சிங்கப்பூர்த் தம்பதியைத் தாய்மண்ணோடு இணைத்த ஸ்கூட் நிறுவனத்தின் ‘லெட்ஸ் கோ ஹோம்’

சிங்கப்பூர்த் தம்பதியைத் தாய்மண்ணோடு இணைத்த ஸ்கூட் நிறுவனத்தின் ‘லெட்ஸ் கோ ஹோம்’

மனநிறைவு அளித்த மதுரைப் பயணம்
1 of 2
படம்: த.கவி
படம்: த.கவி

31 Oct 2026 - 8:30 am

10 mins read

மூன்று ஆண்டுகளில் அடுத்தடுத்து நேரிட்ட இரண்டு மரணங்கள், சிங்கப்பூரைச் சேர்ந்த அந்தத் தம்பதியரின் மனங்களில் ஆற்றொணாத் துயரை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில், ஸ்கூட் நிறுவனத்தின் ‘லெட்ஸ் கோ ஹோம்’ பிரசாரம், அவர்களை மீண்டும் மதுரை மண்ணிற்கு அழைத்துச் சென்றது.

சகோதரிகளின் மகிழ்ச்சியான மறுசந்திப்பு, வீட்டுச் சாப்பாடு, குலதெய்வக் கோயில் வழிபாடு, கடைவீதி உலா, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைச் சுற்றிப்பார்த்தல் என, 2026 அக்டோபர் 6 முதல் 9ஆம் தேதி வரை அவர்கள் மதுரையில் கழித்த நாட்கள் இனிமையாய் அமைந்தன.

வசந்தியும் அவரது மூத்த சகோதரியின் மகள் ஸ்வேதாவும் பள்ளி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
வசந்தியும் அவரது மூத்த சகோதரியின் மகள் ஸ்வேதாவும் பள்ளி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். - படம்: த.கவி

துயர் துடைத்த மறுசந்திப்பு

சகோதரிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்த மாத்திரத்திலேயே கண்கள் குளமாயின.

எஸ். வசந்தி, தனது மூத்த சகோதரியுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அன்றாட வாட்ஸ்அப் அழைப்புகள், குறுஞ்செய்திகள் வழியாகப் பேசி வந்துள்ளார். எனினும், வீட்டு வாசலில் நின்றபடி கட்டித்தழுவிக் கொண்ட தருணத்தின் நெகிழ்ச்சிக்கு அவை ஈடாகா.

“ஒருவருடன் நேரில் பேசி மகிழ்வதும் அவரை அணைத்துக்கொள்வதும் தரும் உணர்வை ஒருபோதும் காணொளி அழைப்புகளால் ஈடுசெய்ய முடியாது,” என்றார் வசந்தி.

இதை அவரது கணவர் ஏ. ஜெயசங்கர் முன்னரே எதிர்பார்த்திருந்தார். “தினமும் பேசிக்கொள்கிறார்கள்; ஆனாலும் நேரில் சந்திக்கும்போது கண்ணீரும் உணர்ச்சிப் பெருக்குமாகத்தான் இருக்கும்,” என்று அவரது மூத்த மைத்துனி எஸ். வாசுகியின் வீட்டை நெருங்கியபோது அவர் குறிப்பிட்டார்.

வசந்தியின் சொந்த ஊரான மதுரைக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் அவர்கள் மேற்கொண்ட முதல் சோகமற்ற பயணம் இதுவாகும்.

இரு இறுதிச்சடங்குகள்; தீராத ஏக்கம்

இரண்டாம் தலைமுறை சிங்கப்பூரரான ஜெயசங்கர், முன்பு ஆண்டுதோறும் தன் மனைவியுடன் மதுரைக்குச் செல்வது வழக்கம்.

ஆனால், ராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அந்த வழக்கம் மாறியது. நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் அவர் மட்டுமே வருவாய் ஈட்டுபவராக இருந்ததால், திருமணம் அல்லது இறுதிச்சடங்குகளுக்காக மட்டுமே அவரால் சொந்த ஊருக்குச் செல்ல முடிந்தது.

2023 முதல், அவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு பயணமும் அவசரப் பயணமாகவே அமைந்தது. 2023ல், வசந்தியின் தாயார் உடல்நலம் குன்றியிருந்தபோது தம்பதியர் அவரைப் பார்க்க விரைந்தனர்; ஆனால் சில நாள்களிலேயே தாயார் காலமானார். பின்னர் 2025ல், ஜெயசங்கரின் மருமகன் உயிரிழந்தார்.

