சமூகத்தின் அடையாளம், பண்பாட்டுச் சாளரம் தமிழ் முரசு

சமூகத்தின் அடையாளம், பண்பாட்டுச் சாளரம் தமிழ் முரசு

5 mins read
நூற்றாண்டை நோக்கி வீறுநடை போடும் தமிழ் முரசு சமூக கட்டமைப்பிற்கு ஆற்றிய பங்கு, மக்களின் வாழ்வியலை தமிழோடு இணைத்த பாங்கு குறித்த அறிவுசார் சமூகத்தினரின் கருத்துகள் இந்தச் சிறப்புக் கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளன.
8b690d39-b1ea-42f6-8bd4-b5df327d3457
பேராசிரியர் முனைவர் அ வீரமணி - படம்: பே.கார்த்திகேயன்

ஆண்டுகள் பல கடந்து, பல்வேறு பரிணாமங்களைப் பெற்று வந்துள்ள தமிழ் முரசுடனே வாழ்ந்து வருபவர் பேராசிரியர் முனைவர் அ வீரமணி.

தமிழ் மக்களின் வாழ்வாக, அவர்களின் குரல்களை எதிரொலிக்கும் கருவியாகத் தமிழ் முரசு ஒலித்து வருகிறது என்பது மறுப்பதற்கில்லா உண்மை என்பதை அறுதியிட்டுக்கூறிய பேராசிரியர், “தமிழ் முரசு சமூகத்தின் அடையாளம்; அது பண்பாட்டின் சாளரம்,” என்றார்.

தமிழர்களைப் படிக்க வைத்த தமிழ் முரசு

“தமிழ்ச் சமூகத்தின் குரலாகத் திகழ்து வரும் தமிழ் முரசு, அச்சமூகத்திற்கான கொள்கை வளங்களைக்கொண்டு செல்லும் வாயிலாகவும் உள்ளது,” என்றார் முனைவர் வீரமணி.

“ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் சமூகம் சார்ந்த வாழ்வியல் நிலை தற்போது உள்ளதுபோல் இருக்கவில்லை. குறிப்பாகத் தொழிற்சங்கங்கள் நெருக்குதலுக்கு உள்ளான காலத்தில் தமிழ் மக்களின் எண்ணவோட்டங்களை ஏந்தி வந்தது தமிழ் முரசு,” என்றார் அவர்.

‘‘பல்லாண்டுகாலமாகத் தமிழ் மொழி பேசி வந்த ஒரு கூட்டம், எழுதப் படிக்கத் தெரியாத நிலையில் சிங்கப்பூரில் இருந்தது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை.

“முன்பெல்லாம், தமிழ் படிக்கத் தெரிந்த யாராவது ஒருவர் தமிழ் முரசு செய்தித்தாளைப் படிக்க மற்றவர்கள் கேட்பார்கள். ஏனெனில் பெரும்பாலானோர் படிக்கவோ எழுதவோ அறிந்திருக்கவில்லை. அத்தகைய சூழலில் தமிழர்கள் மத்தியில் முக்கியமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது முரசு,” என்று நினைவுகூர்ந்தார் முனைவர் வீரமணி.

“பின்னாளில் சிங்கப்பூரில் தமிழ்ப் பள்ளிகளில் தொடங்கப்பட்டதற்கும் அவர்களின் பிள்ளைகள் தமிழ் மொழி படித்ததற்கும் தமிழ் முரசு முக்கியக் காரணம். பலர் தமிழ்ப் பள்ளிகளில் படித்தோம் என்று சொல்லலாம். ஆனால் தமிழே படிக்காதவர்கள் தமிழ் படிக்கப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பியதே பெரும் புரட்சி, அதற்கான தளம் முரசு ஏற்படுத்திய சமூக மலர்ச்சி,’’ என்றார்.

“1970க்குப் பிறகு நாடு அடைந்த வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அனைவரும் பள்ளிக்கூடம் சென்றார்கள். அதுவும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் சென்றார்கள். தமிழை ஓர் பாடமாக எடுத்தார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாமல் இரண்டாவது மொழியாகப் பயில்வோர் எப்படி செய்திகளைத் தமிழில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற சவால் இருந்தது. அந்தச் சவாலைக் களையக் கைகொடுத்தது தமிழ் முரசு எனலாம்,” என்றார் முனைவர் வீரமணி.

நாட்டின் அடையாளத்தை முழுமை பெற செய்த முரசு

“அக்காலத்தில் சிங்கப்பூர் இப்போதுபோல் வளமாக இல்லை. அதனால் இங்கு வந்து வேலைபார்த்த, வாழ்ந்த தமிழர்கள் தாய் மண்ணான தமிழ் நாட்டுக்குத் திரும்பவே எண்ணியிருந்தனர். தமிழகம் அப்போது வளமாக இருந்தது. சீனர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப முடிந்திருந்தால் அவர்களும் திரும்பியிருப்பார்கள். அது தவறு இல்லை.

“அந்தச் சூழலில் அந்த மக்களை இந்த நாட்டுக் குடிமக்கள் ஆகச் சொல்லித் தமிழ் முரசு வழியாக கோ.சாரங்கபாணி முன்னெடுத்த இயக்கம் மிக முக்கியமானது. சிங்கப்பூர்த் தமிழர்கள், இந்த நாட்டு மக்களாக, இந்த நாட்டின் பல இன, மொழிக் கொள்கைக்கு ஏற்ப வாழ திரும்பத் திரும்ப அறிவுறுத்தி, சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியதிலும் தமிழ் முரசுக்கு முக்கியமான பங்குண்டு என்று முனைவர் வீரமணி குறிப்பிட்டார்.

