தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தமிழ்ச் சமூகத்திற்கான ஒரு புதிய அத்தியாயம் விரைவில்

காலத்தை வென்ற வரலாற்றைக் கூறும் ‘சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்’

7 mins read
7fbe8f82-2c44-41b5-8ce0-505632c42d7d
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகியும் தொகுப்பின் ஆசிரியருமான திரு அருண் மகிழ்நன் (இடது), தொகுப்பின் உதவி ஆசிரியர் திரு சிவானந்தம் நீலகண்டன் (நடு), தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் தலைவரும் தொகுப்பின் துணை ஆசிரியருமான து. அழகிய பாண்டியன் (வலது). - படம்: சுந்தர நடராஜ்

இருநூறு ஆண்டுகால தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ள சிங்கப்பூர்த் தமிழ்மக்கள் விரைவில் தங்களுக்கெனப் புதிய கலைக்களஞ்சியம் ஒன்றைப் பெறவுள்ளனர்.

சிங்கப்பூர்த் தமிழ் மக்களின் வரலாற்றை மட்டுமல்லாது சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என அவர்களின் வாழ்வியல் களத்தைக் குறித்த பதிவுகளை ஏந்தி வரும் இந்தப் புதிய கலைக்களஞ்சியத்தை சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம், தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து விரைவில் வெளியிட உள்ளது.

சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகம் கடந்து வந்த பாதையை விவரிக்கும் தெளிவான கண்ணோட்டத்தை வழங்கும் வகையில் மின்தளத்தில் வலம்வரவுள்ள இந்தப் புதிய வளத்தின் நோக்கம் யாது, அதன் பின்னணியில் உள்ள கூட்டு முயற்சிகள் யாவை எனப் பல்வேறு தகவல்களை சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகி திரு அருண் மகிழ்நன் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.

முன்னோடி முயற்சி 

“சிங்கப்பூர்த் தமிழர் பற்றிய முழுமையான வரலாறு இன்னும் ஏட்டில் இல்லை. எடுத்தவுடன் சிங்கப்பூர்த் தமிழர்களின் வரலாறு என்று எழுதாமல் அதற்கு ஓர் அடித்தளம் அமைத்து சிங்கப்பூர்த் தமிழர்கள் குறித்த செய்திகளை எல்லாம் ஒரே இடத்தில் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது. அதன் விளைவுதான் இந்த சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்.

“குறிப்பிட்ட இந்தக் கருப்பொருளில் உருவான வேறு எந்தக் கலைக்களஞ்சியமும் இங்கு இல்லை, பல ஆளுமைகள் பற்றிய தொகுப்புகள் உண்டு. எனவே, இந்த இடைவெளியைக் களையும் முயற்சியாக சிங்கப்பூர்த் தமிழர்களுடைய வாழ்க்கை எந்தெந்த தளங்களில் எல்லாம் பதிவாகி உள்ளது என்பதைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தைத் தரும் இலக்குடன் 200 ஆண்டு தமிழர் வரலாற்றினை அறிமுகம் செய்யும் கலைக்களஞ்சியமாக இந்தத் தொகுப்பு வெளியீடு காண்கிறது,” என்று விவரித்தார் திரு அருண் மகிழ்நன்.

விரைவில் நிறுவப்படவுள்ள இந்தக் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியருமான திரு அருண் மகிழ்நன், இந்த முயற்சிக்குச் செயல்வடிவம் கொடுக்க எண்ணிய மாத்திரத்தில் தாம் தட்டிய முதல் கதவு தேசிய நூலக வாரியத்தினுடையது என்றார்.

ஊர் கூடி இழுத்த தேர்

தனிமனித முயற்சி என்றால் ஓரளவுக்குத்தான் வெற்றிபெறும். அரசாங்க அமைப்பின் ஆதரவும் பங்களிப்பும் இருந்தால் அதன் வெற்றி நிரந்தரமாகவும் வலுவான கட்டமைப்பு கொண்டதாகவும் இருக்கும்.

“அந்த நம்பிக்கையில்தான் தேசிய நூலக வாரியத்தை அணுகினோம். அவர்களும் இணைந்து செயல்படத் தங்களின் ஆதரவை உடனடியாக நல்கினர். வாரியத்தின் தலைமைத்துவம் இந்தத் திட்டத்திற்கு அளித்த ஆதரவு அளப்பற்கரியது,” என்றார் திரு அருண் மகிழ்நன். 

