பள்ளி, கல்லூரிப் பருவங்களில் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி நண்பர்களுடன் நாம் செலவிடும் நேரம் விலைமதிப்பற்றது.
வயது ஆக ஆக வேலை, குடும்பம், எதிர்காலம் சார்ந்த பொறுப்புகளால் நண்பர்களைச் சந்திப்பது என்பது பலருக்கும் பெரும் சவாலாகவே மாறிவிடுகிறது.
இதனைச் சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக் கழகத்தின் அண்மைய தரவுகளும் உறுதிப்படுத்துகின்றன.
குறையும் நண்பர்களின் எண்ணிக்கை
அந்தத் தரவுகளின்படி, 2018ஆம் ஆண்டில் ஒரு சிங்கப்பூரருக்குச் சராசரியாக 10 முதல் 11 நெருங்கிய நண்பர்கள் இருந்த நிலையில், 2024ல் அந்த எண்ணிக்கை 6 முதல் 7 ஆகக் குறைந்துள்ளது. மேலும், பத்தில் ஒருவருக்கு (10.5%) நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை என்பதையும் ஆய்வுகள் காட்டுகின்றன்.
நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், அதைத் தொடர்ந்து பேணுவதற்கான நேரத்தை ஒதுக்குவது இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் கடினமாகியுள்ளது. இதனால் நண்பர்கள்மீது உள்ள பாசம் குறைந்துவிட்டது என்று பொருள் கொள்ள முடியாது. அன்றாட வாழ்க்கையின் வேகமும் மன அழுத்தமுமே இதற்குக் காரணமாகின்றன.
திட்டமிடப்படும் சந்திப்புகள்
“பள்ளி, கல்லூரி நாள்களில் அருகருகே அமர்ந்திருந்ததே நட்பை வளர்க்கப் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போது, முன்கூட்டியே திட்டமிட்டால் மட்டுமே நண்பர்களைச் சந்திக்க முடிகிறது,” என்றார் வங்கித்துறையில் பணியாற்றும் 25 வயது காவ்யா கணேசன்.
வேலைப்பளுவால், மதிய, இரவு உணவு நேரச் சந்திப்புகளுக்குக்கூட முன்கூட்டியே திட்டமிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
“எனது நான்கு நண்பர்களுடன் ஒரு வெள்ளிக்கிழமை மாலைச் சந்திக்க வேண்டுமானால், பல வாரங்களுக்கு முன்னரே தேதியை முடிவு செய்ய வேண்டும். முன்புபோல திடீரெனச் சந்திப்பது இப்போது சாத்தியமில்லை,” என்றார் தொழில்நுட்ப நிர்வாகி 36 வயது கண்ணன் மூர்த்தி பிள்ளை.
தொடர்புடைய செய்திகள்
சமூக ஊடகத் தளங்களில் உள்ள நண்பர்கள் குழுக்கள் இப்போது பெரும்பாலும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிரும் இடமாக மாறிவிட்டதாகக் கூறினார் சொந்த தொழில் நடத்தும் 31 வயது பா. ரம்யா.
“அனைவரும் விரைவில் சந்திப்போம் என்று சொல்வார்கள். ஆனால், அது பெரும்பாலும் நடக்காது. இல்லையெனில், ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே கூடும்,” என்றார் அவர். பெரிய குழுக்களாகச் சந்திப்பதைவிட, ஒருவரை மட்டும் தனியாகச் சந்திப்பது எளிதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாறும் நட்பின் இலக்கணம்
இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, பலரும் நட்பின் அர்த்தத்தை மறுவரையறை செய்து வருகின்றனர். அன்றாட உரையாடல்கள், வாராந்திரச் சந்திப்புகளைத் தாண்டி, தேவையான தருணங்களில் அருகில் இருப்பதே உண்மையான நட்பு என்ற புரிதல் வலுப்பெறுகிறது.
“முன்பெல்லாம் வார இறுதி நாள்களில் நண்பர்களுடன் எவ்வளவு நேரம் ஊர் சுற்றுகிறேன் என்பதை வைத்து நான் நட்பை அளவிட்டதுண்டு. ஆனால் இப்போது, என் வாழ்க்கையில் ஒரு சிக்கல் வரும்போது தோள் கொடுக்க யார் இருக்கிறார்கள் என்பதை வைத்து உண்மையான நட்பை உணர்கிறேன்,” என்றார் கணினிப் பொறியாளர் 24 வயது தர்ஷினி பார்த்திபன்.
வயது அதிகரிக்கும்போது நண்பர்கள் வட்டம் சுருங்குவது இயல்பு. ஆனால், உறவுகள் ஆழமடைகின்றன.
நாள்காட்டியில் திட்டமிட்டு சந்தித்தாலும், பல மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்தாலும், இன்றைய சூழலில் நட்பை நிலைநிறுத்த ஆழமான புரிதலும் கூடுதல் முயற்சியும் அவசியமாகின்றன.

