சிந்தனையை உணவின்மீது வைத்து ரசித்துண்பதே ஆரோக்கியமானது

உணவை ரசித்து உண்டால் ருசி கூடும்

சிந்தனையை உணவின்மீது வைத்து ரசித்துண்பதே ஆரோக்கியமானது

ஒரு நாளில் ஒரு வேளையாவது கைப்பேசி, தொலைக்காட்சி இன்றிப் பத்து நிமிடங்கள் அமைதியாக உண்ணப் பழக வேண்டும்
1 of 2
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
கோப்புப் படம்: தப்லா

25 Nov 2026 - 5:20 am

2 mins read

கைப்பேசியைப் பார்த்தபடியோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டோ உணவு உண்பதால், நாம் கடைசியாக என்ன சாப்பிட்டோம் என்பதைக்கூட நினைவில் வைத்துகொள்ள முடிவதில்லை.

கவனமின்றி அவசரமாகச் சாப்பிடுவது மனநிறைவின்மையையும் குற்றவுணர்வையும் ஏற்படுத்தலாம்.

இதைப் போக்க உணவின் சுவை, மணம், தன்மை ஆகியவற்றில் முழுக் கவனத்தையும் செலுத்தி உண்பது உதவும்.

இது உடலில் சேரும் கொழுப்புச் சத்து, நார்ச்சத்து போன்றவற்றைக் கணக்கிடும் உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம் அல்ல.

அதற்கு மாற்றாக உணவை உண்பதற்கு முன்பும் உண்ணும்போதும், உண்ட பின்பும் உடல் எவ்வாறு அதற்கேற்ப மாற்றங்களை உணர்கிறது என்பதையும், பசி, வயிறு நிரம்பிய அறிகுறிகள் போன்றவற்றில் கவனம் செலுத்துவதும் இதன் அடிப்படையாகும்.

உணவுகளில் நல்லவை, கெடுதலானவை எனப் பிரித்துப் பார்க்கும் தன்மை தேவையற்ற குற்ற உணர்வைத் தூண்டலாம்.

அதற்குப் பதிலாக, உணவை ரசித்து, ருசித்து உண்டோமா எனக் கேள்வி எழுப்பலாம்.

இப்பழக்கத்தைத் தொடங்க வாழ்க்கை முறையை அடியோடு மாற்ற வேண்டியதில்லை. சிறிய அளவில் சில மாற்றங்களைச் செய்துவந்தாலே போதுமானது.

ஒருநாளில் குறைந்தபட்சம் ஒருவேளை உணவையாவது கைப்பேசியை அல்லது தொலைக்காட்சியைப் பார்க்காமல் பத்து நிமிடங்கள் அமைதியாக ருசித்து உண்ணலாம்.

முதல் வாய் உணவை உட்கொள்ளும் முன் நாம் உண்ணப் போகும் உணவை ரசித்துப் பார்க்க வேண்டும்.

மனித மூளை ஒரு மனிதரின் வயிறு நிரம்பியதை உணர்வதற்கு இருபது நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். எனவே, உணவை மெதுவாக மென்று உண்ணப் பழக வேண்டும்.

பாதி அளவு சாப்பிட்டதும் பசியின் அளவைச் சரிபார்த்துக்கொள்வதும், விரும்பி உண்ணும் உணவுகளை அளவோடு குற்ற உணர்வின்றி உண்பதும் முக்கியம்.

குடும்பத்தினர், நண்பர்கள் சூழ உணவு உண்ணும்போது, சாப்பிடும் வேகத்தை நாம் இயல்பாகவே குறைக்கலாம்.

கவனத்துடன் சிறு அளவு உணவு உண்பதுகூட அதிக அளவில் மனநிறைவைத் தரும்.

உணவினால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள், ஒவ்வாமை, நீரிழிவு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளோர் மருத்துவர் அல்லது உணவியல் வல்லுநரின் ஆலோசனைப்படி உணவு முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ரசித்து, ருசித்துண்ணும் பரிந்துரைகள் மருத்துவச் சிகிச்சைக்கு மாற்றாக அமையாது.

குறிப்புச் சொற்கள்