சைனாடவுனில் திங்கட்கிழமை (நவம்பர் 2) எஸ்எம்ஆர்டி பேருந்து மோதியதில் 73 வயது மாது மரணமடைந்தார்.
அன்றையதினம் முற்பகல் மணி 11.40க்கு தஞ்சோங் பகார் நோக்கி சவுத் பிரிட்ஜ் ரோட்டில் சென்ற பேருந்து பாதசாரி ஒருவரை மோதிய விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் (எஸ்சிடிஎஃப்) கூட்டாகத் தெரிவித்தன.
சுயநினைவின்றி சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார் எனவும் அவை குறிப்பிட்டன.
பேருந்தின் 41 வயது ஓட்டுநர் காவல்துறை விசாரணையில் உதவிவருகிறார்.
முன்பக்கக் கண்ணாடியும் அதன் (பம்ப்பர்) முன்பாகமும் சேதமடைந்த நிலையில் பேருந்து சாலையில் நின்றிருப்பதை டிக்டாக் சமூக ஊடகத்தில் வெளிவந்த இரண்டு காணொளிகள் காட்டின.
எஸ்சிடிஎஃப் அதிகாரி ஒருவருக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சை (சிபிஆர்) செய்வதும் அதில் காணப்பட்டது.
சவுத் பிரிட்ஜ் ரோட்டில் இரண்டு வாகனங்களுக்கு இடையே சாலையைக் கடக்க முயன்றபோது பாதசாரி ஒருவர் விபத்துக்குள்ளானதாக எஸ்எம்ஆர்டி பேருந்துகளின் துணை நிர்வாக இயக்குநர் வின்சன்ட் கே, ஊடகத்திடம் தெரிவித்தார்.
