கொள்கை ஆய்வுக் கழகம் அண்மையில் வெளியிட்ட ‘இனம், சமயம், மொழி’ குறித்த ஆய்வறிக்கை, சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் மொழிப் பயன்பாடு தொடர்பில் பல முக்கியத் தரவுகளை வெளிப்படுத்தியுள்ளது.
ஆங்கில மொழியின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர்களில் 92.9 விழுக்காட்டினர் தங்களுக்குத் தமிழில் ‘நன்றாக’ அல்லது ‘மிக நன்றாக’ பேசும் திறன் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
ஆங்கிலச் சூழலிலும் வலுவாக இருக்கும் இந்த அடித்தளத்தைத் தொடர்ந்து தக்கவைப்பது குறித்துச் சமூகத் தலைவர்களும் கல்வியாளர்களும் தங்களது பார்வைகளை முன்வைத்துள்ளனர்.
வகுப்பறைகளே முதல் களம்
இளையர்களிடையே காணப்படும் இந்த வாய்மொழித் திறன், கல்விமுறையில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்களையே குறிப்பதாகச் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத் தலைவர் தனபால் குமார் சுட்டினார்.
முந்தைய காலகட்டங்களில் மாணவர்கள் எழுதுவதில் சிறந்து செயல்பட்டாலும் பேசுவதில் சிரமப்பட்டனர் என்று கூறிய அவர், தாய்மொழியை வாழும் மொழியாகத் தக்கவைக்கும் இலக்கோடு கருத்துப் பரிமாற்றத்திற்குத் தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கூறினார்.
இந்தியச் சமூகம் சிங்கிலிஷ் மொழியைத் தொழில்முறைச் சூழல்களில் பயன்படுத்துவதில் அதிகத் தயக்கம் காட்டுவதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. இதன் தொடர்பில் பேசிய திரு தனபால், இந்திய மாணவர்களிடையே இரு மொழிகளையும் கலந்து பேசும் வழக்கம் மிகக் குறைவு என்றார்.
பள்ளிகளில் தமிழ் அல்லது ஆங்கிலம் என ஏதேனும் ஒன்றை முழுமையாகப் பயன்படுத்த ஆசிரியர்கள் ஊக்குவிக்கின்றனர். இதனால் தொடக்கத்திலிருந்தே சிங்கிலிஷ் கலப்பில்லாத, முறையான மொழியை மாணவர்கள் பழகிக்கொள்கிறார்கள் என்று அவர் கூறினார்.
ஆயினும், வகுப்பறைகளுக்கு அப்பால், அவர்கள் பெரியவர்களானதும் தமிழின் பயன்பாடு கணிசமாகக் குறைவதை ஆய்வு கண்டறிந்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். “மாணவர்கள் வெளியே செல்லும்போது அவர்களுக்குத் தமிழ் பேசும் சூழலை அமைத்துத் தர வேண்டியது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கடமை. வீட்டில் பெரியவர்கள் தமிழில் பேசி நல்ல முன்மாதிரியாகத் திகழ வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
தாய்மொழியைக் காக்க அரசாங்கத்தின் அரவணைப்பு
அதிகாரபூர்வ மொழிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்பதை 64.6 விழுக்காட்டு இந்தியர்கள் வலுவாக ஆதரிப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
சிறுபான்மையினராக இருக்கும் நமக்கு, பள்ளிக்கு அப்பால் வேலையிடங்களிலோ சமூகத்திலோ நண்பர்களுடன் தமிழ் பேசுவதற்கான இயற்கையான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி குறிப்பிட்டார்.
எனவே, கல்விக்கு அப்பால் மொழியை வளர்க்க அரசாங்கத்தின் ஆதரவு, அமைப்புகளின் நிதியுதவி ஆகியவை இன்றியமையாதவை என அவர் கூறினார்.
அதேவேளையில், இந்தியாவிலிருந்து வந்த நிரந்தரவாசிகள் குடிமக்களைவிட அதிகமாகத் தங்கள் நண்பர்களுடன் தமிழில் பேசுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன் தொடர்பாகப் பேசிய திரு நசீர் கனி, “பல தலைமுறைகளாகச் சிங்கப்பூரிலேயே வாழ்பவர்கள் ஆங்கிலம், சிங்கிலிஷ் ஆகியவற்றுடன் இயல்பாக ஒன்றிவிடுகிறார்கள். ஆனால், கடந்த 20, 25 ஆண்டுகளில் இங்கு வந்த புதிய குடிமக்கள், நிரந்தரவாசிகள் ஆகியோர் புதிய உணர்வுபூர்வமான தாக்கத்தைத் தமிழ்நாட்டிலிருந்து தங்களோடு கொண்டுவருகின்றனர்.
“இது ஒட்டுமொத்தச் சமூகத்திலும் வேலையிடங்களிலும் தமிழ்ப் புழக்கத்தை உயர்த்துவதற்குப் பெரிதும் உதவுகிறது,” என்று குறிப்பிட்டார்.
பொருளியல் நன்மையாக மாறும் தமிழ்
அடையாளம், குடும்பம், கலாசாரம் ஆகியவற்றை இணைக்கும் வாழும் மொழியாகத் தமிழ் தொடர்வதை வாய்மொழித் திறன் தொடர்பான 92.9 விழுக்காட்டுத் தரவுகள் உணர்த்துவதாகத் தமிழ் வளர்ச்சிக்குழுவின் செயலக ஆலோசகரும் கல்வி அமைச்சின் தாய்மொழிகள் பிரிவுக்கான துணை இயக்குநருமான வி. சிவகுமார் வரவேற்றார்.
அதே வேளையில், தற்போதைய நம்பிக்கையை நாம் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் பல்வேறு சூழல்களிலும் மின்னிலக்கத் தளங்களிலும் தமிழைத் தொடர்ந்து அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்துவதை உறுதிசெய்வதே சவாலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாய்மொழியைச் சிறப்பாகப் பேசுவது உள்ளூர், அனைத்துலக வர்த்தகத்தில் தங்களுக்குப் பெரிதும் நன்மை பயப்பதாக ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் நம்புவதை ஆய்வறிக்கை சுட்டுகிறது.
இன்றைய இளையர்களுக்குத் தமிழ் மொழியைப் பாரம்பரியமாக மட்டும் அல்லாமல், இந்தியா, தெற்காசியா உள்ளிட்ட உலகளாவிய சமூகங்களோடு அவர்களை இணைக்கும் நடைமுறை வாழ்க்கைத் திறனாகவும் அமைத்துத்தரத் தமிழ் வளர்ச்சிக்குழு முயற்சி செய்து வருவதாகத் திரு சிவகுமார் கூறினார்.
இளையர்களை ஈர்க்க, செயற்கை நுண்ணறிவு, விளையாட்டின்வழி கற்றல், வலையொளிகள், குறுகியநேரக் காணொளிகள் போன்ற மின்னிலக்கத் தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்தி மொழிக் கற்றலை மேம்படுத்த வளர்ச்சிக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மொழியை வளர்ப்பது தனியொருவரின் கடமையன்று என்றார் திரு சிவகுமார். “அரசாங்கம் வசதிகளை ஏற்படுத்தித் தர, பள்ளிகள் மாணவர்களை வளர்க்க, சமூகப் பங்காளிகள் நம்பகமான தளங்களை உருவாக்க, குடும்பங்கள் வீட்டில் அன்றாடத் தமிழ்ப் பயன்பாட்டை இயல்பாக்க வேண்டும்,” என ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுமுயற்சியை அவர் வலியுறுத்தினார்.

