பொருளோடு குறள்: குறளிசைக்காவியம் பாகம்-8 சிங்கப்பூரில் வெளியீடு

காலத்தை வென்ற திருக்குறளை இசைத்தமிழில் செதுக்கிய தமிழ் இளையர்கள்

பொருளோடு குறள்: குறளிசைக்காவியம் பாகம்-8 சிங்கப்பூரில் வெளியீடு

2 mins read
179015ea-fec1-4e8a-910a-4c227ced3e5d
இசைக்கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷனி தயாரிப்பில்1330 குறள்களும் உரையுடன் இசைப்பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ள ‘குறளிசைக்காவியம்’ பாகம் - 8ன் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் சிந்துவெளி ஆய்வாளருமான திரு ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் இதனை வெளியிட்டனர். - படம்: பே கார்த்திகேயன்
multi-img1 of 4

திருக்குறளை இசைவடிவத்தில் உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் குறளிசைக்காவியத்தின் 8ஆம் பாகம் சிங்கப்பூரில் வெளியீடு கண்டது. 

குறளிசைக்காவியத்தில் 1,330 குறள்களும் உரையுடன் இசைப்பாடல்களாக இணைந்துள்ளன.

திருக்குறளை இசைத்தமிழ் எனும் சிம்மாசனத்தில் அமரவைத்த லிடியன், அமிர்தவர்ஷினியின் ‘குறளிசைக்காவியம்’ - பாகம் 8ன் வெளியீட்டு விழா நடைபெற்ற உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையக் கலையரங்கம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது.

சனிக்கிழமை (மார்ச் 14)  நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில் சிங்கப்பூர் எழுமின் அமைப்பின் தலைவர் இறை.மதியழகன் வரவேற்புரை வழங்கிட, குறளிசைக்காவியத்தின் பாடல் தொகுதிகள் எட்டு அங்கங்களாக வெளியீடு கண்டன.

சிங்கப்பூர் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் சிந்துவெளி ஆய்வாளருமான திரு ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

தொகுப்பை வெளியிட்ட பிறகு அரங்கில் உரையாற்றிய திரு தினகரன், ‘‘சமகாலத்தில் இத்துணை திறன்வாய்ந்த இளையர்கள் செயலாற்றுவதைப் பார்ப்பது மிகவும் இனிமை.

“சிறுவயதில் படித்த குறள்கள் இன்னும் வழிகாட்டியாக இருக்கின்றன. உலகத்தின் வழிகாட்டியாகத் திகழும் குறள்களை, படைப்பாளர்கள் லிடியன், அமிர்தவர்ஷினி இருவரும் பொருளுடன் சேர்த்து சமூகத்திற்கு அளித்திருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்,’’ என்று பாராட்டினார்.

‘‘திருக்குறளை உரைவடிவில் பயில எவ்வளவோ நூல்கள் இருக்கின்றன. அதைப் படித்துக்கொள்ளலாமே என்று கூறலாம். ஆனால் அதை இசை வடிவத்தில் பாடல்களாகக் கேட்கும்போது மனத்திற்குள் இன்னும் ஆழமாகப் பதியும். பாமரரும் போற்றுவர்,’’ என்றார் அவர்.

திரு பாலகிருஷ்ணன், “திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தப் படைப்பு, ஆப்பிரிக்கா முதல் அண்டார்டிகா வரையிலும், ஆர்க்டிக் முதல் உலகின் கடைக்கோடி வரையிலும் கொண்டுசெல்லப்பட வேண்டிய ஒன்று. 

‘‘இது உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் வெளியீடு காணவேண்டிய ஒப்பிலாப் படைப்பு,’’ என்றார்.

மன்னராட்சியில் எழுதப்பட்ட மக்களாட்சியின் குரல் திருக்குறள்

மேலும், ‘‘திருக்குறளை மொழிபெயர்ப்பில் படித்தாலே முன்னேறி விடலாம். அதைத் தமிழில் படிக்கும் வாய்ப்பு  பெற்றவர்கள் பேறு பெற்றவர்கள்,’’ என்றார் திரு பாலகிருஷ்ணன்.

மன்னராட்சியில் எழுதப்பட்ட மக்களாட்சியின் குரல் திருக்குறள் என்று அவர் கூறியபோது கைதட்டலால் அதிர்ந்தது அரங்கம்.

Watch on YouTube

திருக்குறள் என்பது வாழ்க்கைக்கான ஒளியைக் கொண்ட திறந்தவெளி அரங்கம். அதற்கு அனுமதி இலவசம் என்று கூறிய அவர், ‘‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்,’’ எனும் குறளை மேற்கோள்காட்டி இசைக்கலைஞர்கள் லிடியன், அமிர்தவர்ஷினியைப் பாராட்டினார்.

“இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்  என்று அக்குறள் கூறுவதைப் போலவே, குறளிசைக்காவியத்தை இவர்கள்தான் செய்துமுடிக்க வேண்டும் என்று வள்ளுவரே பணித்துவிட்டார்,’’ என்றார் திரு பாலகிருஷ்ணண்.

நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டாளர்களான திரீ டாட் மூவீஸ் நிறுவனரும், அயலக நலவாரிய உறுப்பினருமான திரு ஜி.வி.ராம், ‘8 பாய்ண்ட்’ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனர் திரு அருமைச் சந்திரன் இருவரும் சிறப்பு விருந்தினர்களை கெளரவித்தனர். மேலும், ‘குறளிசைக்காவியம்’ தொகுப்பில் பாடிய சிங்கப்பூர்ப் பாடகர்களும் விழா மேடையில் பாராட்டப்பட்டனர். 

குறிப்புச் சொற்கள்