எண்ணிப் பார்க்கவே முடியாத அளவிற்குப் பெருங்கொடுமையை அனுபவித்துவிட்டாள் நான்கு வயதே நிரம்பிய மேகன் குங்.
அறியாப் பருவத்தில் தன் அன்னையும் அவளின் காதலனும் இழைத்த துயர் தாளாது மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டாள் அந்தப் பிஞ்சு.
அவள் மறைந்து ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும் சமூகத்தில் அது ஏற்படுத்திய காயம் காலத்திற்கும் மறையாது. அதனைக் கடந்துசெல்வது கடினம் என்றாலும் இனியொருமுறை நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அனைவரின் கடமை.
நேர்ந்த துயரத்திற்காகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி மன்னிப்பு கேட்டுள்ளார். குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியதோடு, குழந்தைப் பாதுகாப்புச் சேவை, காவல்துறை போன்ற உரிய அமைப்புகள் சற்று முனைப்புடன் நடந்துகொண்டிருந்தால் மேகனைக் காப்பாற்றியிருக்க முடியும் என்பதை மறுஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
இனியும் இப்படியொரு துயரம் நிகழாதிருக்க நாடாளுமன்றக் குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
அமைப்புகள் வலுப்படுத்தப்படுவது, அவற்றின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுவது, போதிய வளங்களும் ஆதரவும் அளிப்பது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
குற்றங்களைத் தடுக்க அரசாங்கம் கடுமையான சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி, மேகனின் மரணத்திற்குக் காரணமானவர்கள் அனுபவிப்பதுபோல் கடுமையான தண்டனைகளை விதித்தாலும், தனிமனிதனிடம் இருந்து தொடங்காவிடில் மாற்றம் சாத்தியமில்லை.
உணவிற்காகப் பிற உயிர்களைக் கொல்லும் விலங்குகள்கூட பசியைப் போக்க மட்டுமே அவ்வாறு செய்கின்றன. மற்ற நேரங்களில் சீண்டுவதில்லை.
தொடர்புடைய செய்திகள்
அவ்விலங்குகளும் தங்கள் குட்டிகளைப் பாதுகாக்கவே முற்படுவதைக் குறிப்பிட்டு, ‘இவர்களெல்லாம் மனிதர்கள்தானா?’ எனக் குமுறிய அச்சிறுமியின் தாய்வழிப் பாட்டி, தன் நெஞ்சம் துஞ்சிவிட்டது எனக் கூறியிருப்பது மனத்தை உலுக்குவதாக உள்ளது.
உயிரினங்களில் உயர்ந்தவன் எனக் கூறிக்கொள்ளும் மனிதனே இத்தகைய தாழ்ந்த செயல்களில் ஈடுபடுகிறான்.
எளியோரை, தம்மை எதிர்க்க முடியாதோரை எள்ளுவதும் வதைப்பதும் மனிதனிடத்தில் மட்டுமே உண்டு.
சிறார் துன்புறுத்தல், பெண்கள், முதியோருக்கு எதிரான குடும்ப வன்முறை, பணிப்பெண் கொடுமை என அப்பட்டியல் நீள்கிறது.
கடைசியாக வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2021, 2022ஆம் ஆண்டுகளைக் காட்டிலும் 2023ஆம் ஆண்டில் அத்தகைய துன்புறுத்தல்கள், கொடுமைகள் தொடர்பில் அதிகமான புகார்கள் பதிவாயின.
மனிதர்கள் பண்பட்டவர்களாக இருப்பின், இத்தகைய போக்கு தொடராது.
சக மனிதர்களுக்கு நேரும் துன்பங்களைக் கண்டும் காணாமல் கடந்துசெல்லாது, பிறர் துன்பத்தையும் தன்னுடையதாகக் கருதும் கழிவிரக்கத்தோடு, உதவி மனப்பான்மையோடு செயல்பட வேண்டும்.
நற்பண்புகளைச் சிறுவயதிலேயே விதைக்க வேண்டும் எனும் நோக்கத்தில்தான் நற்குணம், குடியியல் கல்வி பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
நன்னெறிகளைப் போதிக்கும் கதைகளும் நூல்களும் குழந்தைகளுக்காக அதிகம் வெளியிடப்படுவதும் பிற்காலத்தில் அவர்கள் நல்லொழுக்கம் மிக்கவர்களாக, உயர்ந்த நெறியோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.
செயலால் மட்டுமன்று, மனத்தாலும் இன்னொருவர்க்குத் தீங்கு நினைக்கலாகாது என்பதை ‘உள்ளத்தால் உள்ளலும் தீதே’ என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
அறநெறிப்பட்ட வாழ்க்கையே நல்ல மாற்றங்களை விளைவிக்கும். அவ்வறத்திற்கும் அன்புதான் சார்பு. உலகத்திலுள்ள எல்லாச் சமயங்களும் அன்பையே போதிக்கின்றன. எளியோரை வலியார் வாட்டினால் வலியோரைத் தெய்வம் வாட்டும் என்பதும் அவைதான்.
தனிமனிதன், குடும்பம், இனம், சமூகம், சமயம் என எந்நிலையிலும் வன்முறை ஒருநாளும் ஏற்கத்தக்க வழிமுறை ஆகாது.
குழந்தைகள் மட்டுமல்ல, எவர் ஒருவரும் துன்புறுத்தலுக்கு ஆளாவதைத் தடுக்க, தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.
மேகனின் மரணத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவளுக்கு நேர்ந்தது போன்ற இன்னல் இன்னொருவர்க்கு ஏற்படாமல் தடுக்க முடியும்.
அதுதான், எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நமது கூட்டு உறுதிமொழியாக இருக்க வேண்டும்.
அன்பையும் பண்பையும் விதைத்து, அறமும் அமைதியும் செழித்தோங்கும் உலகை உருவாக்குவோம்!