இரு பயணங்களுமே மிகக் குறுகியவை; மிகுந்த வேதனை தருவதாக அமைந்தன. இரண்டு முறையுமே வேலைக் காரணங்களால் இறுதிச்சடங்குகள் முழுமையாக முடிவதற்கு முன்பே அவர் புறப்பட வேண்டியிருந்தது. அந்த குற்றவுணர்வு ஜெயசங்கர் மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. எனவே, வேலையும் பொருளாதாரமும் இடமளிக்கும்போது, ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் மனைவியை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

ஸ்கூட் தந்த நல்வாய்ப்பு

மூத்த சிங்கப்பூரர்கள் தங்கள் பூர்வீக வேர்களுடன் இணைந்திருக்க ஊக்குவிக்கும் ஸ்கூட் நிறுவனத்தின் ‘லெட்ஸ் கோ ஹோம்’ பிரசாரத்தின் வாயிலாக, அந்த வாய்ப்பு எதிர்பார்த்ததைவிட விரைவாகவே வந்தது.

ஸ்கூட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கான பொது மேலாளர் பிரையன் டோரி, துடிப்புடன் இயங்கும் மூத்த குடிமக்களை முக்கியமான, வளர்ந்து வரும் பயணக் குழுவாகத் தங்களது விமான நிறுவனம் கருதுவதாகத் தெரிவித்தார். மற்றவர்களைக் காட்டிலும் இலக்குகளை ஆழமாக அனுபவிப்பதற்கான நேரமும் பார்வையும் ஆர்வமும் அவர்களிடம் உள்ளதாக அவர் கூறினார்.

சிங்கப்பூரர்களில் 20.7 விழுக்காட்டினர் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். இந்த விகிதம் 2030க்குள் 24 விழுக்காடாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்வது முதல் விமானத்தில் ஏறுவது வரை ஒவ்வொரு படியும் எளிமையானது என்பதை உணர்த்துவதே இந்தப் பிரசாரத்தின் நோக்கமாகும்.

“பயணம் என்பது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் எளிதில் அணுகக்கூடியதாகவும் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் என்ற ஸ்கூட்டின் நம்பிக்கையை ‘லெட்ஸ் கோ ஹோம்’ வெளிப்படுத்துகிறது,” என்றார் பிரையன். மேலும், சுறுசுறுப்பான மூத்த குடிமக்களைத் துணிச்சலான, ஈடுபாடுள்ள பயணிகளாகக் கொண்டாடுவதும் இதன் நோக்கமாகும். ஸ்கூட் நிறுவனம் அமிா்தசரஸ், சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, விசாகப்பட்டினம் ஆகிய ஆறு இந்திய நகரங்களுக்குச் சேவை வழங்குகிறது.

ஜெயசங்கர்-வாசந்தி தம்பதியருக்கு, திருச்சிராப்பள்ளி செல்லும் நாலரை மணி நேர விமானப் பயணமும், அங்கிருந்து இரண்டு மணி நேர கார்ப் பயணமும் அவர்களின் தாய்வீட்டை அடைவதற்கான வழியாக அமைந்தது.

மதுரை சிங்கப்பூரிலிருந்து ஏறக்குறைய 3,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தனது வாழ்நாளைச் சிங்கப்பூரிலேயே கழித்திருந்தாலும், தன் வேர்கள் மதுரையில்தான் உள்ளன என்றார் ஜெயசங்கர்.

நினைவில் வைத்திருக்கும் கிராமம்

மூத்த சகோதரி வாசுகியின் வீட்டில் சுவையான ‘கருப்பட்டிக் கொழுக்கட்டை’ சாப்பிட்டவாறே தம்பதியர் இரண்டு மணி நேரம் பேசி மகிழ்ந்தனர். “இது சிங்கப்பூரிலும் கிடைக்கும்; ஆனால் மதுரையில், சொந்தங்கள் கையால் வீட்டில் செய்து சாப்பிடுவதன் சுவையே தனி,” என்றார் ஜெயசங்கர். அதன் பின்னர், ஐந்து நிமிட நடைப்பயணத் தொலைவில் உள்ள இளைய சகோதரி எஸ். மாலாவின் வீட்டிற்கு மதிய உணவிற்காகக் குடும்பத்தினர் புறப்பட்டனர்.