இந்த ஒத்துழைப்பு, தமிழர் வரலாறு பேசும் இந்தத் தொகுப்பிற்கு உயர்தர அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதோடு இந்த வளம் நெடுங்காலம் நீடித்தும் நிலைத்தும் இருக்க வழிசெய்யும் என்றும் கூறினார் அவர். 

அநேக சமூக அமைப்புகள் இம்முயற்சிக்குப் பேராதரவு வழங்கின என்றும் குடிமக்களின் பங்கும் இதில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பண்டிதருக்கானது அல்ல 

சிங்கப்பூர்த் தமிழ் மக்களின் வாழ்வியல் சூழல்களுக்கான அறிமுகமாக அரங்கேற இருக்கும் இந்தக் கலைக்களஞ்சியம், நூல் வடிவத்தில் அல்லாமல் மின்வளமாக நிறுவப்படவேண்டும் என்பது  இத்திட்டத்தின் ஆரம்ப நாள்களிலேயே முடிவு செய்யப்பட்டது. 

இது குறித்த காரணங்களைச் சுட்டிய திரு அருண் மகிழ்நன், “நூலாக வெளியிட வேண்டும் என்றால் மில்லியன் கணக்கில் செலவாகும். ஒருவேளை அதையும் ஏற்று வெளியீடு செய்தாலும் அதனை எத்தனை பேர் படிக்கப் போகிறார்கள் என்பதே கேள்வி,” என்றார்.

“நூல் வடிவமாக இருந்தால் பெரும்பாலான சிங்கப்பூர்த் தமிழர்கள் அதைப் பார்க்கப் போவதில்லை என்பது என் அனுபவத்தில் நான் கண்டது. மேலும், பெரும் தொகுப்பாக அதனை அறிமுகம் செய்யும்போது அதற்கான தயாரிப்புச் செலவைக் காட்டிலும் அதனைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு குறைவு. 

“எனவேதான் இதை மின்தளத்தில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தோம். தேசிய நூலக வாரியத்தை அணுகியதற்கும் அதுவே காரணம். ஏனெனில் அதற்கான தளமும் வளமும் அவர்களிடம் உள்ளன,” என்று தெரிவித்தார் திரு அருண் மகிழ்நன்.

சிங்கப்பூருக்கு ரஃபிள்ஸ் வந்ததில் துவங்கி அண்மைய காலகட்டம் வரையில் நிகழ்ந்துள்ள தமிழ் மக்கள் சார்ந்த பலதரப்பட்ட முக்கியத் தகவல்களை இக்கலைக்களஞ்சியம் சிறுகுறிப்புகளாக வாசகர்களுக்குத் தரவுள்ளது.

“இந்தக் களஞ்சியம் பண்டிதர்களுக்கும் வல்லுநர்களுக்கும் உரியதல்ல, தமிழ் மக்களின் வாழ்க்கைச் சுவடுகளைப் புரட்டிப்பார்க்க நினைக்கும் எந்தவொரு சாமானிய மக்களுக்குமானது,” என்றார் திரு அருண் மகிழ்நன்.

ஒருவேளை இந்தத் தொகுப்பில் ஏதேனும் பிழையை யாரேனும் எப்போதேனும் கண்டுபிடித்தால் அதை உடனடியாக அமைப்பாளர்களிடம் தெரிவிப்பதற்கான வசதியும் இருக்கிறது. இதனால் பிழைகளை உடனடியாகத் திருத்திடலாம்.  

“இதை நூலாக வெளியிட்டிருந்தால் மறுபதிப்பு செய்யும் வரை காத்திருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான் இதை மின்தளத்தில் உருவாக்கி வருகிறோம்,” என்று மேலும் கூறினார் திரு அருண் மகிழ்நன்.

“வரலாற்றை எழுதும்போது எவையெல்லாம் சேர்க்கிறோம் என்பது மிகவும் முக்கியம். கால அவகாசம் கருதி பல தலைப்புகள் இடம்பெறாமல் இருந்தாலும் இந்த வளம் நீடித்து வாழும் வளமாக திகழப்போவதால் நமக்குக் கிடைக்க இருக்கும் தகவல்களைக் காலபோக்கில் இக்களஞ்சியத்தில் சேர்க்க இயலும்,” என்றார்.

