தொற்றுநோய்த் தடுப்பு: பின்னணியில் இயங்கும் முக்கியக் கரங்கள்

4 mins read
a7ee4078-65a0-4cc4-8449-0787eaa19c78
தேசிய பொதுச் சுகாதார ஆய்வகத்தில் நோயாளியிடமிருந்து ரத்தம் எடுக்கப்படுகிறது. - படம்: பெரித்தா ஹரியான்

ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 60 மில்லியன் பேர் வருகை தரும் பரபரப்பான உலக மையமாகத் திகழும் சிங்கப்பூர், வெளிநாடுகளிலிருந்து பரவக்கூடிய தொற்றுநோய்களின் தொடர் அபாயத்தைச் சமாளிக்கும் தனித்துவமான சவாலை எதிர்கொள்கிறது.

குறைந்த நிலப்பரப்பில் அதிக மக்கள் வசிக்கும் சிங்கப்பூரில், நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் ஒரேயொரு பயணியால்கூட தொற்று வேகமாகப் பரவும் அபாயம் நிலவுகிறது.

இதனால், தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகள், சிங்கப்பூரின் முக்கியப் பாதுகாப்புக் கவசமாக மாறியுள்ளன. இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி, நாட்டைப் பாதுகாப்பதில் தொற்றுநோயைக் கண்டறிதல், கட்டுப்படுத்தல், தவிர்த்தலுக்கான அமைப்பு (சிடிஏ) அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.

அமைதியான காவலர்கள்போலச் செயல்பட்டு, தொற்றுநோய் அச்சுறுத்தல்கள் நாட்டின் கரையை அடைவதற்குமுன் அவற்றைக் கண்டறிந்து தடுக்க அவர்கள் செயல்படுகின்றனர்.

அமைப்பின் தொடர்பு, சுற்றுச்சூழல் நோய்கள், எல்லை மற்றும் பயணச் சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த செயல் இயக்குநர் பிரேம் ராஜ், 40, தங்கள் பணியின் அடித்தளம், வலுவான கண்காணிப்பில் இருப்பதாகவும் அதுவே பொதுச் சுகாதார நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றும் விளக்கினார்.

தொற்றுநோய்கள் அமைப்பின் தொடர்பு, சுற்றுச்சூழல் நோய்கள், எல்லை மற்றும் பயணச் சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த செயல் இயக்குநர் பிரேம் ராஜ், 40.
தொற்றுநோய்கள் அமைப்பின் தொடர்பு, சுற்றுச்சூழல் நோய்கள், எல்லை மற்றும் பயணச் சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த செயல் இயக்குநர் பிரேம் ராஜ், 40. - படம்: தொற்றுநோய்கள் அமைப்பு

“தொற்றுநோய் அச்சுறுத்தல்களைத் தடுப்பது, அவற்றுக்குத் தயாராக இருப்பது, அவற்றைக் கண்டறிவது, அவற்றுக்குப் பதில் நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் தேசியப் பொதுச் சுகாதார முகவை நாங்கள்தான்,” என்று திரு பிரேம் கூறினார்.

இவரது பிரிவு, நாட்டின் நுழைவாயில்களில் கவனம் செலுத்தும் முக்கியமான எல்லைச் சுகாதாரச் செயல்பாட்டை முன்னெடுக்கிறது. உலகின் பரபரப்பான எல்லைகளில் ஒன்றான ஜோகூர்-சிங்கப்பூர் கடற்பாலம், சாங்கி விமான நிலையம், துறைமுகங்கள் ஆகியவை இவற்றில் அடங்குகின்றன.

தடுப்பு நடவடிக்கைகளின் முதற்கட்டமாகப் பயணச் சுகாதாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் உள்ளூர்வாசிகளுக்குத் தேவையான தகவல்களையும் முன்னெச்சரிக்கை ஆலோசனைகளையும் வழங்குவதில் இது கவனம் செலுத்துகிறது.

“வெளியூர் செல்வதற்கு நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு முன் மருத்துவரை அணுகி, தேவையான தடுப்பூசிகள் அல்லது தடுப்பு மருந்துகளைப் பெறுவது பயணச் சுகாதாரத்தின் முக்கிய அங்கமாகும்.

