சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையை வலுப்படுத்த இணைவோம்

சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையை வலுப்படுத்த இணைவோம்

2 mins read
c624b041-c20d-48c1-98d5-7f0e1de0dc4c
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி (சனிக்கிழமை) இடம்பெற்ற ஒரு கலந்துரையாடல் சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் எதிர்காலப் போக்கை வடிவமைக்கவும், அடித்தளக் கருத்துகளைத் திரட்டவும் ஒரு தொடக்கமாக அமைந்தது. மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கலந்துரையாடலில் பங்கேற்று மாணவர்களிடம் பேசினார். - படம்: தமிழ் முரசு

சிங்கப்பூரில் இந்தியர்கள் சிறுபான்மைச் சமூகமாக இருந்தாலும் பலதுறைகளில் விஞ்சி நிற்கின்றனர்.

இருப்பினும், அதிவேக வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கி இருப்போர் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்குக் கைகொடுத்துத் தூக்கிவிட வேண்டியது சமுதாயத்தின் கடமை. அதற்கு அரசாங்கம் உறுதுணையாக இருந்துவருவது அனைவரும் அறிந்த உண்மை.

இந்தியச் சமூகம் பன்முகத்தன்மை கொண்டது. இருநூறு ஆண்டுகளாய் அலை அலையாய் வெவ்வேறு தருணங்களில் இங்கே குடியேறியவர்கள். அரசாணைகளில் இந்தியர்கள் என்று ஒரு குழுவாய் அழைக்கப்பட்டாலும், அதில் இன, மொழி, சமய வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. சமூகத்தை ஒன்றிணைக்கும் தளங்களும் இடங்களும் இருந்தாலும், ஒன்றுபட்ட இந்தியச் சமூகமாகச் செயல்பட வேண்டுமெனில் மேலும் சில முயற்சிகள் தேவைப்படுகின்றன.

அம்முயற்சிக்குப் புத்துயிர் கொடுக்கப் பிறந்ததே ‘இணை’ எனப்படும் செயற்குழு. சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு, ஆங்கிலத்தில் சுருக்கமாய் ‘INEI’ என அழைக்கப்படும். அதன் விரிவாக்கம், Indian Engagement and Development Initiative என்பதே.

இந்தக் குழுவின் செயல்பாடுகளை மூன்றாய்ப் பிரிக்கலாம். 

முதலாவதாக, இந்தியச் சமூகத்தில் பொருளியல் அடிப்படையில் பின்தங்கிய குடும்பங்களின் நிலையை மேம்படுத்தும் செயல்பாடுகளில் முனைப்பு. இதற்கு அரசாங்கம், சிண்டா, நற்பணிப் பேரவை போன்ற மேலும் பல சமூக அமைப்புகளின் ஆதரவை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக இருப்பது. 

இரண்டாவதாக, சிங்கப்பூரில் வாழும் பல்வேறு இந்தியச் சமூகங்களிடையே ஒருங்கிணைப்பையும் ஒற்றுமையையும் வளர்ப்பது. இதற்கு நம் கலைகளும் விளையாட்டும் உறுதுணையாய் இருக்கும் என இக்குழு நம்புகிறது. 

இறுதியாக, இளையர்கள் சமூகப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்க புதிய வழிகளை உருவாக்குவதன்மூலம் அடுத்த தலைமுறை இந்தியத் தலைவர்களைக் கண்டறிந்து வளர்ப்பது. 

இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் கருத்தரங்கம் ஒன்றை நடத்த உள்ளதாக இக்குழு அறிவித்திருக்கிறது. தொடக்கக் கருத்தரங்கில், இக்குழுவின் விரிவான திட்டங்களும் எதிர்காலச் செயல்பாடுகளும் பகிரப்படும். சமூகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் சமூகத்தினர் அனைவரும் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கருத்தரங்கின் வெற்றி தோல்வி நம் கைகளில்தான் உள்ளது.

இக்கருத்தரங்கை ஒரு புகார் மையமாகவோ, நமக்கு வேண்டியதை மட்டும் தட்டிக் கேட்கும் களமாகவோ கருதாமல், சமூகமாக முன்னேறுவதற்கான பாதையை அமைக்கும் வாய்ப்பாகக் கருத வேண்டும்.

இந்தியச் சமூகத்தின் எதிர்கால நிலையை நிர்ணயிக்க உந்துசக்தியாகத் திகழ வேண்டியவர்கள் இளைய தலைமுறையினர். அவர்கள் சமூகத் தலைவர்களாக வளர்வதற்குத் தற்போதைய தலைமைத்துவம் இடமளிக்க வேண்டும். 

தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு வலிமையான சிங்கப்பூரை உருவாக்க முதலில் இந்தியச் சமூகம் ஒன்றிணைய வேண்டும். நம்மைப் பின்னிழுத்துக் கொண்டிருக்கும் கட்டுப்பாடுகளைக் களைய வேண்டும். சோதனைகள் இருப்பினும் சாதனைபுரியும் மனப்பாங்கோடு அனைவரோடும் கைகோத்து முன்னேறும் வழிகளைப் பின்பற்றினால் வெற்றி நம்பக்கம்!

குறிப்புச் சொற்கள்