இந்தத் தொகுப்பை முடிவுபெறாத ஒரு பயணம் என்று குறிப்பிட்ட திரு அருண் மகிழ்நன், பொதுமக்களும் நூலக வாரியமும் ஆதரவு தரும் வரையில் இந்த கலைக்களஞ்சியம் காலத்தை வென்று வாழும் என்றார்.

நாட்டின் 60வது பிறந்தநாளுக்கு இந்த அன்புப் பரிசு   

சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியத்தின் உருவாக்கத் திட்டத்தில் தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் இரண்டும் இணைந்து பணியாற்றும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி வெளியானது.

அன்றிலிருந்து இன்றுவரை இதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. அருண் மகிழ்நன் எனும் தனிமனிதரின் கனவு இன்று சமூகத்தின் அடையாளமாக மாற நூலகம் ஆதரவுக்கரம் நீட்டியதன் பின்னணி குறித்து தமிழ் முரசிடம் பேசினார் திரு அழகிய பாண்டியன்.

“2015ம் ஆண்டில் சிங்கப்பூரின் 50வது ஆண்டுக் கொண்டாட்டம் நடந்தபோது திரு அருண் மகிழ்நனின் முயற்சியில் சிங்கப்பூரின் ஐம்பது ஆண்டுகால தமிழிலக்கியத்தை மின்மயமாக்கும் திட்டத்தில் தேசிய நூலக வாரியம் இணைந்து செயலாற்றியது.  

“அப்போது நான் நூலக வாரியத்தில் இல்லை. ஆனால், அந்தத் திட்டத்தில் நான் தொண்டூழியராக இருந்தேன். மேலும், சிங்கப்பூர்த் தமிழர் கலைகள் மற்றும் மரபுடைமை சார்ந்த நான்கு மின்மயமாக்கும் திட்டங்களைக் கடந்த பத்தாண்டுகளில் திரு அருண் தலைமையில் நூலக வாரியம் நிறுவியுள்ளது.

“அருண் எந்தவொரு திட்டத்தை முன்மொழிந்தாலும் அதை வெறும் ஆசையாக மட்டுமே எடுத்துக்கூறாமல் அதற்கான ஆழமான தொலைநோக்குப் பார்வை, வரைவு, ஆய்வு நோக்கம் என்று அடிப்படையான அத்தனை வழிகளையும் ஆராய்ந்தறிந்து முன்வைப்பார்.

“எனவே, இதில் கிடைத்த நம்பிக்கைதான் சிங்கப்பூர்த் தமிழர் குறித்த மற்றொரு மின்மயத்  திட்டத்தை அவர் முன்வைத்தபோது எந்தவொரு தயக்கமுமின்றி முன்னெடுத்துச் செல்ல வகைசெய்தது,” என்றார் திரு பாண்டியன்.

தனித்துவமிக்க படைப்பு

சிங்கப்பூர் குறித்த ஏராளமான தகவல் களஞ்சியங்கள் நூலகத்தின் இணையத்தளத்தில் இருந்தாலும் சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் முற்றிலும் தனித்துவமானது என்றார் திரு பாண்டியன்.

“நூலகம் நிறுவவுள்ள முதல் இருமொழி கலைக்களஞ்சியம், சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இவ்வாறு இருமொழியில் வெளியீடு கண்ட தொகுப்புகள் வேறு எதுவுமில்லை.

“சீனம் அல்லது ஆங்கிலம் என்று தனித்தனி மொழிகளில் உள்ளன. ஆனால், ஒரே தொகுப்பில் தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளும் இடம்பிடித்திருப்பது இதுவே முதன்முறை,” என்றார் தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் து. அழகிய பாண்டியன்.

எனவே, இம்முயற்சி தங்களின் தொழில்நுட்பக் குழுவுக்குச் சற்று சவாலாக இருந்தாலும் இந்தப் புதிய பயணம் ஆங்கிலத்திற்கு இணையாக, கலைக்களஞ்சியம் தமிழிலும் கட்டுரைகளைக் கொண்டிருக்க உதவிடும் என்றார்.

ஒவ்வொரு தலைப்பின் கீழும் அதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோருக்கு இணைய மேற்கோள்களும் இடம்பெறவுள்ளன என்ற தகவலையும் திரு பாண்டியன் தெரிவித்தார்.

