம் என்னுள் ஓர் ஆழமான சமூகப் பொறுப்புணர்வை விதைத்தது,” என்றார் ஜெயசுதா.

அவர் அதை இன்றும் வாழ்வில் கடைப்பிடிக்கிறார். தமிழ் பேசும் பாலர்களுக்கான தன்னார்வக் கதைசொல்லல் திட்டத்தைத் தலைமையேற்றுச் செயல்படுத்தி வருகிறார்.

நிறவெறியை எதிர்கொள்ளும் தமிழ்க் குழந்தைகள் தொடர்பான புத்தகம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். “எனது பண்பாட்டு நுண்ணுணர்வுக்கு வடிவம் கொடுத்தது தமிழ் முரசுதான்,” என்றார் அவர்.

தான் எழுதிய ‘கறுப்பும் சிவப்பும் அழகோ அழகு’ என்ற புத்தகத்தைத் தன் மகனிடம் வாசித்துக் காட்டுகிறார் ஜெயசுதா.
தான் எழுதிய ‘கறுப்பும் சிவப்பும் அழகோ அழகு’ என்ற புத்தகத்தைத் தன் மகனிடம் வாசித்துக் காட்டுகிறார் ஜெயசுதா. - படம்: ஜெயசுதா சமுத்திரன்

“வெறும் 19 வயதில், முக்கியமான நிகழ்வுகளைப் பற்றி எழுத அனுப்பப்பட்டபோது, ‘என்னாலும் பெரிய பொறுப்புகளைச் சுமக்க முடியும்’ என்ற உணர்வு எனக்குள் எழுந்தது. என்மீது வைத்த நம்பிக்கையும் வழங்கப்பட்ட சுதந்திரமும் எனது வளர்ச்சிக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது,” என்றார் இவர்.

தமிழ் முரசில் அவர் எழுதிய கட்டுரைகள், அடையாளம், மொழி, இளையர்களின் பிரச்சினைகள் முதலியவற்றை ஆராய உதவின.

2009ஆம் ஆண்டு தமிழ் முரசு நாளிதழின் பழைய அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றிய ஹேமாவுடன் ஜெயசுதா (இடது).
2009ஆம் ஆண்டு தமிழ் முரசு நாளிதழின் பழைய அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றிய ஹேமாவுடன் ஜெயசுதா (இடது). - படம்: ஜெயசுதா சமுத்திரன்

“இக்காலத்தில் நாம் போதுமான அளவு எழுதுவதில்லை. தமிழ் முரசில் என் எண்ணங்களைக் கூர்மையான, தாக்கமுள்ள எழுத்தாக மாற்றக் கற்றுகொண்டேன். அந்தத் திறன்களை நான் இன்றும் பயன்படுத்துகிறேன்,” என்று ஜெயசுதா கூறினார்.

ஆராய்ச்சியாளருக்கான அடித்தளம்

தமது 18 வயதில் தமிழ் முரசு செய்தியறையில் ஒரு மாத வேலைப்பயிற்சிக்காக சேர்ந்தார் காளிச்சரண் வீரசிங்கம். அதனைத் தொடர்ந்து 2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுவரை அவர் மேலும் இருமுறை வேலைப்பயிற்சிக்கு திரும்பினார்.

“அந்தக் காலத்தில் பத்திரிகையாளராக வேண்டும் என விரும்பினேன். அந்தக் கனவிற்கான எதார்த்த உலகை தமிழ் முரசுதான் முதலில் காட்டியது,” என்று 35 வயது காளிச்சரண் நினைவுகூர்ந்தார்.

எஸ் ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுக் கழகப் பள்ளியின் அரசியல் வன்முறை, பயங்கரவாத ஆராய்ச்சிக்கான அனைத்துலக நிலையத்தில் மூத்த பகுப்பாய்வாளராகப் பணிபுரிகிறார் காளிச்சரண் வீரசிங்கம்.
எஸ் ராஜரத்னம் அனைத்துலக ஆய்வுக் கழகப் பள்ளியின் அரசியல் வன்முறை, பயங்கரவாத ஆராய்ச்சிக்கான அனைத்துலக நிலையத்தில் மூத்த பகுப்பாய்வாளராகப் பணிபுரிகிறார் காளிச்சரண் வீரசிங்கம். - படம்: சாவ்பாவ்

இறுதியில், சமூக அறிவியல் படித்து, கல்வி, கொள்கை ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டிருந்தாலும் தமிழ் முரசில் கற்றது இன்றும் தமது பணியில் எதிரொலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அரசியல் வன்முறை, பயங்கரவாதம் குறித்து ஆராயும் ஒரு மூத்த பகுப்பாய்வாளரான காளிச்சரண், தொடர்ந்து மக்களை நேர்கண்டு, தரவுகளை ஆராய்ந்து, நுண்ணறிவுக் கட்டுரைகளாகத் தொகுத்து வருகிறார்.

