தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் வரலாற்றைத் தமிழில் பதிவுசெய்த நூல் வெளியீடு

3 mins read
5a0f9d33-34d5-4572-8ff9-e8d6c785a0a7
நூல் வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் சு.முத்துமாணிக்கம், முனைவர் அ.வீரமணி, முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன், ‘வாமனத் தீவு’ நூலாசிரியர் நா.ஆண்டியப்பன், முனைவர் சுப.திண்ணப்பன், முனைவர் சித்ரா சங்கரன். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூரின் விரிவான வரலாற்றைத் தமிழ்மொழியில் தொகுத்து வழங்கும் ‘வாமனத் தீவு’ நூல் செப்டம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேசிய நூலகத்தில் வெளியீடு கண்டது.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.

சிங்கப்பூருக்கு எந்தவிதமான இயற்கை வளமும் இல்லாத நிலையில், இந்த நாடு இன்று உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுக்கும் என்று யாராலும் எதிர்பார்த்திருக்க முடியாது என்ற திரு தினகரன், அதைச் சாத்தியமாக்கியவர் நமது தேசத்தந்தையான அமரர் லீ குவான் யூ என்றும் சொன்னார்.

முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

“அப்பேற்பட்டவருக்குத்தான் இந்த நூலை அர்ப்பணித்திருக்கிறார்கள். அது பாராட்டப்பட வேண்டிய ஒன்று,” என்றார் திரு தினகரன்.

கிட்டத்தட்ட 600 பக்கங்களும் 400க்கும் மேற்பட்ட புகைப்படங்களும் அடங்கிய இந்நூல், ராஜேந்திர சோழனின் படையெடுப்பு முதல் லீ குவான் யூ தலைமையிலான நவீன மாற்றம் வரை, கி.பி. 3ஆம் நூற்றாண்டிலிருந்து 2024 வரையிலான சிங்கப்பூரின் பயணத்தைப் பற்றிய பல அரிய தகவல்களை ஆவணப்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், நூலில் இடம்பெற்றுள்ள அரிய வரலாற்றுத் தகவல்களும் புகைப்படங்களும் இணைந்து ஒரு கண்கவர் படவில்லை காட்சியாக திரையிடப்பட்டது.

நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட படவில்லைக் காட்சி.
நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட படவில்லைக் காட்சி. - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

இந்நிகழ்ச்சியில், பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன், பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன், பேராசிரியர் முனைவர் அ.வீரமணி ஆகியோரும் பங்கேற்று நூலைப் பற்றியும் நூலாசிரியர் பற்றியும் உரையாற்றினர்.

‘வாமனத் தீவு’ நூலாசிரியரும் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் திரு நா.ஆண்டியப்பன், அதை எழுதுவதற்கான விதை 2016ஆம் ஆண்டிலேயே தம் மனத்தில் பதிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

“அந்த ஆண்டுதான் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் முதன்முறையாக சென்னை புத்தகக் காட்சியில் பங்கேற்றது. புத்தகம் வாங்க சிங்கப்பூர் கூடத்திற்கு வந்த பெரும்பாலோர் கேட்ட கேள்வி என்னவென்றால், ‘சிங்கப்பூர் பற்றிய நூல் இருக்கிறதா?’ அல்லது ‘லீ குவான் யூ பற்றிய நூல் இருக்கிறதா?’ என்பதுதான். அப்பொழுது எங்கள் கைவசம் அந்த நூல்கள் இல்லை,” என்றார் திரு ஆண்டியப்பன்.

அன்றே சிங்கப்பூர் வரலாற்றைப் பதிவுசெய்யும் நூலை எழுத வேண்டும் என்று முடிவு செய்து, தரவுகளைத் திரட்டத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

‘வாமனத் தீவு’ நூலாசிரியரும் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் திரு நா.ஆண்டியப்பன்.
‘வாமனத் தீவு’ நூலாசிரியரும் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவரும் திரு நா.ஆண்டியப்பன். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

இதுவரை ஏழு நூல்களை எழுதியுள்ள திரு ஆண்டியப்பன், 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தியாளர் அனுபவம் கொண்டவர். அந்த அனுபவம்தான் இந்த முயற்சிக்குத் துணை நின்றதாக அவர் குறிப்பிட்டார்.

நூலில் 400க்கும் மேற்பட்ட படங்களைத் தொகுப்பது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், புகைப்படங்கள் சிலவற்றைப் பெற அரசாங்கத் துறைகளின் கதவுகளைத் தட்ட வேண்டியிருந்ததாகக் கூறினார். மேலும், ஆவண காப்பகப் படங்களுக்கு காப்புரிமையும் அனுமதியும் தேவைப்பட்டதால், சில இடங்களுக்குத் தாமே சென்று படங்களையும் அவர் எடுத்தார்.

சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வெளியீடு கண்டுள்ள இந்நூல் 60 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. மேலும், அதன் வெளியீட்டு நாளான செப்டம்பர் 14ஆம் தேதி, சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் பிறந்தநாளான செப்டம்பர் 16ஆம் தேதியை முன்னிட்டு அவருக்கான காணிக்கையாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும் திரு ஆண்டியப்பன் குறிப்பிட்டார்.

“இது சிங்கப்பூரின் முழுமையான வரலாறு அல்ல, சுருக்கமான கண்ணோட்டம்தான். இருப்பினும், தேக்கா, சிங்கப்பூர்த் தமிழர்கள், முன்னோடிகள் போன்ற கருப்பொருள்களுடன் தனித்தனி நூல்கள் முன்னரே வந்துள்ள நிலையில், அனைத்தையும் ஒருங்கிணைத்துத் தமிழில் வெளிவரும் முதல் நூல் இதுவே,” என்று அவர் சொன்னார்.

‘வாமனத் தீவு’ நூல்.
‘வாமனத் தீவு’ நூல். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

‘வாமனத் தீவு’ நூலை மின்னூலாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

“குறிப்பாக, ஆசிரியர்களும் மாணவர்களும் கண்டிப்பாக இந்த நூலை வாசிக்க வேண்டும்,” என்று திரு ஆண்டியப்பன் கேட்டுகொண்டார்.

அடுத்த மாதம் அக்டோபர் 12ஆம் தேதி நூலை மையமாகக் கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி தேசிய நூலகத்தில் நடைபெறவுள்ளது. அதுபற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்