ஆனால், அந்தத் தூரத்தைக் கடக்க அதிக நேரம் எடுத்தது. வழியில் உள்ள ஒவ்வொரு சந்திப்பிலும் உறவினர்களும் நண்பர்களும் அவர்களை வழிமறித்து நலம் விசாரித்து, வீட்டிற்குள் வருமாறு அழைத்தனர். தம்பதியர் அதை நயமாக மறுக்க வேண்டியிருந்தது.

வெயில் சுட்டெரித்தது; பாதையும் சீரற்றதாக இருந்தது. ஆனால் எதுவும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஏனெனில் இது அவர்களின் சொந்த ஊர்.

வழக்கம்போல, அவர்கள் துணிமணிகள், சாக்லெட்கள், ‘கோடரித் தைலம்’ (Axe Oil) போன்ற பரிசுகளைக் கையோடு கொண்டுவந்திருந்தனர். எளிமையான பரிசுகளாக இருந்தாலும், குடும்பத்தினருக்கு அவை மிகவும் அர்த்தமுள்ளவை என்றார் வாசந்தி.

விருந்து உபசரிப்பு

“மதுரை உணவுக்குப் பெயர் பெற்றது,” என்ற ஜெயசங்கர், “என் மனைவியும் மதுரைக்காரர் என்றாலும், அவரது தங்கை வைக்கும் மீன் குழம்பின் ருசிக்கு ஈடாக அவரால் சமைக்க முடியாது,” என்றார்.

இளைய சகோதரி மாலாவும் அவர் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கவில்லை. இருவர் மட்டுமே நிற்கக்கூடிய சிறிய சமையலறையில், 15 பேருக்கான மீன் குழம்பு, இறால் தொக்கு, ரசம், வறுத்த மீன் ஆகியவற்றை ஒரே மணி நேரத்தில் சமைத்து முடித்தார்.

அதன்பின்னர், மாலாவின் கணவரும் பிள்ளைகளும் மூன்று சகோதரிகளையும் ஒன்றாக முதலில் அமரவைத்து அவர்களுக்கு உணவைப் பரிமாறினர்.

புதிய வாழை இலைகளில் ஆவி பறக்கும் சோறு பரிமாறப்பட்டது. ஏழு பேர் மட்டுமே அமரக்கூடிய அந்தச் சிறிய அறையில் காரசாரமான மீன் குழம்பின் மணம் நிறைந்திருந்தது.

படம்: த. கவி

“திருமணத்திற்குப் பிறகு, நாங்கள் சகோதரிகள் மூவரும் ஒன்றாக அமர்ந்து மனநிறைவோடு சாப்பிடுவது இதுவே முதல் முறை,” என்றார் மாலா. “மீண்டும் இதுபோன்று ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வாய்ப்பு கிடைக்குமா என்றே தெரியவில்லை,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

குலதெய்வச் சந்நிதியில் மன அமைதி

ஜெயசங்கரைப் பொறுத்தவரை, கிராமத்தில் உள்ள குலதெய்வக் கோயிலுக்குச் செல்லாமல் சொந்த ஊர்ப் பயணம் நிறைவடையாது.

அன்று மாலை, குடும்பத்தினர் அனைவரும் தங்களின் குலதெய்வமான நாகம்மனுக்குச் சிறப்பு வழிபாடு செய்யக் கூடினர். ஒரு மரத்தடியில் அமைந்திருக்கும் அந்தச் சந்நிதியில் நால்வருக்குமேல் நிற்க முடியாது. 40 நிமிடங்கள் நீடித்த அந்த வழிபாடு எளிமையாகவும் பக்திமயமாகவும் அமைதியாகவும் நடந்தது.

இதற்கு முந்தைய இரு பயணங்களில், முறையாக விடைபெறக்கூட முடியாமல் அவர் மதுரையை விட்டுப் புறப்பட்டதை ஜெயசங்கர் நினைவுகூர்ந்தார். குலதெய்வத்தை வழிபட்டது தங்களுக்கு மிகுந்த நிம்மதியையும், வாழ்க்கை மேலும் சிறக்கும் என்ற நம்பிக்கையையும் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

குலதெய்வத்தை வழிபட்டது தங்களுக்கு மிகுந்த நிம்மதியையும், வாழ்க்கை மேலும் சிறக்கும் என்ற நம்பிக்கையையும் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

வழிபாட்டுக்குப் பிறகு, கூடியிருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

வாசந்தியின் பெரியப்பாவைச் சந்தித்து, ஆசி பெற்று, அவருக்காகக் கொண்டு வந்த பரிசுகளைக் கொடுத்ததோடு அன்றைய இரவு முடிந்தது. அன்று அவர்கள் சந்தித்த பெரும்பாலானோரைப் போலவே பெரியப்பாவும், “இன்னும் கொஞ்ச நாள் தங்கிட்டுப் போகலாமே? எங்க வீட்ல சாப்பிடுறீங்களா? எப்போ மறுபடியும் வருவீங்க?” என்று கேள்விகளை அடுக்கினார்.

