எதிர்காலப் பொறியியல் திறமைகளை உருவாக்கும் தனது உறுதிப்பாட்டை எஸ்பி குழுமம் மீண்டும் வலியுறுத்தும் வகையில் தனது பொறியியல் கல்வி உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு மேலும் 1.35 மில்லியன் வெள்ளி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதன்வழி, 2022ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துக்கு (ஐடிஇ) மொத்தமாக வழங்கப்படும் நிதி இரட்டிப்பாகி 2.7 மில்லியன் வெள்ளியாக உயர்ந்துள்ளது.
இந்தக் கூடுதல் நிதியுதவியால், அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 450 ஐடிஇ மாணவர்கள் பயனடைவார்கள். இதன்மூலம், இத்திட்டத்தின்கீழ் ஆதரவுபெறும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 900ஆக உயரும்.
குறைந்த வருமானமுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட இத்திட்டம், மூன்று ஐடிஇ கல்லூரிகளில் பொறியியல் படிப்பை மேற்கொள்ளும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு நிதியுதவியை வழங்குகிறது.
மாணவர்களின் கல்வி, தினசரி வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்கும் இத்திட்டம், எஸ்பி குழுமத்தில் வேலைப்பயிற்சி வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்குகிறது. இதன்மூலம், எரிசக்தி, பொறியியல் துறைகளில் மாணவர்கள் மதிப்புமிக்க நடைமுறை அனுபவத்தையும் தொழில்முன்னேற்றத்திற்குத் தேவையான புதிய வாய்ப்புகளையும் பெறுவார்கள்.
இந்த மைல்கல்லைக் குறிக்கும் வகையில், மூன்று ஐடிஇ கல்லூரிகளைச் சேர்ந்த 20 மாணவர்கள் எஸ்பி குழுமத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட ஒரு கற்றல் பயணத்தில் பங்கேற்றனர்.
கட்டமைப்பு பாவனைப் பயிற்சி அறைகளில் (Grid Simulation Room) நடைமுறைப் பயிற்சி, சிங்கப்பூரின் மின்சார உள்கட்டமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த கேலாங் பாருவின் நிலத்தடி கம்பிவட சுரங்கப்பாதையில் சுற்றுப்பயணம் போன்ற அனுபவங்களையும் மாணவர்கள் பெற்றனர்.
எஸ்பி குழுமத்தின் கண்காணிப்பு ஆளில்லா வானூர்திகள், ‘ஸ்போக்’ (SPock) எனப்படும் ரோபோ நாய் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை மாணவர்கள் பார்வையிட்டனர். நிலத்தடி சுரங்கங்களில் எளிதில் செல்ல முடியாத பகுதிகளை ஆய்வு செய்ய இந்த ரோபோ நாய் பயன்படுத்தப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு இந்தக் கல்வி உபகாரச் சம்பளத்தைப் பெற்ற ஐடிஇ மாணவி சங்கீதா பிரகாஷ், 18, தனது பகுதிநேர வேலையின் சுமையைக் குறைக்கவும் படிப்பில் முழுக் கவனம் செலுத்தவும் இது உதவியதாகக் கூறினார்.
குறைந்த வருமானக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், இந்த உபகாரச் சம்பளத்தை நீண்டகால நிதி சுதந்திரத்திற்கான முதல் படியாகக் கருதுகிறார்.
ஐடிஇயின் வேலை-கல்விப் பட்டயத்தை முடித்தபின், சங்கீதா தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
“இன்றைய சுற்றுப்பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. எஸ்பி குழுமம் திரைக்குப் பின்னால் செய்யும் பணிகளைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன்.
“தவறுகளைக் கண்டறிந்து அறிவிக்கும் ரோபோ நாயும் ஆய்வுகளை விரைவாக, திறம்படச் செய்யும் ஆளில்லா வானூர்திகளும் என்னை மிகவும் கவர்ந்தன. தொழில்நுட்பம் எவ்வாறு நமது எரிசக்தி அமைப்புகளை மேம்படுத்துகிறது என்பதையும் தெளிவாகப் புரிந்துகொண்டேன்,” என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் மற்றோர் அங்கமாக, எஸ்பி குழுமத்தில் பொறியாளர்களாகப் பணியாற்றும் முன்னாள் ஐடிஇ மாணவர்கள் தங்கள் அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்தனர்.
மாணவர்கள் தங்களின் முழுத் திறமையையும் வெளிப்படுத்துவதற்கு உதவுவதுவே இந்தக் கல்வி உபகாரச் சம்பளத்தின் முக்கிய நோக்கமாகும் என எஸ்பி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டான்லி ஹுவாங் தெரிவித்தார்.
“எதிர்காலப் பொறியியல் வல்லுநர்களை உருவாக்குவதில் எஸ்பி குழுமம் உறுதியாக உள்ளது. இம்மாணவர்களில் பலர், நம் நாட்டின் நிலையான எரிசக்தி எதிர்காலத்தை உருவாக்க முக்கியப் பங்கு வகிப்பார்கள்,” என்று அவர் கூறினார்.