கோலாகலமாக நடைபெற்ற 20வது தமிழ்மொழி விழா முன்னோட்ட நிகழ்ச்சி

கோலாகலமாக நடைபெற்ற 20வது தமிழ்மொழி விழா முன்னோட்ட நிகழ்ச்சி

2 mins read
இந்திய மரபுடைமை நிலையத்தில் களைகட்டியது 2026 தமிழ்மொழி விழா முன்னோட்டம்
e09e0bf6-8c6c-4a66-8d7a-6592b5ecfcd1
‘ஏகே தியேட்டர்ஸ்’ படைத்த மரபுக் கலை நிகழ்ச்சி. - படம்: பே கார்த்திகேயன்
multi-img1 of 3

வளர்தமிழ் இயக்கத்தின் 20வது தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, இந்திய மரபுடைமை நிலையத்திலும் அதன் வெளிப்புறத்திலும் சனிக்கிழமை (மார்ச் 14) ஒரு சிறப்பு முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்மொழி விழா 2026, மார்ச் 28 முதல் ஏப்ரல் 26 வரை நடைபெறவிருக்கிறது. இந்த மாபெரும் விழாவிற்கான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 1,500 பேர் நேரில் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதில் 20க்கும் மேற்பட்ட பங்காளித்துவக் குழுக்கள் மேடைப் படைப்புகள் மூலமாகவும் கண்காட்சிச் சாவடிகளை அமைத்தும் பங்கேற்றன. பொதுமக்கள் அமைப்புகளின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, அவர்கள் படைக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து மேல்விவரங்களை அறிந்துகொண்டனர்.

‘எடுவில்’ அமைப்பின் கண்காட்சிச் சாவடி.
‘எடுவில்’ அமைப்பின் கண்காட்சிச் சாவடி. - படம்: பே கார்த்திகேயன்

மரபுக் கலை, நாடகம், தற்காப்புக்கலை உள்ளிட்ட மேடை நிகழ்ச்சிகளுடன் அனைவரும் பங்கேற்கக்கூடிய கைவினை நடவடிக்கைகளும் மாணவர்களுக்கான சிறப்பு அட்டை விளையாட்டும் முன்னோட்ட நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்களாக அமைந்தன. விளையாட்டை வெற்றிகரமாக நிறைவுசெய்தோர்க்குத் தமிழ்மொழி விழா தொடர்பான சிறப்பு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

களரி அகாடமி வழங்கிய சிலம்பாட்ட நிகழ்ச்சி.
களரி அகாடமி வழங்கிய சிலம்பாட்ட நிகழ்ச்சி. - படம்: பே கார்த்திகேயன்
பல்வேறு நடவடிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ந்த சிறுவர்கள்.
பல்வேறு நடவடிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ந்த சிறுவர்கள். - படம்: பே கார்த்திகேயன்

மக்கள் பேராதரவுடன் நடைபெற்ற இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் தமிழ் முரசு நேரலையாகத் தனது சமூக ஊடகப் பக்கங்களில் ஒளிபரப்பியது.

இந்த ஆண்டின் விழாவிற்கான கருப்பொருள் ‘ஈடுபாடு’ என்பதாகும்.

இது குறித்துப் பேசிய வளர்தமிழ் இயக்கத் தலைவர் நசீர் கனி, தமிழை ஏனோதானோவென்று நாம் பயன்படுத்தக்கூடாது என்றார். உரிய கவனம் செலுத்தி, அதன் சுவையை அறிந்து, வீட்டிலும் நாட்டிலும் சமுதாயத்திலும் அதன் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறிய அவர், அப்படிச் செய்தால் தமிழ் மொழி மிகச் சிறந்த உன்னத நிலையை அடையும் என்று குறிப்பிட்டார்.

“தமிழ்மொழி விழா 2007ல் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டபோது இரண்டு வார நிகழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் இப்போது ஒவ்வோர் ஆண்டும் அதிகமான அமைப்புகள் எங்களோடு கைகோக்கின்றன.

“பொதுமக்களின் ஆதரவும், பள்ளி மாணவர்கள், இளையர்களின் ஆதரவும் தொடர்ந்து வளர்ந்து வருவது வரவேற்கத்தக்கது,” என்று விழாவின் 20 ஆண்டுகால வளர்ச்சி குறித்தும் திரு நசீர் கனி மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த ஆண்டின் தமிழ்மொழி விழாவில் 44 பங்காளித்துவ அமைப்புகளின் ஆதரவோடு பல்வகையான 43 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

விழாவின் அதிகாரபூர்வத் தொடக்க நிகழ்ச்சி மீடியாகார்ப் அரங்கில் மார்ச் 29ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

இது குறித்தும் நடைபெறவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்தும் மேல் விவரமறிய http://www.tamil.org.sg/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்