பணிசார்ந்த நலன் காக்க புதிய திட்டம்

பணிசார்ந்த நலன் காக்க புதிய திட்டம்

2 mins read
f05b8061-a8b1-43fd-a391-67ef221286fa
பாய லேபார் குவார்ட்டர் பிளாசா மற்றும் வாழ்நாள் கற்றல் நிலையத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், நான்கு பிரிவுகளில் பல்வேறு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. - படம்: சாவ் பாவ்

அனைவரும் அணுகத்தக்க கற்றல் சந்தை, எங்கிருந்தாலும் கற்றல் வளங்களைச்  சென்றடையக்கூடிய வாய்ப்பு என பணிசார்ந்த நலன் காக்கும் ‘திரைவ் அட் லைப்ரரிஸ்’ (THRIVE@libraries) எனும் புதிய திட்டம் அறிமுகம் கண்டுள்ளது.

‘நலமாக வாழ்தல், சிறப்பாகப் பணிபுரிதல்’ (Live well, Work better) எனும் பாங்கை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதனை விவரிக்கும் கற்றல் களங்கள் பலவும் மேற்கூறிய புதிய திட்டத்தின் வழியாக மக்களுக்கு எடுத்துரைக்கப்படவுள்ளன. 

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழா 2024’இன் ஓர் அங்கமாக தேசிய நூலக வாரியம் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’ அமைப்புடன் இணைந்து ஜூலை 18ஆம் தேதி இத்திட்டத்தைத் தொடங்கியது. 

வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்கும் நோக்கோடு களம் கண்டுள்ள ‘திரைவ் அட் லைப்ரரிஸ்’ திட்டம் வாயிலாக, சிங்கப்பூரர்கள் தங்களின் வேலைக்குப் பொருத்தமான திறன்களை மேம்படுத்திக்கொள்ள இயலும். 

பாய லேபார் குவார்ட்டர் (PLQ) பிளாசா மற்றும் வாழ்நாள் கற்றல் நிலையத்தில் ஜூலை 18 முதல் ஜூலை 20 வரை நடைபெறும் இந்நிகழ்வில், நான்கு பிரிவுகளில் பல்வேறு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு, பொழுதுபோக்கு, திறன்மேம்பாடு எனப் பல்வேறு நடவடிக்கைளை வருகையாளர்கள் மேற்கொள்ளலாம். 

பணியிடத்தில் ஒருவரது குணநலன், எந்த உள்ளூர் விலங்குகளின் பிம்பத்துடன் ஒத்துப்போகின்றது என்பதைக் கேளிக்கையுடன் காண்பிக்கும் ‘வேலையிடத்தில் நீங்கள் யார்?’ எனும் கேள்வி பதில் அங்கம், அதனைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் ஏற்றாற்போல் திட்டங்களைப் பரிந்துரைக்கும்  வாய்ப்பு என இவ்வாண்டுக் கற்றல் சந்தையில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

சமூகத் தோட்டம், ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவு என ஒருவரது ஆர்வம் எதுவாக இருந்தாலும், அனைவரும் கற்றிட மிகுதியான வாய்ப்பை அளிக்கும் இந்நிகழ்வு, எங்கிருந்தாலும் கற்றலை மேம்படுத்திட உதவும் என்று தமிழ் முரசிடம் தெரிவித்தார் நூலகர் திருவாட்டி சைனப்.

மேலும், வாழ்நாள் முழுதும் கற்றலை மேற்கொள்ள உதவும் பல்வேறு பயிலரங்குகள், கலந்துரையாடல்கள் என நிபுணத்துவத் திறனுடன் திகழச் செய்வதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்நிகழ்வைத் தாண்டி நூலக வாரியத்தின் செழுமையான வளங்களை  சிங்கப்பூரர்கள் தொடர்ந்து நாடவும், வாழ்க்கைத் தொழில் மற்றும் பணி சார்ந்தவற்றில் நன்மைபெறும் வழிகளைக் கண்டுணரவும் ஏதுவாக ‘வாழ்வியல் அறை’ எனும் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள பகுதி உட்பட மக்களுக்குக் கற்றல் பயணத்தில் கைகொடுக்கும் பல்வேறு அம்சங்களும்  திட்டத்திற்கு வலுசேர்க்கின்றன.

சிங்கப்பூரில் வாழ்நாள் கற்றல் கலாசாரத்தைக் கட்டியெழுப்ப முனையும் தேசிய நூலக வாரியத்தின் கடப்பாட்டின் விளைவே ‘திரைவ் அட் லைப்ரரிஸ்’ என்று சொன்னார் அதன்  தலைமை நிர்வாக அதிகாரி இங் செர் பாங். 

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர்’  மற்றும் இதர சமூகப் பங்காளிகளுடன் இணைந்து சிங்கப்பூரர்கள் கற்றலை மேற்கொள்ள பல வழிகள் உண்டு என்பதை வெளிக்காட்டி,  அதன்மூலம் அவர்கள் வாழ்விலும் வேலையிலும் செழித்தோங்கலாம் என்பதை விளக்க முடியும் என நம்புவதாகவும் திரு இங் சொன்னார்.

நிகழ்வு குறித்த மேல் விவரங்களுக்குத் தேசிய நூலக வாரியத்தின் இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

குறிப்புச் சொற்கள்