பேராசிரியர் முனைவர் அ வீரமணி
பேராசிரியர் முனைவர் அ வீரமணி - படம்: பே.கார்த்திகேயன்

நாட்டின் நான்கு அதிகாரத்துவ மொழிகளைப் பற்றி மேற்கோள் காட்டிய முனைவர் வீரமணி, சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) குழுமத்தில் பிற்காலத்தில் தமிழ் முரசு இணைந்ததையும் சுட்டினார்.

‘‘முன்பு இக்குழுமத்தில் தமிழ் மொழி இல்லாமல் இதர மூன்று அதிகாரபூர்வ மொழிகள் இருந்தபோது, அது மூன்றுகால் குதிரைபோல இருந்தது. தமிழ் முரசும் அதில் இணைந்ததால் சிங்கப்பூருக்குச் சரியான அடையாளத்தைத் தமிழ்ச் செய்தித்தாளும் தமிழ் மொழியும் தேடித் தந்துள்ளன. தமிழுக்கு என்று ஒரு நாளிதழ் இல்லாமல் இருந்தால் அந்த அடையாளம் முழுமை பெற்றிருக்காது,’’ என்றார் அவர்.

“ஆங்கிலத்தில் செய்தியைப் படிப்பதற்கும் தமிழில் செய்தியைப் படிப்பதற்கும் பெரும் வேறுபாடு உள்ளதாகக் கருதுவதாகக் கூறிய முனைவர் வீரமணி, அரசியல், சமூகம் சார்ந்த பல்வேறு நிலைகளிலும் இதுவே மக்களின் அடையாளம்,’’ என்றும் சொன்னார்.

வணிக ரீதியாக வெற்றிகரமாக நாளிதழை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம், அதன் நிர்வாகம் தொடர்பிலான இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்பட்டபோதும் அதனைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஆர்வம் தமிழ் முரசின் ஆசிரியர் குழுவிற்கு எப்போதும் இருந்ததைச் சுட்டிய முனைவர் வீரமணி, அதுகுறித்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

’1970களில் தமிழ் முரசின் ஆசிரியர் திரு ஜெயராம் சாரங்கபாணியை சந்தித்தேன். அவரிடமும் அவரது தாயாரிடமும் இருந்த அந்தத் தணியாத குறிக்கோள் பாராட்டுக்குரியது.

‘‘தொடர்ந்து இடர்களைத் தாண்டித் தமிழ் முரசை சமூகத்துடன் அணுக்கமாக இணைத்து, அது நீடித்திருக்க வகை செய்த வை. திருநாவுக்கரசின் பங்களிப்பும் அடுத்தடுத்து வந்த ஆசிரியர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது,” என்றார் அவர்.

“தற்போது உள்ளதுபோல நவீன அச்சு இயந்திரங்கள், அன்று இல்லை. செய்திகள் கைகளால் எழுதப்பட்டு அச்சுகோக்கப்பட்டு பிழை திருத்தம் செய்யப்படும். பிறகே அதனை அச்சுக்கோப்பாளர்கள் சீர் செய்வர்; செய்திகள் வெளியாகும்.

‘‘எந்தவொரு தடைக்கும் கட்டுப்படாமல், அந்த நாளில் சிங்கப்பூருக்குக் கூட்டமாக வந்த மக்களை ஓர் இனமாக மாற்றியது தமிழ் முரசு,’’ என்றார் முனைவர் வீரமணி.

தமிழ் முரசின் நீண்டகால வாசகர், முதுகலை மாணவராக இருந்தபோது தமிழ் முரசுக்காகச் செய்திகள் எழுதியவர், மொழி ஆர்வலர், ஆய்வாளர் எனப் பன்முகம் கொண்ட முனைவர் வீரமணி, ‘‘தமிழ் முரசு முன்னின்று நடத்திய தமிழர் திருநாளும் தமிழ் உணர்வைச் சமூகத்தில் ஆழமாக வேரூன்றச் செய்தது.

‘‘இந்தத் தமிழ் உணர்வின் அடிப்படையில் ‘ரேண்டல் கமிஷன்’’ நாட்டின் நாடாளுமன்றத் திட்டங்களை வரைந்தபோது, அவர்கள் தமிழையும் அதிகாரத்துவ மொழியாக ஏற்றுக்கொண்டனர். அன்று தமிழ் முரசு முன்னின்று சிங்கப்பூரில் இந்தச் சாதனையைச் செய்யாதிருந்தால், சிங்கப்பூரில் தமிழ் அதிகாரத்துவ மொழி எனும் இடத்தைப் பெற்றிருக்காது,” என்று ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பைக் வலுவாக அமைத்துக்கொடுத்த தமிழ் முரசின் சாதனை பயணத்தை நினைவுகூர்ந்தார் முனைவர் வீரமணி.

சமூகத்தின் அடையாளம்

“தமிழ் முரசு என்பது இன்றைய சமூகத்தின் அடையாளம். இந்த அடையாளம் தொடர்ந்தால்தான் குறிப்பாகத் தமிழருக்கும், பொதுவாக இந்தியருக்குமான அடையாளம் சிங்கப்பூரில் நிலைத்திருக்கும்,” என்று உறுதிபடக்கூறினார் முனைவர் வீரமணி.

சமூகத்தின் அடையாளமாகத் திகழ்ந்தால் மட்டுமே தமிழ் முரசு தழைக்க முடியும். எனவே இன்னும் அணுக்கமாகச் சமூக அமைப்புகளை இதுவரை இல்லாத அளவாகச் சென்றடைந்து தமிழ் முரசு நீடித்து வாழ ஆவன செய்ய வேண்டும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்