“இது, அவர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது தங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், நோய்த்தொற்றுடன் இங்கு திரும்புவதற்கான அபாயத்தையும் குறைக்கிறது,” என்று திரு பிரேம் விளக்கினார்.

நடவடிக்கைகளின் இரண்டாவது கட்டம், எல்லைச் சுகாதாரம். இது, தற்போது சிங்கப்பூர் வருகை அட்டையின் ஒரு பகுதியாகக் கட்டாயமாக நிரப்ப செய்யவேண்டிய மின்னணுச் சுகாதார அறிவிப்பு அட்டையைச் பொறுத்து உள்ளது.

“அடிப்படையில் இது எங்களுக்கு ஒரு பரிசோதனைக் கருவி,” என்று திரு பிரேம் கூறினார்.

தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் பயணிகள், தங்களிடம் தென்படும் அறிகுறிகள் பற்றித் தெரியப்படுத்துவது அவசியம். இதுகுறித்து தவறான தகவலைக் கூறு சட்டவிரோதமாகும்.

வெளிநாட்டில் புதிய அச்சுறுத்தல் ஏற்படுவதைக் கண்காணிப்புத் தரவுகள் காட்டினால், தொற்றுநோய்கள் அமைப்பு அதனை விரைவாக மதிப்பீடு செய்து, மின்னணுச் சுகாதார அறிவிப்பு அட்டையில் மாற்றங்கள் செய்வது அல்லது கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற ஆதார அடிப்படையிலான முடிவுகளை எடுக்க முடியும்.

ஒரு பயணியிடம் எச்சரிக்கைக்குரிய தொற்றுக் குறியீடுகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டால் அவரின் சுகாதார நிலை உடனடியாக மதிப்பீடு செய்யப்படும்.

மஞ்சள் காய்ச்சல், மெர்ஸ் நோய், இபோலா போன்ற கவலைக்குரிய தொற்றுநோய்கள் பயணியிடம் உறுதிப்படுத்தப்பட்டாலோ சந்தேகிக்கப்பட்டாலோ, அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, அங்குத் தனிமைப்படுத்தப்பட்டு, அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதன்மூலம் சமூக அளவில் நோய்ப் பரவலும் தடுக்கப்படுவதாக திரு பிரேம் குறிப்பிட்டார்.

“இந்தப் பணிகளின் வெற்றிக்கு வலுவான பங்காளித்துவம் அவசியம்,” என்றார் இவர்.

சுகாதார அமைச்சு, குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சாங்கி விமான நிலையக் குழுமம் போன்ற எல்லை அமைப்புகளும் நாட்டின் நுழைவாயில்களில் செயலாற்றும் தனியார் மருத்துவச் சேவை வழங்குநர்களுடன் தொற்றுநோய்கள் அமைப்பு நெருக்கமாக இணைந்து செயல்படுகிறது.

நாட்டின் பெருந்தொற்றுத் தயார்நிலையை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் அமைப்பு கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு முக்கிய அம்சம், எதிர்காலத்திற்கேற்ற அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவதே.

உதாரணமாக, சாங்கி விமான நிலைய ஐந்தாம் முனையம், ‘பெருந்தொற்றுக்குத் தயார்நிலையில் உள்ள விமான நிலையம்’ என்ற அம்சத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

தொற்றுநோய்கள் அமைப்பும் சாங்கி விமான நிலையக் குழுமமும் இணைந்து பயணிகள் ஓட்டத்தைப் பிரித்தமைக்கும் திட்டங்கள், மேலும் அதிக அபாயமுள்ள பகுதிகளிலிருந்து வரும் விமானங்களுக்குத் தனி பிரிவுகள் போன்ற முன்னெச்சரிக்கை அம்சங்களை உருவாக்கி வருகின்றன.

பின்னணியில் அமைதியாகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை ஆழமாக உணர்ந்திருப்பதே ‘சிடிஏ’ அமைப்பு அதிகாரிகளின் பணிக்கு உற்சாகம் அளிப்பதாகத் திரு பிரேம் கூறினார்.

“எங்கள் ஒவ்வொரு செயலும், சிங்கப்பூரின் பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் முயற்சியின் ஓர் அங்கமாக விளங்குகிறது. இதுவே எங்களுக்கு ஊக்கம் தருகிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்