“நேர்காணல் செய்து, தகவல்களைச் சேகரித்து, அனைத்தையும் வாசகர்களை ஈர்க்கும் ஒரு கட்டுரையாக தெளிவாக தொகுப்பது, மேற்பார்வையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது போன்ற திறன்களை தமிழ் முரசில்தான் முதலில் வளர்த்துகொண்டேன்,” என்றார் இவர்.

மேலும், “முறையான தமிழிலும் செய்திநடையிலும் எழுதக் கற்றுக்கொண்டேன். அந்த அனுபவம் என் மொழியாற்றலை வளர்த்தது. அதனால்தான் இப்போது தமிழ் செய்திகளையும் உரைகளையும் என்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது,” என்றும் இவர் சொன்னார்.

இளந்தலைமுறையினரை பள்ளிக்குப் பிறகும் தமிழுடன் இணைக்கும் பண்பாட்டுப் பாலமாகத் தமிழ் முரசு தொடர்ந்து நிலைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரம், கலை, செய்தி

தொடக்கக் கல்லூரி முடித்து தேசிய சேவைக்காக காத்திருந்த காலத்தில் தமிழ் முரசில் ஆறு மாத வேலைப்பயிற்சியில் சேர்ந்தார் சரவணன் சண்முகம், 30.

“செய்தியாளர் பணி என்பது ஒரு தனியாளாகச் செய்யக்கூடிய ஒன்று. உங்கள் குரலும் சொற்களும் சொல்லத்தக்க ஒரு கதையும் இருந்தால் போதும்,” என்கிறார் சரவணன்.

தற்போது பலதுறை மருந்தகத்தில் குடும்ப மருத்துவராகப் பணிபுரிகிறார் டாக்டர் சரவணன் சண்முகம்.
தற்போது பலதுறை மருந்தகத்தில் குடும்ப மருத்துவராகப் பணிபுரிகிறார் டாக்டர் சரவணன் சண்முகம். - படம்: சரவணன் சண்முகம்

உள்ளூர்க் கலைகள், இளையர் நிகழ்ச்சிகள், குறிப்பாக நாடகங்களைப் பற்றி அவர் செய்திகள் எழுதினார். இது அவரது செய்தியாளர் திறன்களை வளர்த்ததுடன், தமிழ்க் கலை உலகிற்கு ஒரு புதிய கதவைத் திறந்தது.

“தமிழ் முரசில்தான் முதன்முறையாக, சிங்கப்பூரில் இத்தனை நாடகக் குழுக்கள் உள்ளன என்பதை உணர்ந்தேன். அந்த அனுபவம் இன்றுவரை என் நடிப்பு, எழுத்துப் பயணத்திற்குத் தன்னம்பிக்கையை விதைத்துள்ளது,” என்றார் டாக்டர் சரவணன்.

ஜென்டிங் லேனில் செயல்பட்ட தமிழ் முரசு அலுவலகத்தில் கற்றல் பயணத்திற்காக வந்திருந்த மாணவர்களுடன் உரையாடும் சரவணன்.
ஜென்டிங் லேனில் செயல்பட்ட தமிழ் முரசு அலுவலகத்தில் கற்றல் பயணத்திற்காக வந்திருந்த மாணவர்களுடன் உரையாடும் சரவணன். - படம்: தமிழ் முரசு

இன்று பலதுறை மருந்தகத்தில் குடும்ப மருத்துவராகவும், சிங்கப்பூரில் பகுதிநேரக் கலைஞராகவும் பணியாற்றும் அவர், தமது செய்தியறை நாள்களுக்கும் தற்போதைய மருத்துவப் பயிற்சிக்கும் இடையே பல்வேறு தொடர்புகளைக் காண்கிறார்.

“தமிழ் முரசில், குறுகிய இடத்தில் முக்கிய செய்திகளைத் தெளிவாக, சுருக்கமாக, உண்மையுடன் தெரிவிக்கக் கற்றுக்கொண்டேன். இன்று, நோயாளிகளுடன் பேசும்போது அதே விதத்தில் அவர்களுடன் உரையாடுகிறேன். நேரம் குறைவாக இருந்தாலும், சிக்கலான தகவல்களைத் சரியாகவும் ஆதாரபூர்வமாகவும் சொல்ல வேண்டிய தேவையுள்ளது,” என்றார் அவர்.

தமிழ் முரசு சமூகத்திற்கு சேவை செய்வதோடு மட்டுமன்று, அதன் உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது இம்மருத்துவரின் உறுதியான எண்ணம்.

தரவுக்குள் மனிதக் கதை

தற்போது 31 வயதான சாந்தினி மனோகரன், மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய தொடர் விநியோக துறையில் தானியங்கி முறைகள், தரவு அமைப்புகள், கருவிகள் குறித்த பணிகளைப் பன்னாட்டுச் சந்தைகளில் நிர்வகிக்கிறார்.

