தாய்மொழிக் கல்வியால் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு

தாய்மொழிக் கல்வியால் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு

படம்: தெலுங்கானா டுடே

14 Nov 2026 - 2:55 pm

2 mins read

ஹைதராபாத்: வகுப்பறைகளில் ஆங்கிலத்துடன் மாணவர்களின் தாய்மொழியையும் பயன்படுத்துவது அவர்களின் பங்கேற்பையும் கற்றல் விளைவுகளையும் மேம்படுத்தும் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) அறிக்கை தெரிவித்துள்ளது.

அவ்வகையில், இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், வாரங்கல்லில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர் ஈடுபாடு 10 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காட்டிற்கும் மேலாக உயர்ந்துள்ளது.

‘மொழி முக்கியம்: தாய்மொழி, பன்மொழிக் கல்வி’ என்னும் தலைப்பில் இந்தியாவிற்கான 2025 கல்விசார் அறிக்கை தெலுங்கானாவில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) வெளியிடப்பட்டது. தாய்மொழி அடிப்படையிலான பன்மொழிக் கல்வி, பழங்குடியினர், சிறுபான்மைச் சமூகக் குழந்தைகளின் புரிதல், வகுப்பறைப் பங்கேற்பு, அடிப்படைக் கற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் என அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த 2024-25ஆம் ஆண்டு வாரங்கல்லில் ஏழாம் வகுப்பு கணித வகுப்பறையில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆர்ம்ஸ்’ எனப்படும் செயலாய்வு வழிகாட்டித் திட்டத்தில், ஆங்கிலத்துடன் தெலுங்கு மொழி பயன்படுத்தப்பட்டது. அம்முயற்சியால் மாணவர் பங்கேற்பு 10 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்தது.

தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஆங்கிலம், வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகமும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் இணைந்து பத்து அரசுப் பள்ளிகளில் ஆய்வு நடத்தின. அதன்மூலம், பன்மொழிக் கலந்துரையாடல்கள், மொழிமாற்றப் பயன்பாடு, ஒருங்கிணைந்த ஆங்கிலம், அறிவியல் நடவடிக்கைகள்மூலம் மாணவர்களின் வாசிப்புத் திறன் 30 விழுக்காடு மேம்பட்டது கண்டறியப்பட்டது.

குழந்தைகளின் தற்போதைய மொழி அறிவு, அனுபவங்களின் அடிப்படையில் கற்பித்து, படிப்படியாகப் பிற மொழிகளை அறிமுகப்படுத்தும்போது அவர்கள் சிறப்பாகக் கற்பதும் ஆய்வின்மூலம் தெரியவந்தது.

தெலுங்கு-ஆங்கிலம், உருது-ஆங்கிலம் என இருமொழிப் பாடநூல்கள் உட்பட ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரைக்குமான 274 பாடநூல்களைத் தெலங்கானா மாநிலம் உருவாக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்