அனைத்துலக அளவில் பயனர்கள் எங்கிருந்தாலும் கலைக்களஞ்சியத்தை எளிதில் படிப்பதற்கு ஏதுவான அறிவார்ந்த உத்திகள், திட்டத்திற்கான தளம், தொழில்நுட்ப ஆதரவு என இந்தத் தொகுப்பு நேர்த்தியாக வெளிவர, புத்தாக்கமிக்க பேராதரவை தேசிய நூலக வாரியம் அயராது அளித்து வருகிறது.

“முழுவீச்சில் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கலைக்களஞ்சியம் இன்றிலிருந்து சரியாக ஆறுமாதம் கழித்து ஆகஸ்ட் 2ஆம் தேதி தேசிய நூலக வாரியத்தில் வெளியிடப்பட உள்ளது,” என்று குறிப்பிட்ட திரு பாண்டியன் “இந்த ஆண்டின்  60வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் நம் நாட்டிற்கான அன்புப் பரிசு, இந்த வாழும் கலைக்களஞ்சியம்,” என்றார். 

சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம் - ஒரு பார்வை

சிங்கப்பூர் வரலாற்றில் தமிழ் மக்களுக்கான முதல் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் திட்டம், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.

மின்தளத்தில் தோற்றுவிக்கப்படும் இந்தத் தமிழர் கலைக்களஞ்சியத்திற்கான முதல் வித்திட்டவர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகி திரு அருண் மகிழ்நன்.

சிங்கப்பூர்த் தமிழர் வரலாறு சரியாக எழுதப்படாததற்கு ஒரு காரணம், வரலாற்றைப் பற்றிப் போதுமான ஆய்வுகளோ ஆய்வாளர்களோ இல்லை என்பதே. இதனால், கிடைக்கும் தரவுகளையும் இருக்கும் தகவல்களையும் கொண்டு இந்தத்  திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு அமைப்பினர்.

நீடித்து வாழும் களஞ்சியமாக இது தொடர வேண்டும் எனும் நோக்கத்தில் தேசிய நூலக வாரியத்தின் பேராதரவுடன் மின்தளத்தில் வெளியீடு காண்கிறது, இந்தப் படைப்பு.

பொருளோ, பாராட்டோ எதுவும் வேண்டாம், தமிழ் மக்களின் வரலாற்றுக்கு வடிவம் கொடுத்தால் போதும் என்ற உன்னத நோக்குடன் இப்பணியின் ஜீவநாடியாக நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் செயலாற்றி வருகின்றனர்.

சிங்கப்பூரில் அநேக அமைப்புகளில் (இலக்கியம், சமயம் உள்ளிட்ட அமைப்புகள்) அவர்களிடமே அவர்களுக்கான சரியான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை என்பது மூன்றாண்டு பணிகளில் ஆசிரியர் குழு கண்டறிந்த உண்மை.

வரலாற்றின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு பொருத்தம், உள்ளடக்கம், அதன் முக்கியத்துவம் மற்றும் அது மக்களைச் சென்றடையும் விதம் ஆகியவற்றைக் கணித்து கலைக்களஞ்சியத்தில் இடம்பெறவுள்ள தலைப்புகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

தலைப்புகளை ஒட்டி எந்தெந்தச் செய்திகள் கிடைக்கின்றனவோ, அவற்றை வைத்து களஞ்சியம் உருவாகி வருகிறது. குறிப்பிட்ட தலைப்புகளில் குழுவிற்குக் கிடைக்காத செய்திகள் பின்னொரு நாளிலே இந்த வாழும் கலைக்களஞ்சியத்தில் சேரவுள்ளன.

முழுமையான வரலாற்றை எடுத்தியம்பும் தொகுப்பாக இல்லாமல் தமிழர் காலடித் தடம் பதித்த அநேக தளம் குறித்த சிறு அறிமுகமே இந்தக் களஞ்சியம். 

சிங்கப்பூரின் 60வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டுக்கு அன்பளிப்பாக உருவெடுத்து வருகிறது இந்த சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்.

சிங்கப்பூர்த் தமிழர் பற்றிய முழுமையான வரலாறு இன்னும் ஏட்டில் இல்லை. எடுத்தவுடன் சிங்கப்பூர்த் தமிழர்களின் வரலாறு என்று எழுதாமல் அதற்கு ஓர் அடித்தளம் அமைத்து சிங்கப்பூர்த் தமிழர்கள் குறித்த செய்திகளை எல்லாம் ஒரே இடத்தில் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது. அதன் விளைவுதான் இந்த சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்.
திரு அருண் மகிழ்நன்
குறிப்புச் சொற்கள்