சிங்கப்பூரில் படிப்பதற்கான உபகாரச் சம்பளம் வழங்கும் திட்டம் பாலஸ்தீன மக்களுக்கு உதவும் பல்வேறு முயற்சிகளில் ஒன்று என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
பாலஸ்தீன உபகாரச் சம்பளம் பெற்ற மூவரை வியாழக்கிழமை (அக்டோபர் 9) அவர் சந்தித்தார். இருவர் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்கின்றனர். மற்றவர் சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக்கழகத்தில் இளநிலைப் பட்டக் கல்வி படிக்கிறார்.
மாணவர் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு சண்முகம், நிதி மற்றும் மக்களுக்குத் தேவையான பொருள்களைத் திரட்டுவது போன்ற, காஸா மக்களுக்கு உதவும் மற்ற பல முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவளிப்பது பற்றிக் குறிப்பிட்டார். அந்தப் பொருள்களை சிங்கப்பூர் ஆகாயப் படை வான் வழியாக மக்களுக்குப் போடுகிறது.
“களத்தில் உள்ளவர்கள் கடினமாகவும் ஆக்கபூர்வமாகவும் பாடுபடுகிறார்கள். அரசாங்கமும் கைகொடுக்கிறது. அனைவரும் ஒரு சமுதாயமாக இணைந்து பணியாற்றுகிறோம். மாணவர்களை ஒன்றிணைக்க, ஒன்றுபட்ட மக்கள் மேற்கொண்ட மிகவும் நல்ல முயற்சி இது,” என்று திரு சண்முகம் கூறினார்.
உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு அரசாங்கம் ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
சிங்கப்பூர் சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறது. நல்ல மாணவர்கள் இங்கு படிப்பதில் சிங்கப்பூர் மகிழ்ச்சியடைகிறது. அவர்கள் திரும்பிச் சென்று பங்களிக்க முடியும்.
அனைவரும் சுதந்திர பாலஸ்தீனிய அரசைப் பார்க்க விரும்புகிறோம். அதற்கு நிர்வாகிகள் தேவை. நாட்டை வழிநடத்தக்கூடியவர்கள் தேவை என்றார் அவர்.
உபகாரச் சம்பளம் பெற்ற மாணவர்கள் பல யோசனைகளைக் கொண்ட இளைஞர்கள்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் திரும்பிச் செல்லும்போது, சிங்கப்பூருக்கும் பாலஸ்தீனத்திற்கு இடையே பாலமாகச் செயல்படுவார்கள். அவர்கள் திரும்பிச் சென்று, குறிப்பிடத்தக்க வழிகளில் தங்கள் சமூகத்திற்கு மீண்டும் பங்களிப்பார்கள் என்று நம்புவதாக தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சண்முகம் கூறினார்.
இங்குள்ள மாணவர்கள், அவர்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமும், பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்துகொள்வதன் மூலமும், சிங்கப்பூரும் அனுகூலம் பெறும் என்றார் அவர்.
பாலஸ்தீன உபகாரச் சம்பளத் திட்டம் 2024 அக்டோபரில் தொடங்கப்பட்டதிலிருந்து, ‘ரே ஆஃப் ஹோப்’ நிதி திரட்டு தளத்தின் மூலம் திரட்டப்பட்ட $370,000க்கும் அதிகமான தொகையுடன் தனியார் நன்கொடையாளர்களிடமிருந்து பெற்ற $140,000 தொகையுடன் மொத்தம் $510,000க்கும் அதிகமாக திரட்டப்பட்டுள்ளதாக புதன்கிழமை (அக்டோபர் 8) அது வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
காஸாவைச் சேர்ந்த நான்கு பாலஸ்தீன மாணவர்களுக்குச் சிங்கப்பூரில் படிக்க முழு உதவித்தொகை வழங்கப்பட்டது.
உபகாரச் சம்பளதுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் மூவர் காஸாவிலிருந்து வெளியேறியிருந்தாலும், நான்காவது மாணவரால் இந்தக் கல்வியாண்டு தொடங்கும்போது இங்கு வர முடியவில்லை. எனினும், அடுத்த கல்வி ஆண்டில் அந்த இடத்தை வழங்க என்யுஎஸ் முன்வந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
மாணவர்களின் பயணச் செலவு, ஒருமுறை குடியேறும் படித்தொகை, தங்குமிடம், பல்கலைக்கழக கட்டணம், மடிக்கணினிகள், மாதாந்திர உதவித் தொகைகள் ஆகியவற்றுக்குத் திரட்டப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டுகிறது.
ஒவ்வொருவரும் இரு அர்ப்பணிப்புள்ள நண்பர்களுடன் இணைக்கப்படுவார்கள். அவர்கள் அம்மாணவர்கள் இங்கு தங்களைப் பொருத்திக்கொள்ள உதவுவார்கள்.