ஆலய உலா

இரண்டாம் நாளில்,ஜெயசங்கர்-வாசந்தி தம்பதியருடன் முழு நாளையும் செலவிடுவதற்காகச் சகோதரிகளின் பிள்ளைகள் அனைவரும் பள்ளி செல்வதைத் தவிர்த்தனர். குடும்பமாக ஒன்றாகச் செல்லும் உற்சாகத்துடன் காலை 9 மணிக்கே தம்பதியர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அவர்கள் வந்துவிட்டனர்.

பல்லாண்டுகள் கழித்து வந்திருப்பதால், இந்தப் பயணத்தைப் பயனுள்ளதாக்கத் தம்பதியர் விரும்பினர். 18ஆம் படி கருப்பசாமி கோயிலும், 2026 செப்டம்பர் மத்தியில் குடமுழுக்கு கண்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் அவர்களின் விருப்பப் பட்டியலில் முன்னிலையில் இருந்தன. ஜெயசங்கர் சில வேண்டுதல்களைச் செய்திருந்தார்; எல்லாம் நல்லபடியாக நடந்தால் மீண்டும் வருவதாக நேர்த்திக்கடனும் வைத்திருந்தார்.

‘கருப்பு’ திரைப்படத்திற்குப் பிறகு 18ஆம் படி கருப்பசாமி கோயில் மேலும் பிரபலமடைந்திருந்தது; அங்குப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. அக்கோயிலில் மூலவர் திருவுருவம் இல்லை; 18 படிகள் மட்டுமே உள்ளன. இதன் கதவுகள் ஆண்டுக்கு ஒருமுறை ஆடிப் பௌர்ணமியின்போது மட்டுமே திறக்கப்படும். மற்ற நாள்களில், பக்தர்கள் கதவுகளுக்கு முன்பாக நின்று வணங்கி, பழங்கள், மலர்கள், சந்தனத்தைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

அழகர் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோயில், ராக்காயி அம்மன் கோயில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ள மலைப் பகுதியிலேயே இந்தக் கோயிலும் அமைந்துள்ளது. அந்தக் கோயில்களுக்கும் செல்ல விருப்பமா என்று கேட்டபோது, தம்பதியரின் புன்னகையே அதற்குப் பதிலாய் அமைந்தது.

“நாங்கள் இதைத் திட்டமிடவே இல்லை,” என்றார் வாசந்தி. “எங்கள் குடும்பத்துடன் சேர்ந்து இந்தக் கோயில்கள் அனைத்தையும் தரிசித்தது பெரும் பாக்கியம். உள்ளுக்குள் ஒருவித அமைதியை உணர்ந்தோம்; தெய்வமே அழைத்ததுபோல் இருந்தது,” என்றார் அவர்.

“கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், பூஜைகள் மிகவும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் நடைபெற்றன. அந்த உணர்வையோ கட்டடக்கலையையோ விவரிக்க வார்த்தைகளே இல்லை,” என்றார் ஜெயசங்கர்.

மதிய உணவு வேளையில், மாலாவின் வீட்டிற்குச் சென்று சமைத்துச் சாப்பிடலாமா என்று குடும்பத்தினர் ஆலோசித்தனர். அதற்கு மாற்றாக உணவகம் செல்லலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டபோது, அனைவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.

பாரம்பரிய மதுரை உணவுகளுக்குப் புகழ்பெற்ற ‘அம்மா மெஸ்’ உணவகத்தின் தனி அறையில் குடும்பத்தினர் ஒன்றுகூடினர். அங்கு உணவருந்தும் சத்தத்தைவிட அவர்களின் சிரிப்பொலியே மேலோங்கி நின்றது; உணவின் சுவையைவிடவும் சொந்த ஊரில் இருக்கிறோம் என்ற உணர்வே முதன்மையாக இருந்தது.

