சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் துப்புரவுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட இயந்திர மனிதன் மின்னூட்டம் செய்யப்பட்டபோது தீப்பிடித்துக்கொண்டது.
இதையடுத்து, அந்த சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்த உள்நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஜூலை 8ஆம் தேதி இரவு 7 மணி அளவில் வார்டு 76ல் எச்சரிக்கை மணி ஒலித்ததாக சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
அங்கிருந்த நீர் தெளிப்பான் சாதனங்களிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆறாவது மாடியில் மூண்ட தீ அணைக்கப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
மருத்துவமனையின் தீயணைப்புப் பிரிவு சம்பவ இடத்தை அடைவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
புகை காரணமாக நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படாதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அனைவரும் மற்ற வார்டுகளுக்குத் தற்காலிகமாக அனுப்பிவைக்கப்பட்டதாக மருத்துவமனை கூறியது.
தீச்சம்பவம் காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அது தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை 8ஆம் தேதி இரவு 9 மணி நிலவரப்படி, பெரும்பாலான நோயாளிகள் வார்டு 76க்குத் திரும்பிவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.
நோயாளிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு மருத்துவமனை மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
இயந்திர மனிதன் தீப்பிடித்துக்கொண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

