செட்டியார்கள் கோயில் குழுமம் ஏற்பாடு செய்த 27வது ஆண்டிறுதி மெதுநடை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) தேங் ரோட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
ஆரோக்கியமான வாழ்வியலை ஊக்குவிக்கவும் சமூகப் பிணைப்பை வலுப்படுத்தவும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதுடைய ஏறத்தாழ 500 பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
வெஸ்ட் கோஸ்ட் – ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மெதுநடை ஓட்டத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததுடன் பங்கேற்பாளர்களுடன் இணைந்து நடந்தார்.
“கோயில்களும் வழிபாட்டுத் தலங்களும் வெறும் சமயச் சடங்குகளுக்கான இடமாக மட்டும் இல்லாமல், குடும்பங்கள் கூடும் தளமாகவும் சமூகத்தை ஒன்றிணைக்கும் சக்தியாகவும் திகழ வேண்டும். பிள்ளைகள் மகிழ்ச்சியாக ஓடி விளையாடும் சூழல் அங்கு நிலவ வேண்டும்,” என்று நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஹமீது வலியுறுத்தினார்.
உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், “உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனத்திற்கு அமைதியும் தெளிவும் கிடைக்கும். வழிபாட்டிற்கும் உடல்நலத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. ஆண்டில் ஒரு நாள் மட்டும் நடக்காமல், வாரத்திற்கு மூன்று நாள்கள், தினமும் 30 நிமிடங்கள் குடும்பத்துடன் உடற்பயிற்சி செய்யுங்கள்,” என அவர் கேட்டுக்கொண்டார்.
மூட்டுவலி உள்ளவர்கள் தரைக்குப் பதிலாக நீச்சல் குளத்தில் நீரில் இறங்கி நடப்பது அல்லது ‘எலிப்டிகல்’ (Elliptical) இயந்திரங்களைப் பயன்படுத்துவது போன்ற குறைந்த பாதிப்புடைய பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.
27 ஆண்டுகாலச் சமூக சேவைப் பாரம்பரியம்
கோயிலின் சமூக அறப்பணிகள் குறித்துப் பேசிய செட்டியார்கள் கோயில் குழுமத் தலைவர் மாணிக்கம் நாச்சியப்பன், 2000 முதல் தொடர்ந்து 27 ஆண்டுகளாக மெதுநடை ஓட்டம் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் தொடர்பில் ஆண்டுதோறும் பயனாளிகளுக்குச் சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இவ்வாண்டு நான்கு பேருக்கு இலவசமாக மோட்டார் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
“ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பதுடன், உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகளை வழங்கி அவர்களுக்குச் சுயசார்பையும் நம்பிக்கையையும் அளிப்பதே இந்நிகழ்ச்சியின் முதன்மை நோக்கம். ஒரு சமூகம் அனைவரையும் உள்ளடக்கி ஒன்றாக முன்னேறும்போதே உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும்,” என்று திரு மாணிக்கம் குறிப்பிட்டார்.
29 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட கால் எலும்பு முறிவுக்குப் பிறகு சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வருகிறார் திருவாட்டி முனியாண்டி தனலட்சுமி, 63.
“தனியார் சந்தையில் அல்லது மருத்துவமனைகளில் மோட்டார் சக்கர நாற்காலி வாங்க $4,000 வரை செலவாகும். கோயில் நிர்வாகம் இதை முற்றிலும் இலவசமாகக் கொடுத்துள்ளது,” என்றார் அவர்.
கோயிலுக்கு வழக்கமாகச் சென்றபோது நிர்வாகத்தினர் கூறியதன் பேரில் விண்ணப்பித்து சக்கர நாற்காலியைப் பெற்றுக்கொண்டதாகக் கூறிய அவர், “மருத்துவமனைப் பரிசோதனைகளுக்கும் சந்தைக்கும் அன்றாடத் தேவைகளுக்கும் தனியாகச் சென்றுவர இது எனக்குப் பெரிதும் உதவுகிறது,” என்று புன்னகையுடன் தெரிவித்தார்.
மற்றொரு பயனாளியான முன்னாள் லாரி ஓட்டுநர் இஸ்மாயில் பின் யூசோப், 60, ஏழு ஆண்டுகளுக்கு முன் சாங்கி விமான நிலையச் சரக்குத் தளத்தில் நேர்ந்த வேலைத்தள விபத்தால் நடக்கும் திறனை இழந்தவர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் கோயிலில் பெற்ற மோட்டார் சக்கர நாற்காலியின் மின்கலன் பழுதானதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கையால் இயக்கப்படும் நாற்காலியைப் பயன்படுத்தி வந்தார்.
“என் வீட்டின் அருகே மேடான பாதைகள் இருப்பதால் கையால் சக்கர நாற்காலியைத் தள்ளிச் செல்வது மிகவும் கடினமாக இருந்தது. கோயில் ஊழியர்கள் என் இல்லத்திற்கே வந்து புதிய மின்கலன் கொண்ட நாற்காலியை வழங்கியது பெரும் நிம்மதியைத் தருகிறது,” என்று திரு இஸ்மாயில் கூறினார்.
இதன் மூலம் தாமே சுதந்திரமாக வெளிச்சென்று உணவு வாங்க முடிவதாகவும், பணத்தைச் சேமிக்க முடிவதாகவும் அவர் நன்றி தெரிவித்தார்.
அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும் சமூக அறப்பணிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் செட்டியார்கள் கோயில் குழுமத்தின் 27ஆவது மெதுநடை ஓட்ட நிகழ்ச்சி அமைந்தது.