மெய்சிலிர்க்க வைத்த அனுபவம்

பயணத்திற்கு முன்பே, அண்மையில் குடமுழுக்கு கண்ட மீனாட்சி அம்மன் கோயிலையும் பட்டியலில் சேர்க்க முடியுமா என்று தம்பதியர் கேட்டிருந்தனர். கோயிலுக்குள் நுழைய எட்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதையும், ஒருவேளை வெளியிலிருந்தே தரிசிக்க நேரிடலாம் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

ஆனால், அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருந்தது. இரண்டு மணி நேர வழிகாட்டியுடன்கூடிய சிறப்பு தரிசன நுழைவுச்சீட்டு கிடைத்தது. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அருகில் உள்ள கடைகளில் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அம்மனைத் தரிசித்துவிட்டு வெளியே வந்த பிறகு, “அம்மனின் மூக்குத்தியைப் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றியது; அது மனத்தை அப்படியே மயக்கியது,” என்றார் வாசந்தி.

“இவ்வளவு அருகில் நின்று தரிசிக்கும் வாய்ப்பு மீண்டும் எனக்குக் கிடைக்கும் என்று தோன்றவில்லை,” என்று சொன்ன ஜெயசங்கர், “ஸ்கூட் நிறுவனத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்,” என்றார்.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், தனக்கும் ஊரில் உள்ள குழந்தைகளுக்கும் புத்தாடைகள் வாங்க வேண்டும் என்பதில் வாசந்தி உறுதியாக இருந்தார். அனைத்து அளவுகளிலும், அனைத்து வயதினருக்குமான உடைகளைக் கொண்ட பலமாடிக் கடையான ‘போத்தீஸ்’ நிறுவனத்தில் தேர்வுகள் கொட்டிக்கிடந்தன.

த. கவி

“இதற்கு அதிக நேரம் பிடிக்கும். ஆனால், அவள் (வாசந்தி) மகிழ்ச்சியாக இருக்கும் வரை எனக்கும் மகிழ்ச்சிதான்,” என்றார் ஜெயசங்கர் சிரித்தபடி.

இரண்டு மணி நேரம் ஆடைகளைத் தேர்வு செய்து முடித்த பின்னர், அன்றைய இரவை நிறைவு செய்ய வேண்டிய நேரமும் வந்தது.

விடைபெறும் தருணம்

கடைசி நாளில், சகோதரிகளும் அவர்களது பிள்ளைகளும் காலை 10 மணிக்கே ஹோட்டலுக்கு வந்தனர். மருமகன்களும் மருமகள்களும் அன்றும் பள்ளிக்குச் செல்லவில்லை.

காரணம் கேட்டதற்கு, வாசுகியின் இளைய மகள் ஸ்வேதா தயங்காமல், “சித்தி-சித்தப்பாவுடன் நேரம் செலவிடும் வாய்ப்பு மீண்டும் எப்போது கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது,” என்று பதிலளித்தார். “கடந்த மூன்று நாள்களும் மறக்க முடியாதவை. இதனுடன் ஒப்பிடும்போது இரண்டு நாள்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது பெரிதன்று,” என்றார் அவர்.

தம்பதியர் வேறு எங்கும் செல்ல விரும்பவில்லை. ஹோட்டல் அறையிலேயே சகோதரிகள், அவர்களின் பிள்ளைகளுடன் அந்தக் காலைப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று மட்டுமே வாசந்தி கேட்டுக்கொண்டார்.

ஹோட்டலிலிருந்து வெளியேறும் (checkout) நேரம் வந்ததும், அங்கிருந்த சூழலே முற்றிலும் மாறியது.

“என் தங்கை சிங்கப்பூரில் வசிப்பதால் என்னால் அவளைப் பார்க்க முடிவதில்லை. பல ஆண்டுகளாக எங்களுக்கு இப்படியொரு வாய்ப்பு அமையவே இல்லை,” என்று கண்ணீருடன் கூறினார் மாலா. “ஆனால் இந்த மூன்று நாள்களில் நாங்கள் மிகவும் நெருக்கமாகிவிட்டோம்; விடைபெற மனமே வரவில்லை. ஆனாலும் சிங்கப்பூரில் அவளுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறதே. மீண்டும் தொலைபேசி அழைப்புகளுக்குத் திரும்ப வேண்டியதுதான்,” என்றார் அவர்.

