ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்திய அமைச்சரின் சீனப் பயணம் ரத்து

1 mins read
2f01c4f9-db16-4ff5-ae6c-02ced832a38e
சீனாவின் ஹாங்ஸோவ் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: சீனாவின் ஹாங்ஸோவ் நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்லவிருந்த இந்திய விளையாட்டுத் துறை அமைச்சரின் பயணத்தை புதுடெல்லி வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.

சீனா சொந்தம் கொண்டாடும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு அங்கீகாரம் வழங்கவும் சீனாவுக்குள் அவர்கள் நுழைய அனுமதி வழங்கவும் சீன அதிகாரிகள் மறுத்துவிட்டதாக இந்தியா கூறுகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தற்காப்புக் கலை வீராங்கனைகள் மூவருக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்ததாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

ஆனால், வூஷு வீரர்களால் தங்களது அங்கீகார அட்டைகளைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்தது. அந்த அட்டைகள், சீனாவுக்கு நுழைவதற்கான விசாவாகத் திகழ்கின்றன.

இந்திய விளையாட்டு வீரர்களிடம் சீனா பாரபட்சம் காட்டுவதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

இந்திய விளையாட்டு வீரர்களில் சிலர் மீது சீனா வேண்டுமென்றே விதிக்கும் தடையை எதிர்த்து புதுடெல்லியிலும் பெய்ஜிங்கிலும் வலுவான கண்டனக் குரல் எழுப்பப்பட்டிருப்பதாகச் சொன்ன அந்தப் பேச்சாளர், ஆசிய விளையாட்டுப் போட்டிக்குச் செல்லவிருந்த இந்திய விளையாட்டுத் துறை அமைச்சரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்