வேலைவாய்ப்புகளின் உந்துசக்தி ‘செயற்கை நுண்ணறிவு’

வேலைவாய்ப்புகளின் உந்துசக்தி ‘செயற்கை நுண்ணறிவு’

3 mins read
4990963c-7d5a-4363-9fa1-7b016e1b415f
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்பது மனிதர்களின் வேலைகளைப் பறிக்கும் ஓர் ஆயுதமன்று. மாறாக, வேலைகளின் தரத்தை உயர்த்துவதற்கான ஓர் உந்துசக்தி என்பதை நாம் உணர வேண்டும்.  - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

அண்மையில் நடந்த ஆசியா டெக் எக்ஸ் உச்சநிலை தொழில்நுட்ப மாநாட்டில் உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா முன்வைத்த ஒரு புள்ளிவிவரம், உலக நாடுகளின் தலைவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகும்.

அடுத்த 15 ஆண்டுகளில் வளரும் நாடுகளில் 1.2 பில்லியன் இளையர்கள் வேலைச் சந்தைக்குள் நுழையவிருக்கிறார்கள்.

ஆனால், தற்போதைய சூழலில் 400 மில்லியன் வேலைவாய்ப்புகள் மட்டுமே சாத்தியப்படும். மீதமுள்ள 800 மில்லியன் வேலைவாய்ப்புப் பற்றாக்குறை உலகளாவிய சமூக-பொருளியல் அமைதிக்கே பெருஞ்சவாலாகும்.

இத்தகைய சூழலில் உலக நாடுகளின் கவனம் ஒரு முக்கிய மையப்புள்ளியை நோக்கி நகர வேண்டும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்பது மனிதர்களின் வேலைகளைப் பறிக்கும் ஓர் ஆயுதமன்று. மாறாக, வேலைகளின் தரத்தை உயர்த்துவதற்கான ஓர் உந்துசக்தி என்பதை நாம் உணர வேண்டும்.

அரசாங்கங்கள் முறையான உட்கட்டமைப்பையும் வெளிப்படையான ஆளுமையையும் உருவாக்கினால் தொழில்நுட்பம் இயல்பாகவே தொழிலாளர்களை அதிக மதிப்புமிக்க சொத்துகளாக மாற்றும்.

இதனைத்தான் சிங்கப்பூர் தனது அரசாங்க ஆளுமையின் மூலம் உலகிற்கு நிரூபித்துக் காட்டி வருகிறது.

தொழில்நுட்ப மாற்றத்தை வெறும் சந்தைச் சக்திகளின் கைகளில் மட்டும் விட்டுவிட முடியாது. நாட்டின் மிக உயரிய நிர்வாக அமைப்பான பிரதமர் அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பில், பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையிலான ‘தேசிய செயற்கை நுண்ணறிவு மன்றம்’ அதனை வழிநடத்துவது சிங்கப்பூரின் முற்போக்கான அணுகுமுறைக்குச் சான்றாகும்.

மாநாட்டில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ அறிவித்த சிங்கப்பூரின் நான்கு முக்கியச் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள், நாட்டின் இணைப்பு, மேம்பட்ட உற்பத்தி, சுகாதாரப் பராமரிப்பு, நிதி ஆகிய துறைகளில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளன.

குறிப்பாக, அடுத்த பத்தாண்டுகளில் சாங்கி விமான நிலையத்தின் பயணிகளைக் கையாளும் திறன் ஆண்டுக்கு 140 மில்லியனாக உயரவிருக்கும் சூழலில், அதன் ஐந்தாவது முனையத்தில் விமானங்களின் தரையிறக்கம், பயணிகளின் உடைமைகளைக் கையாளுதல் போன்ற சிக்கலான பணிகளை நிர்வகிக்க செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

துவாஸ் துறைமுகம், சாங்கி விமான நிலையம் எனச் சிங்கப்பூரின் இணைப்புச் சவால்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் தீர்வு காண்பது, உலகப் பிரச்சினைகளுக்கான ஓர் ‘உயிருள்ள ஆய்வகமாக’ சிங்கப்பூர் திகழ்வதைக் காட்டுகிறது.

தொழில்நுட்பத்தை வெறும் வார்த்தைகளோடு நிறுத்திவிடாமல், பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் கொண்ட அடித்தளத்தை சிங்கப்பூர் வலுவாக அமைத்து வருகிறது.

நிறுவனங்கள் தங்களின் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புகளைச் சோதனை செய்வதற்கான புதிய அங்கீகாரத் திட்டத்தை அமைச்சர் டியோ அறிவித்தார்.

ஆசியாவிலேயே முதன்முறையாக இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அறிமுகமாகவிருக்கும் அத்திட்டம், சுகாதாரம், நிதி போன்ற முக்கியமான துறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கையை நிறுவனங்களிடையே பன்மடங்கு உயர்த்தும்.

தனியார் முதலீடுகள் குழப்பமான சூழலை விரும்புவதில்லை என்கிறார் உலக வங்கித் தலைவர்.

முறையான உட்கட்டமைப்பு, பாதுகாப்பான ஆளுமை என்ற இரு தூண்களை சிங்கப்பூர் சரியாக நட்டுள்ளது.

அத்துடன், அனைத்துலக மூலதனத்தைத் திரட்டுவதற்கான அபாயக் குறைப்பு வழிமுறைகளை உருவாக்குவதில் அதிபர் தர்மன் சண்முகரத்னம், தெமாசெக்கின் தில்ஹன் பிள்ளை போன்ற சிங்கப்பூர் சிந்தனையாளர்கள் உலக அரங்கில் பங்காற்றுவது நமக்கு பெருமிதம் அளிக்கிறது.

செயற்கை நுண்ணறிவு என்பது வேலைவாய்ப்புகளை அழிக்கும் எமன் அல்ல, அது வேலைகளை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் ஏணி.

அதைச் சரியான ஆளுமையோடும் தொலைநோக்குப் பார்வையோடும் கையாண்டு உலகிற்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது சிங்கப்பூர்.

இந்தத் தொழில்நுட்பப் புரட்சியைத் தழுவி நம் மனிதவளத்தை மேம்படுத்துவதே நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

குறிப்புச் சொற்கள்
தலையங்கம்செயற்கை நுண்ணறிவுவேலைவாய்ப்புசிங்கப்பூர்