வாசுகி உணர்ச்சிப் பெருக்கால் தழுதழுத்தார். “என் தாயார் மற்றும் என் மகனின் மறைவின்போது வாசந்தி இங்கு வந்தார், ஆனால் அப்போது எங்களுக்கு எந்த மகிழ்ச்சியான நினைவுகளும் இருக்கவில்லை,” என்றார் அவர். “இந்தப் பயணம் முற்றிலும் மாறுபட்டது. பல்லாண்டுகளுக்குப் பிறகு மகிழ்ச்சியாய் அமைந்துள்ளது,” என்றார்.

தாங்கள் சிறியவர்களாக இருந்தபோதே தந்தை பிரிந்து சென்றுவிட்டதாகவும், தாய் மட்டுமே தனியாளாகத் தங்களை வளர்த்ததாகவும் அவர் கூறினார். வறுமை அவர்களை ஒன்றுசேர்த்தது; திருமண வாழ்க்கை அவர்களைப் பிரித்து வைத்தது.

“இந்த வாழ்க்கை நமக்கு மீண்டும் எப்போதும் கிடைப்பதில்லை. சகோதரிகளாகப் பிறப்பது ஒரு வரம்; நான் உயிரோடு இருக்கும் வரை அதை முழுமையாக அனுபவிக்க விரும்புகிறேன்,” என்றார் வாசுகி.

காரில் பயணப் பைகள் ஏற்றப்பட்டபோது, வாசந்தி பேச வார்த்தைகளின்றித் தவித்தார். “என் சகோதரிகள்தான் என் உலகம். என் அக்கா எனக்குத் தாய் போன்றவர்,” என்றார் அவர். “கடந்த ஐந்து மணி நேரம் மின்னல் வேகத்தில் கடந்துவிட்டது. கடந்த மூன்று நாள்களில் அவர்களுடன் இவ்வளவு நேரம் செலவிட்ட பிறகும், இப்போது நான் உணரும் பிரிவின் வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது,” என்றார் அவர்.

இறுதி நிறுத்தம்

மதுரையை விட்டுப் புறப்படுமுன், ஏ.ஆர். ரஹ்மானின் ‘கண்ணாளனே’, ‘வெள்ளி மலரே’ போன்ற பாடல்கள் படமாக்கப்பட்ட திருமலை நாயக்கர் மகாலுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு வாசந்தியின் சகோதரிகளும் அவர்களின் பிள்ளைகளும் முன்னரே காத்திருந்தது அனைவருக்கும் வியப்பளித்தது.

அப்போது பலத்த மழை பெய்யத் தொடங்கியதால், யாராலும் உடனே கிளம்ப முடியவில்லை. 30 நிமிடப் பயணம் இரண்டு மணி நேரமாக நீண்டது. ஆனாலும் வாசந்தியோ அவரது சகோதரிகளோ அதற்காக வருத்தப்படவில்லை.

மழை குறைந்ததும் தம்பதியர் பிரியாவிடை பெற்றனர். திருச்சிராப்பள்ளியை நோக்கிய இரண்டு மணி நேரப் பயணம் அமைதியாகவே கழிந்தது.

நள்ளிரவுப் பயணத்திற்கு (red-eye flight) இன்னும் நான்கு மணி நேரம் மீதமிருந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து 30 நிமிடத் தொலைவில் உள்ள திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலுக்குச் செல்ல விரும்பினர். தம்பதியர் அக்கோயிலின் 1,000 ஆண்டுகள் பழைமையான வளாகத்தைச் சுற்றி வந்ததுடன் ‘ராணி’ என்ற யானையிடம் ஆசி பெறும் பேறு பெற்றனர்.

“இது திட்டமிடப்படாத ஒன்று,” என்றார் ஜெயசங்கர். “விமானத்தைப் பிடிக்க வேண்டியிருப்பதால் உள்ளே செல்ல முடியாவிட்டாலும், நுழைவாயிலில் நின்று வணங்கியதும் எனக்கு திருப்திதான்,” என்றார்.

இந்தப் பயணம் முழுவதும் மகிழ்ச்சியும் சிரிப்பும் சுவையான உணவும் நிறைந்திருந்தது என்றும் ஸ்கூட் நிறுவனம் ஒவ்வொரு படியையும் மிகவும் எளிதாக்கியது என்றும் ஜெயசங்கர் கூறினார்.

வாசந்தியைப் பொறுத்தவரை, “சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருடன் கிடைக்கும் மகிழ்ச்சியை ஒருபோதும் விவரிக்க முடியாது; அதை அனுபவித்துதான் உணர வேண்டும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்