தற்போது உலகளாவிய தொடர் விநியோகத் துறையில்  பணியாற்றிவரும் சாந்தினி.
தற்போது உலகளாவிய தொடர் விநியோகத் துறையில் பணியாற்றிவரும் சாந்தினி. - படம்: சாந்தினி மனோகரன்

இருப்பினும், தமது வளர்ச்சியில் மிக முக்கியமான சில அனுபவங்களை 2013ல் தமிழ் முரசில் மேற்கொண்ட வேலைப்பயிற்சிக் காலத்தில் கிடைத்ததாக இவர் குறிப்பிட்டார்.

தமிழ்ப்பற்று காரணமாக தமிழ் முரசில் சேர்ந்த இவர், பின்னர் பொறியியல் படித்தாலும், தமிழ் தனது அடையாளத்தின் முக்கியப் பகுதியாக இருந்து வருவதாக சொன்னார்.

வேலைப்பயிற்சி காலத்தின்போது இளைய விளையாட்டாளர்களை நேர்கண்டது உட்பட பல்வேறு செய்திகளை இவர் எழுதியுள்ளார்.

தரவுகள், எண்களுக்கு அப்பாற்பட்ட பார்வையை தமிழ் முரசே தமக்குக் கற்றுக் கொடுத்ததாக சாந்தினி கூறினார்.

“இன்று மிகவும் மின்னிலக்கமயமாக்கப்பட்ட, தரவு சார்ந்திருக்கும் என் பணியில்கூட, எண்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் மனிதக் கதைகளை வெளிக்கொணர்வதில் நான் கவனம் செலுத்துகிறேன். தமிழ் முரசு, செய்திகளை எளிமையாகவும் பலதரபட்ட மக்களை அர்த்தமுள்ள விதத்தில் தொடர்புகொள்ளவும் எனக்கு உதவியது,” என்றார் இவர்.

வேலைப்பயிற்சியில் விழித்த வேலைநெறி

பல்கலைக்கழகத்தில் கணினிப் பயன்பாடு, சட்டத் துறைப் பட்டப்படிப்பில் நான்காம் ஆண்டு பயின்றுவரும் 22 வயது ஹர்ஷிதா பாலாஜி, தமிழ் முரசுடன் ஏற்பட்ட ஒரு தற்செயல் தொடர்பின்மூலம் பத்திரிகையாளராக தனது ஆர்வத்தைக் கண்டறிந்தார்.

கடந்த 2022 பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை ஐந்தரை மாதங்களுக்கு அங்கு வேலைப்பயிற்சி பெற்ற அவர், முதலில் மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டார். பின்னர் மனிதநேயம் , விசாரணை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளையொட்டி கட்டுரைகள் எழுத தொடங்கினார்.

பல்கலைக்கழக மாணவியான ஹர்ஷிதா பாலாஜி, 22
பல்கலைக்கழக மாணவியான ஹர்ஷிதா பாலாஜி, 22 - படம்: தமிழ் முரசு

ஒரு முறை உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்குச் செய்தியாளர் அடிப்படைகளைக் கற்பித்த அனுபவம், தொழில்முறை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உணர வைத்ததெனவும் இவர் பகிர்ந்துகொண்டார்.

வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கும் சரக்கு நிறுவனங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த கூட்டு விசாரணைச் செய்தி, அவரது நினைவில் நீங்காத இடத்தைப் பிடித்ததாக ஹர்‌ஷிதா கூறினார். அந்தக் கட்டுரை பிறகு செய்தி விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டது.

தமிழ் முரசு முன்னாள் செய்தியாளர் மோனலிசாவுடன் (வலமிருந்து 2வது) இணைந்து எழுதிய கூட்டு விசாரணை தொடர்பான செய்திக்காக எஸ்பிஎச் மீடியா வருடாந்தர விருதுகளில் சிறப்பு விருதை வென்றார் ஹர்ஷிதா.
தமிழ் முரசு முன்னாள் செய்தியாளர் மோனலிசாவுடன் (வலமிருந்து 2வது) இணைந்து எழுதிய கூட்டு விசாரணை தொடர்பான செய்திக்காக எஸ்பிஎச் மீடியா வருடாந்தர விருதுகளில் சிறப்பு விருதை வென்றார் ஹர்ஷிதா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“எப்படி குறைந்த நேரத்தில் சீராக எழுதுவது, நுணுக்கமாகத் தொடர்புகொள்வது, பல்வேறு சவால்களைச் சமாளிப்பது என்பதை இந்த வேலைப்பயிற்சி எனக்குக் கற்பித்தது,” என்றார் அவர்.

தன்னுடைய இரட்டைப் பட்டப்படிப்பு சவால்களைச் சமாளிக்கத் தேவையான மனவலிமையும் தன்மேலாண்மைத் திறனையும் தமிழ் முரசின் வேகமான வேலைச்சூழல் வளர்த்ததாக இவர் குறிப்பிட்டார்.

தொழில்திறன்களுக்கு அப்பால், தமிழ் முரசு வழங்கிய சமூக உணர்வுக்கும் உறுதியான வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்த ஹர்ஷிதா, அந்த அனுபவம் தனது வேலைநெறிகளை வடிவமைத்த முக்கியத் தொடக்கப்புள்ளியாகக் கருதுகிறார்.

குறிப்புச் சொற்கள்