மூத்தோர்க்காக நடந்த முதல் கடல்நாகப் படகுப்போட்டி: 260 பேர் பங்கேற்பு

மூத்தோர்க்காக நடந்த முதல் கடல்நாகப் படகுப்போட்டி: 260 பேர் பங்கேற்பு

போட்டியில் பங்கேற்ற ஆக மூத்தவருக்கு 88 வயது
1 of 3
படம்: எஸ்பிஎச் ஊடகம்
படம்: எஸ்பிஎச் ஊடகம்
படம்: எஸ்பிஎச் ஊடகம்

14 Nov 2026 - 9:56 am

1 mins read

காலாங்கில் அமைந்துள்ள நீர் விளையாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) முதியோர்க்கான கடல்நாகப் படகுப் போட்டி முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

படகின் முகப்பில் கொட்டிய முரசொலி, படகோட்டிகளுக்கு ஊக்கமளித்தது. அதற்கு ஏற்றாற்போல கைகளில் பிடித்திருந்த துடுப்புகள் விறுவிறுப்பாக நீரை அழுத்திப் படகுகளை முன்னோக்கி வேகமாகச் செலுத்தின. அப்போது அதில் பங்கேற்ற முதியோரின் ஒரே எண்ணம் இறுதிக் கோட்டை முதலில் அடைவதில் மட்டுமே குறியாக இருந்தது.

மொத்தம் 260 முதியோர் போட்டியில் துடிப்புடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர். அவர்களின் வயது 60 முதல் 88 வரை என்று தெரிவிக்கப்பட்டது. படகை அவர்கள் செலுத்த வேண்டிய தூரம் 200 மீட்டர் ஆகும்.

மூத்தோருக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில் என்டியுசி அமைப்பின் துடிப்பான மூப்படைதல் நிலையங்களிலிருந்து 26 குழுக்கள் பங்கேற்றன. அப்போட்டியில் ஐந்து தகுதிச் சுற்றுகளும் இடம்பெற்றன.

இந்த முதியோருக்கான தனிப்பட்ட போட்டி ‘சிங்கப்பூர் ரெகத்தா வாட்டர்ஃவெஸ்ட் 2026’ எனப்படும் பல பிரிவுகள் உள்ளடங்கிய தொடரின் அங்கமாகும். என்டியுசி ஹெல்த், காலாங் அமைப்பு, சிங்கப்பூர் விளையாட்டு மன்றம், சிங்கப்பூர் கடல்நாகப் படகுச் சங்கம் ஆகியன அதனை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

முதியோருக்கான போட்டியில் பங்கேற்ற ஆக மூத்தவர் ரெட்ஹில் துடிப்பான மூப்படைதல் நிலைய அணியைச் சேர்ந்த 88 வயதான திரு லாம் ஹாங் தோங்.

குறிப்புச் சொற்கள்