‘ஏஐ’ உதவியுடன் சங்க இலக்கியங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் இசையார்வலர்

‘ஏஐ’ உதவியுடன் சங்க இலக்கியங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் இசையார்வலர்

படம்: த.கவி

05 Nov 2026 - 5:30 am

3 mins read

தொழில்நுட்பமும் கலையும் இணையும் புள்ளியில், மனித ஆற்றலுக்கும் செயற்கை நுண்ணறிவிற்கும் (ஏஐ) இடையே ஒரு புதிய பாலம் உருவாகிறது. அன்றாடப் பணிச்சூழலுக்கு மத்தியிலும், நாளும் ஒரு பாடல் அல்லது கவிதை எழுதுவதை இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறார் இசைப்பாடல் இயற்றிவரும் திரு பி.மதியழகன்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழ்க் கவிதைகளுக்கும் சங்க இலக்கியம் சார்ந்த பாடல்களுக்கும் இசையமைத்து, காணொளிகளாகச் சமூக ஊடகங்களில் பதிவிடும் தமது அனுபவங்களைத் தமிழ் முரசின் ‘என்ன செய்யும் ஏஐ?’ வலையொளித் தொடருக்கான நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்டார்.

இசைப் பயணத்தின் தொடக்கம்

தொடக்கத்தில் ஃபேஸ்புக்கில் கவிதைகள் எழுதியபோது, 30 முதல் 40 நண்பர்கள் மட்டுமே விருப்பக்குறிகளிட்டுக் (Likes) கருத்துரைத்ததாகக் கூறும் திரு மதியழகன், அதே கவிதைகளைப் பாடலாகப் பாடிப் பதிவிட்டபோது பரவலான வரவேற்பு கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பரவலாக அறியப்படுவதற்கு முன்பே, தப்லா, வீணை போன்ற கருவிகளின் இசைக்கான தனித்தனிச் செயலி ஒலிகளை வெட்டி ஒட்டி, தம் மெட்டுகளுக்குப் பின்னணி இசையாகச் சேர்த்ததாக அவர் கூறினார். பின்னர் ‘ஸ்மியூல்’ (Smule) செயலி மூலமாக முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி. மகாதேவன் போன்றோரின் பின்னணி இசையைப் பயன்படுத்தி, தாம் எழுதிய தமிழ் வரிகளைப் பாடி அவர் வெளியிட்டார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ‘சுனோ ஏஐ’ (Suno AI) செயலியைப் பயன்படுத்தி, ஆய்வு செய்து வரும் இவர், இதுவரை ஏறத்தாழ 6,800 முறைகளுக்குமேல் பாடல் மெட்டுகளை உருவாக்க முயன்றுள்ளார். அதில் சிறந்த 500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவுசெய்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

சவால்களும் நுட்பங்களும்

‘ஏஐ’யைப் பயன்படுத்தும்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகத் திரு மதியழகன் கூறுகிறார். தொடக்கக் கட்டத்தில் ‘மௌனம்’ என்பதற்கு ‘மெலனம்’ என்றும் ‘ஔவையார்’ என்பதற்கு ‘ஒலவையார்’ என்றும் பிழையான உச்சரிப்புகள் கிடைத்தன. விடாமுயற்சியுடன் அதற்கான 'புரோம்ப்ட்’ஐச் (Prompt) சரியாக எழுதி, பிழைகளைத் தவிர்த்ததுடன், தமிழ்க் கலாசாரத்திற்கு ஏற்ப ஆண், பெண் குரல்களைத் தேர்வு செய்யத் தொடங்கியதாக அவர் சொன்னார்.

“செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு கருவி மட்டுமே. நமது உள்ளீடு சரியாக இருந்தால் மட்டுமே தரமான படைப்பு கிடைக்கும். ஒரே பாடலுக்கு எதிர்பார்த்த உணர்வும் மெட்டும் கிடைக்க 60முறை வரை முயன்ற அனுபவமும் உண்டு,” என்றார் திரு மதியழகன்.

மேலும், "இந்தத் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய நன்மை அது ஒருமுறை உருவாக்கிய மெட்டை மீண்டும் உருவாக்காது; நாம் எழுத்துப் பிழைகளைத் திருத்தும்போது மெட்டு மாறக்கூடும் என்பதால், புதிய மெட்டுகளையே தேர்வு செய்ய வேண்டியிருக்கும். அதேபோல், சுருதி சுத்தமில்லாமல் சாதாரணமாக முணுமுணுக்கும் குரலைக்கூட ‘ஏஐ’ மூலம் இனிமையாக மாற்றி அமைக்க முடியும்,” என்றும் அவர் விளக்கினார்.

சங்க இலக்கியத்திற்கு இசையும் காணொளியும்

சினிமா பாணியிலான பாடல்களைத் தாண்டி, சங்க இலக்கியங்களை எளிய முறையில் மக்களிடம் கொண்டுசேர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளார் திரு மதியழகன்.

கபிலரின் 99 பூக்கள் அடங்கிய பாடலில் தொடங்கி, முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கப் புலவர்களின் சிறப்புகள், சிலப்பதிகாரத்தில் கோவலன்-மாதவி காதல் வாழ்க்கை, மணிமேகலை, குறுந்தொகை, பட்டினப்பாலை எனப் பல இலக்கியப் படைப்புகளை எளிமையான பாடல்களாக உருமாற்றியுள்ளார்.

சங்ககால மனிதர்களின் உடைகள், அணிகலன்கள், நெய்தல் நில வாழ்க்கைச் சூழல்களைத் தம் கற்பனைக்கேற்ப ‘ஏஐ’ உதவியுடன் காட்சிப்படுத்தி, காணொளிகளாகப் பதிவிடுகிறார்.

“பாடல்களின் முழுமையான கருத்தை உள்வாங்கி, அதில் உள்ள முக்கிய வரிகளை மையமாகக் கொண்டு, எளிய வடிவில் பாடல் வரிகளை அமைத்துத் தருகிறேன். இது பழைய காலத்திற்கே அழைத்துச் சென்ற உணர்வைத் தருவதாக மூத்தவர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

பன்னாட்டு இசைக் கருவிகளின் சங்கமம்

சிங்கப்பூரின் பன்முகப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், இந்திய, மேற்கத்திய இசைக்கருவிகள் மட்டுமன்றி அரேபிய, எகிப்திய, மலாய்ப் பாரம்பரிய இசைக்கருவிகளின் ஒலிகளையும் ‘ஏஐ’ மூலம் தம் பாடல்களில் அவர் பயன்படுத்தியுள்ளார்.

சீன இசைக்கருவிகளையும் பரிசோதனை முறையில் பயன்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

எவ்விதக் கட்டணமும் பெறாமல், தமிழுக்கான சேவையாகவே இப்பணியை மேற்கொண்டு வரும் திரு மதியழகன், முத்தமிழில் இசைத்தமிழைத் தொழில்நுட்பத்துடன் இணைப்பது இளைய தலைமுறையினரைத் தமிழ் இலக்கியங்களை நோக்கி ஈர்க்கும் என்ற நம்பிக்கையுடன் தம் பயணத்தைத் தொடர்வதாகக் கூறினார். முத்தாய்ப்பாக, நேர்காணலின்போது தரப்பட்ட கவிதைக்கு ‘ஏஐ’ உதவியுடன் அவர் இசையமைத்தும் காட்டினார்.

குறிப்புச் சொற்கள்