கோவன் கூட்டுரிமை வீட்டில் தீ; மூவர் மருத்துவமனையில்

கோவன் கூட்டுரிமை வீட்டில் தீ; மூவர் மருத்துவமனையில்

2 mins read
a4805d1d-ed2b-448a-aa6c-62516c290f3b
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் செல்லும் முன்னர், கிட்டத்தட்ட 100 பேர் தீப்பற்றிய வீடு அமைந்துள்ள புளோக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.  - படம்: சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை/ஃபேஸ்புக்

கோவன் வட்டாரத்தில் உள்ள கூட்டுரிமை வீட்டில் தீ மூண்டதைத் தொடர்ந்து மூவர் மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கிருந்து மீட்கப்பட்ட ஆறு பேரில் அவர்களும் அடங்குவர்.

சம்பவம் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) அதிகாலை நடந்தது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, பின்னிரவு 2.30 மணியளவில் எண் 6, கோவன் ரைசில் தீ மூண்டது குறித்துத் தகவல் கிடைத்ததாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

அது கோவன் ரீஜென்சி கூட்டுரிமை வீட்டின் முகவரி என்பது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திற்குத் தெரியவந்தது.

குடிமைத் தற்காப்புப் படை, சம்பவ இடத்திற்குச் சென்றபோது 14ஆம் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் நெருப்பு மூண்டிருந்தது.

உதவி கேட்டு உள்ளே இருந்தவர்கள் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து தீயணைப்பாளர்கள் ஈரடுக்கு வீட்டிற்குள் புகுந்தனர்.

முதல் தளத்தில் நால்வரும் இரண்டாம் தளத்தில் இருவரும் மீட்கப்பட்டனர்.

முதல் தளத்தில் இருந்த சமையலறையிலும் வரவேற்பறையிலும் மூண்ட நெருப்பைத் தண்ணீரைப் பீய்ச்சித் தீயணைப்பாளர்கள் அணைத்தனர். வீட்டின் மற்ற சில பகுதிகளிலும் வெப்பத்தாலும் புகையாலும் சேதம் ஏற்பட்டது.

மீட்கப்பட்ட ஆறு பேரில் மூவர், புகையைச் சுவாசித்தனரா என்று சோதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன. மூவரும் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

எஞ்சிய மூவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படவில்லை.

குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் செல்லும் முன்னர், கிட்டத்தட்ட 100 பேர் தீப்பற்றிய வீடு அமைந்துள்ள புளோக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீப்பற்றியதற்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்