அவசரத் தேவை ஏற்படும்போது உகந்த நடவடிக்கை எடுப்பதில் பயிற்சி பெற்ற நால்வரை சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் இலங்கைக்கு அனுப்புகிறது.
வெள்ள நிவாரணப் பணிகளில் கைகொடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. தித்வா சூறாவளி, பருவமழை ஆகியவற்றின் காரணமாக இலங்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான தற்காலிகத் தங்குமிடங்கள், சுகாதாரப் பராமரிப்பு, கழிவறை வசதிகள் போன்றவற்றுக்கு இலங்கையில் இன்னும் அவசரத் தேவை இருப்பதாகச் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) அறிக்கையில் தெரிவித்தது.
சில வாரங்களுக்கு முன்பு இலங்கையை தித்வா சூறாவளி தாக்கியது. அது, அண்மை ஆண்டுகளில் அந்நாட்டைத் தாக்கிய ஆக மோசமான இயற்கைப் பேரிடர்களில் ஒன்றாகும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்குத் தற்காலிக முகாம்கள், மருத்துவ முகாம்கள் ஆகியவற்றை அமைக்க சிங்கப்பூர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் குழுக்கள் இணைந்து பணியாற்றும். மீண்டு வருவதற்குரிய திட்டமிடுதலுக்கு வழிவகுக்க மனிதாபிமான தேவைகளை ஆராய்வது போன்ற நடவடிக்கைகளிலும் அவை ஈடுபடும்.
“நம்மில் பலர் ஆண்டிறுதியைக் குடும்பத்தாருடன் செலவிடத் தயாராகிவரும் நிலையில் இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் தங்களின் மறுவாழ்வைச் சீராக அமைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்,” என்றார் இலங்கைக்கு அனுப்பப்படும் குழுவில் இடம்பெறும் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கத் தொண்டூழியர் தாக்ஷாயினி ஸ்கந்தகுமார்.
முன்னதாக இம்மாதம் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் இலங்கைக்கு 50,000 வெள்ளி ரொக்கம் வழங்கி ஆதரவளிக்கப்போவதாக அறிவித்திருந்தது. நிவாரணப் பொருள்களை வாங்கி, விநியோகிக்க உதவுவதற்கு அத்தொகை வழங்கப்பட்டது.
தங்களின் நிதி திரட்டு முயற்சி முலம் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம், சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அம்முயற்சி வரும் ஜனவரி 31ஆம் தேதி நிறைவுறும்.
தொடர்புடைய செய்திகள்
அதன் மூலம் திரட்டப்படும் நிதி, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அவசர நிவாரணப் பணிகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்.
சிங்கப்பூரர்கள் வங்கிக் கடன் அட்டைகளை வைத்து Giving.sg இணைய முகவரியில் நன்கொடை அளிக்கலாம். கியூஆர் குறியீட்டை வருடி சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கத்தின் இணையத்தளம் வழியாகவும் நன்கொடை அளிக்கலாம்.

