வரலாறு காணாத அளவிலான பக்தர்களின் பங்கேற்புடன் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இவ்வாண்டு 19,000க்கும் அதிகமான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், 349 பக்தர்கள் காவடி சுமந்தும் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.
இது, தைப்பூசத் திருவிழா வரலாற்றிலேயே பதிவான மிக அதிக எண்ணிக்கையாகும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (ஜனவரி 31) இரவு ஏறத்தாழ 11.20 மணிக்கு பால்குடங்கள் சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலை நோக்கி வரிசையாகப் புறப்பட்டன. பின்னர், அலகுக் காவடிகள் அதிகாலை 3.15 மணிக்குப் புறப்பட்டன.
இந்த ஊர்வலம் பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) இரவு வரை தொடரும்.
கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், காலை கிட்டத்தட்ட 8 மணியளவில் பெருமாள் கோயிலுக்கு வருகை தந்து, பக்தர்களுடன் இணைந்து திருவிழாவில் பங்கேற்றார்.
தம் துணைவியாருடன் பால்குடம் ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற அவர், வழியில் இருந்த பக்தர்கள், தொண்டூழியர்களுடன் கலந்துரையாடினார்; பின்னர் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலை அடைந்து அங்கு வழிபட்டார்.
“பக்தர்களுடன் இணைந்து நானும் நடந்து வந்ததால் அவர்களின் அனுபவத்தை என்னால் உணர முடிந்தது. போக்குவரத்துச் சந்திப்புகள் போன்ற சில இடங்களில் வரிசைகள் காணப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக இவ்வாண்டு ஏற்பாடுகள் மிகவும் சீராக இருந்தன,” என்று செய்தியாளர்களிடம் திரு தினேஷ் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டைவிட பக்தர்களின் எண்ணிக்கை 20 முதல் 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வரிசை மேலாண்மை இம்முறை சிறப்பாகத் திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறினார்.
“சென்ற ஆண்டு நீண்ட தொலைவிற்கு வரிசைகள் இருந்தன. ஆனால் இம்முறை, இரண்டு கோயில் நிர்வாகங்களும் ஒருங்கிணைந்து அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் தடையின்றித் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்த வழிவகை செய்துள்ளன,” என்று திரு தினேஷ் விளக்கினார்.
இவ்வாண்டு செய்யப்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்று, தெண்டாயுதபாணி கோயிலில் அமைக்கப்பட்ட கூடுதல் நுழைவு, வெளியேற்ற வழிகளாகும்.
இதற்குமுன், பக்தர்கள் முதன்மை வாயில் வழியாக மட்டுமே நுழைய முடிந்தது. ஆனால் இம்முறை பக்கவாட்டு வாயில் ஒன்று திறக்கப்பட்டதால், பால்குடம் ஏந்தி வந்த பக்தர்கள் விரைவாகச் செல்ல முடிந்தது. அதேபோல், வழிபாட்டிற்குப் பிறகு வெளியேறவும் தனி வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது.
“முதியவர்கள், நீண்ட தொலைவு நடக்க இயலாதவர்களுக்கெனத் தனிப்பாதை அமைக்கப்பட்டதால், அவர்கள் கூட்டத்தில் சிக்காமல் எளிதாகச் செல்ல முடிந்தது,” என்றார் துணையமைச்சர்.
இந்தச் சீர்திருத்தங்கள் இந்து அறக்கட்டளை வாரியம், இரு கோயில் நிர்வாகங்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது என்றும் பக்தர் ஒருவர் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டத்தை நிர்வகிப்பதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகித்ததாக இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக முதன்முறையாகத் தைப்பூச விழாவை முன்னின்று நடத்திய திருவாட்டி சரோஜினி பத்மநாதன் தெரிவித்தார்.
“கியூஆர் குறியீடு, நேர வரம்பு முறையைப் பயன்படுத்தி பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் கோயிலிற்குள் நுழைவதை உறுதிசெய்தோம்,” என்றார் அவர்.
இணையம் வாயிலான முன்பதிவு இடங்கள் முழுமையாக நிரம்பியதைத் தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க நேரடி முன்பதிவும் கூடுதல் நேர வரம்புகளும் வழங்கப்பட்டன.
“எந்தவொரு பக்தரும் நேர்த்திக்கடன் செலுத்தாமல் திரும்பக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்,” என்று திருவாட்டி சரோஜினி கூறினார்.
நேரடிப் பதிவின்வழி வழங்கப்பட்ட புதிய இடங்கள் அனைத்தும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த நடவடிக்கை பக்தர்களுக்கு நம்பிக்கையூட்டியதுடன், ஆரம்பகட்டத் திட்டமிடல் முறை சரியானது என்பதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பக்தர்களிடமிருந்து கிடைத்துள்ள கருத்துகள் ஊக்கமளிப்பதாக உள்ளன என்றும் அவர் சொன்னார்.
“பக்தர்களால் வசதியாக அமர்ந்து, நிம்மதியாக வழிபட முடிந்தது. கூட்ட நெரிசலின்றிப் பால்குடங்களைச் சுமந்து செல்லவும் முடிந்தது. இதுவே இந்த விழாவின் வெற்றிக்கான ஓர் அளவுகோலாகக் கருதுகிறேன்,” என்றார் அவர்.
இவ்வாண்டு அனுபவங்கள், அடுத்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவிற்கு மேலும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய வழிகாட்டும் என்றும் அவர் கூறினார்.
நாள் முழுவதும் இன்னும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், நிலவரத்தை உடனுக்குடன் கண்காணித்து வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

