ஒரே வகையான உணவை உண்பதன் நன்மைகளும் தீமைகளும்

ஒரே வகையான உணவை உண்பதன் நன்மைகளும் தீமைகளும்

2 mins read
373101d7-2762-4fd2-8e04-86eb00a35382
ஊட்டச்சத்து நிபுணர்களைப் பொறுத்தவரை, சமச்சீரான உணவு என்பது புரதம், ‘கார்போஹைட்ரேட்’, ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். - படம்: நியூயார்க் டைம்ஸ்
Google News Preferred Icon

தினமும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஒரே மாதிரியான உணவை உண்ணும் பழக்கம், உங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் எடையைக் கட்டுப்படுத்துவதற்கும் திறம்பட்ட வழியாக அமையலாம்.

ஆனால், இதில் சில பின்னடைவுகளும் உள்ளன. ஆரோக்கியமான, சத்தான உணவுகளுக்குப் பதிலாக, உங்கள் அன்றாட உணவில் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவு அல்லது அதிகக் கொழுப்பு, உப்பு, சர்க்கரை நிறைந்த உணவுப்பொருள்கள் இருந்தால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

“அது சமச்சீரான, ஆரோக்கியமான உணவாக இருக்கும்பட்சத்தில், ஒரே உணவையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதில் பெரிய தவறு எதுவுமில்லை,” என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து, உணவு ஆய்வுகள், பொதுச் சுகாதாரத் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் மரியன் நெஸ்ட்லே கூறியுள்ளார்.

ஊட்டச்சத்து நிபுணர்களைப் பொறுத்தவரை, சமச்சீரான உணவு என்பது புரதம், ‘கார்போஹைட்ரேட்’, ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும் என்று கிளீவ்லேண்ட் மருந்தகத்தின் உணவியல் நிபுணர் ஜூலியா ஸூம்பானோ தெரிவித்தார்.

உதாரணத்திற்கு, தினமும் காலை உணவாக முட்டை அல்லது ‘ஹாஷ்பிரௌன்’ சாப்பிடுவதைவிட, பழங்களுடன் கூடிய தயிர் அல்லது ‘ஓட்ஸ்’ சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மாயோ மருந்தக மருத்துவக் கல்லூரியின் ஊட்டச்சத்துத் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் டோனல்ட் ஹென்ஸ்ருட் கூறினார்.

மேலும், மதிய உணவிற்கு வெள்ளை ரொட்டியில் ‘ஹேம்’ (ham) வைத்துச் சாப்பிடுவதைவிட, காய்கறி ‘சாலட்] சாப்பிடுவது சிறந்தது.

இரவு உணவிற்கு, ‘பர்கர்’, ‘ஃபிரைஸ்’ போன்றவற்றைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, காய்கறிகள், கைக்குத்தல் அரிசிச் சோற்றுடன் கோழி அல்லது மீனைச் சாப்பிடுவது சிறந்தது என்றும் டாக்டர் ஹென்ஸ்ருட் கூறினார்.

“சில வேளைகளில், ஒருவருக்கு ஒரே மாதிரியான உணவு மிகவும் பிடிக்கும் என்பதால் மட்டுமே, அவர்கள் அதைச் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்,” என்று நெஸ்ட்லே கூறினார்.

மற்றவர்கள் தங்களது எடையைக் குறைப்பதற்காகவோ எடையைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்காகவோ ஒரே மாதிரியான உணவைத் திரும்பத் திரும்பச் சாப்பிடும் முறையைப் பின்பற்றுகிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.

உங்கள் உணவை ஆரோக்கியமாக வைத்திருக்க, அதில் சிறிய அளவில் வெவ்வேறு உணவுவகைகளைச் சேர்த்துக்கொள்ளுமாறு நிபுணர்கள் சிலர் பரிந்துரைக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்