தீயில் சிக்கிய மின்சார வாகனங்களைக் கையாளும் ரோபோ

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அறிமுகம்

தீயில் சிக்கிய மின்சார வாகனங்களைக் கையாளும் ரோபோ

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

28 Oct 2026 - 8:01 pm

2 mins read

சிங்கப்பூரில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவற்றுடன் தொடர்புடைய தீச்சம்பவங்களை உடனடியாகவும் பாதுகாப்பாகவும் கையாள்வதற்காகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது புதிய தொழில்நுட்பச் சாதனங்களை வலுப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் எக்ஸ்போ மையத்தில் நடைபெற்ற ‘சிடெக்ஸ்’ (SIDEX) பேரிடர், அவசரகால மேலாண்மை அனைத்துலகக் கண்காட்சியில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் புதிய வாகன மீட்பு இயந்திர மனிதக் கருவி (விஆர்எக்ஸ் ரோபோ) புதன்கிழமை (அக்டோபர் 28) அறிமுகம் கண்டது.

சிங்கப்பூர் எக்ஸ்போ மையத்தில் நடைபெற்ற ‘சிடெக்ஸ்’ அவசரகால மேலாண்மை அனைத்துலகக் கண்காட்சியில் உரையாற்றிய உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன்.
சிங்கப்பூர் எக்ஸ்போ மையத்தில் நடைபெற்ற ‘சிடெக்ஸ்’ அவசரகால மேலாண்மை அனைத்துலகக் கண்காட்சியில் உரையாற்றிய உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ‘உருமாற்றம் 2030’ தொலைநோக்குத் திட்டத்தைக் குறிப்பிட்டு நிகழ்ச்சியில் உரையாற்றிய உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன், எதிர்பாராத அவசரநிலைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் முதன்மை நோக்கம் என்றார்.

புதிய ஆபத்துகள் உருவெடுத்து வரும் நிலையில், சவால்களை முன்னதாகவே கணித்துத் தற்காப்பு ஆற்றலை மேம்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

விஆர்எக்ஸ் ரோபோவின் ‘வாட்டர் மிஸ்ட்’ நீர்த் தெளிப்பு அமைப்பு,  வெப்பத்திலிருந்து அதைப் பாதுகாப்பதுடன் வாகனம் மீண்டும் தீப்பற்றி எரியும் அபாயத்தையும் தணிக்கிறது.
விஆர்எக்ஸ் ரோபோவின் ‘வாட்டர் மிஸ்ட்’ நீர்த் தெளிப்பு அமைப்பு, வெப்பத்திலிருந்து அதைப் பாதுகாப்பதுடன் வாகனம் மீண்டும் தீப்பற்றி எரியும் அபாயத்தையும் தணிக்கிறது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பதிவு செய்யப்பட்ட புதிய கார்களில் 57.6 விழுக்காடு மின்சார வாகனங்கள்.

மின்சார வாகனங்களின் லித்தியம்-அயன் மின்கலம் ‘தெர்மல் ரன்அவே’ எனப்படும் கட்டுப்பாடற்ற வெப்பநிலை அதிகரிப்பிற்கு உள்ளாக வாய்ப்புள்ளது. தீ அணைக்கப்பட்ட பிறகும்கூட, அந்த மின்கலன்கள் மீண்டும் தீப்பிடிக்கும் ஆபத்து நிலவுவதால், தீயணைப்பு வீரர்களுக்கு இது புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

இதனை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டுள்ள விஆர்எக்ஸ் ரோபோவை 300 மீட்டர் தொலைவில் இருந்து இயக்க முடியும். தீ அணைக்கப்பட்ட மின்சார வாகனங்களை, மூடிய வாகன நிறுத்துமிடங்கள் போன்ற இடங்களிலிருந்து திறந்தவெளிப் பகுதிக்கு உடனடியாக இழுத்து வர இந்த ரோபோ பயன்படுகிறது.

இதில் பொருத்தப்பட்டுள்ள ‘வாட்டர் மிஸ்ட்’ நீர்த் தெளிப்பு அமைப்பு, வெப்பத்திலிருந்து ரோபோவைப் பாதுகாப்பதுடன் வாகனம் மீண்டும் தீப்பற்றி எரியும் ஆபத்தையும் தணிக்கிறது.

திறந்தவெளிக்கு வாகனம் கொண்டுவரப்பட்ட பிறகு, தீயணைப்பாளர்கள் மற்ற தானியங்கி இயந்திரங்கள் மூலம் வாகனத்தைக் குளிரூட்டும் பணிகளை மேற்கொள்வர்.

இந்த புதிய விஆர்எக்ஸ் ரோபோவின் செயல்பாட்டு சோதனைகள் அக்டோபரில் பொங்கோல் தீயணைப்பு நிலையத்தில் தொடங்கப்பட்டது. காலாங் தீயணைப்பு நிலையத்தில் அடுத்த ஏப்ரலில் தொடங்கும்.

உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆணையாளர் எரிக் யாப் (வலது) உடன் சேர்ந்து ‘7E தலைமுறை’ அவசரகால வாகனத்தின் செயல்திறன் செயல்முறை விளக்கத்தைப் பார்வையிடுகிறார்.
உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆணையாளர் எரிக் யாப் (வலது) உடன் சேர்ந்து ‘7E தலைமுறை’ அவசரகால வாகனத்தின் செயல்திறன் செயல்முறை விளக்கத்தைப் பார்வையிடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசிய பேரிடர் குறைப்பு மாநாடு, ஆசிய தீ பாதுகாப்பு மாநாடு ஆகியவற்றுடன் இணைந்து நடைபெற்ற ‘பேரிடர், அவசரகால மேலாண்மை அனைத்துலகக் கண்காட்சியில் ‘7E தலைமுறை’ (Generation 7E) அவசர மருத்துவ வாகனத்தின் செயல்திறன்செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.

இந்த அவசர மருத்துவ வாகனம் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட நோயாளி அறையைக் கொண்டுள்ளது. அதிக இடவசதியைக் கொண்ட இந்த வாகனம், அதிக நகரும் திறன் கொண்ட பாதுகாப்பு வார்களுடன் கூடிய பக்கவாட்டு இருக்கைகள், எடைகுறைந்த தூக்குப்படுக்கையை ஏற்றும் அமைப்பு ஆகிய சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்