சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டுநிறைவை முன்னிட்டு, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் மூன்று நாள் நடைபெற்ற தமிழ்ப் புத்தகத் திருவிழாவில் $30,000க்குமேல் நூல் விற்பனை நடைபெற்றதாகப் பங்கேற்ற பதிப்பகங்களும் அமைப்புகளும் கூறியுள்ளன.
மே 9, 10, 11 ஆகிய தேதிகளில் 100 விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் ‘த பிளாஸா’ தளத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் இந்தியாவிலிருந்து ஐந்து பதிப்பகங்களும் மலேசியாவிலிருந்து மூன்று பதிப்பகங்களும் சிங்கப்பூரிலிருந்து எட்டுப் பதிப்பகங்களும் அமைப்புகளும் பங்கேற்றன.
இந்தியாவிலிருந்து வந்திருந்த டிஸ்கவரி புக் பேலசின் வேடியப்பன், புத்தகத் திருவிழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார். சிக்ஸ்சென்ஸ் பப்ளிகேஷன்சின் புகழேந்தி கார்த்திகேயன், யாவரும் பதிப்பகத்தின் ஜீவ கரிகாலன், புத்தகக் கடை டாட் காம்மின் கோபாலகிருஷ்ணன், எதிர் வெளியீட்டின் அனுஷ் ஆகியோரும் அதே கருத்தை வெளிப்படுத்தினர்.
மலேசியாவின் உமா பதிப்பகத்தின் சிவபாலன் சோதிநாதன், ஈப்போவின் தமிழ்க்கனி எண்டர்பிரைசின் அறிவழகன் ஆகியோர் சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டால் நிச்சயம் பங்கேற்பதாகக் கூறினர். விற்பனை சிறப்பாக இருந்ததாகத் தெரிவித்த ஜெயபக்தி பதிப்பகத்தின் டாக்டர் செல்வராஜூ, இதுபோல் மலேசியாவிலும் ஏற்பாடு செய்ய இருப்பதாகக் கூறினார்.
சிங்கப்பூர்ப் பதிப்பாளர்களும் அமைப்புகளும் விற்பனை மனநிறைவு அளிக்கும் வகையில் இருந்ததாகத் தெரிவித்தனர்.
தேசியக் கலை மன்றம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, வளர் தமிழ் இயக்கம், தேசிய நூலக வாரியம் ஆகியவற்றின் ஆதரவோடு நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்குச் சிங்கப்பூரின் 16 சமூக அமைப்புகள் ஆதரவளித்தன.
சிங்கப்பூரில் முதல் முறையாக நடைபெற்ற தமிழ்ப் புத்தகத் திருவிழாவைச் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், மே 9ஆம் தேதி திறந்து வைத்தார். 11ஆம் தேதி நிறைவு விழாவில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
புத்தகத் திருவிழா நடைபெற்ற மூன்று நாள்களிலும் இளையர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளுடன் பட்டிமன்றம், கவியரங்கம், சிறுவர் நிகழ்ச்சிகள், வெளிநாட்டுப் பதிப்பாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் ஆகியவையும் இடம்பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
மாணவர்களுக்குப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வந்து புத்தகங்கள் வாங்கிச் சென்றனர்.
கருத்துரைத்த பொது மக்களில் 82 விழுக்காட்டினருக்குமேல் மிகுந்த மனநிறைவு அடைந்ததாகக் கூறினர். அடுத்த ஆண்டும் புத்தகத் திருவிழா நடைபெற வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.