தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தெலுங்கானா - சிங்கப்பூர் இடையே புதிய ஒப்பந்தம்

திறன் மேம்பாடு, பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்க இலக்கு

2 mins read
30ba2c8b-e48c-4aa0-8d4b-d7465b7b58ec
சிங்கப்பூருக்கு தனது முதல் அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொண்ட தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தமது பயணத்தின் முக்கிய அங்கமாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனைச் சந்தித்தார். - படம்: ரேவந்த் ரெட்டி ‘எக்ஸ்’ தளம்

சிங்கப்பூருக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பொருளியல் உறவுகளை வலுப்படுத்தவும் திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும் தெலுங்கானா அரசும் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகமும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

தெலுங்கானா முதலமைச்சராக சிங்கப்பூருக்குத் தமது முதல் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்ட திரு ரேவந்த் ரெட்டி, தமது பயணத்தின் முக்கிய அங்கமாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.

இச்சந்திப்பின்போது கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, நிலையான பசுமை எரிசக்தி, நீர் மேலாண்மை, சுற்றுலா, உள்ளிட்ட அநேக துறைகளில் சிங்கப்பூருடன் நீண்டகால பங்காளித்துவத்தை உருவாக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்தி வருவதாகத் திரு ரெட்டி குறிப்பிட்டார்.

திரு ரெட்டியின் மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணத்தின் முதல் நாளான ஜனவரி 17ஆம் தேதி, கல்வி மற்றும் திறன் பயிற்சித் துறையில் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாகக் கூறினார் தெலுங்கானா முதல்வரின் குழுவில் இடம்பெற்றுள்ள அம்மாநில தொழில்துறை அமைச்சர் ஸ்ரீதர் பாபு.

திறன் பயிற்சி, பாடத்திட்ட மேம்பாடு, ஆசிரியர் பயிற்சி போன்ற துறைகளில் சிங்கப்பூருடன் இணக்கமாகச் செயலாற்றுவதை மேம்படுத்தும் இலக்குடன் வரையப்பட்ட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தெலுங்கானாவின் ‘யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்தின் (ஒய்ஐஎஸ்யு) துணை வேந்தர் சுப்பாராவ் மற்றும் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழக கல்விச் சேவைகள் பிரிவின் துணை இயக்குநர் ஃபேபியன் சியோங் இருவரும் கையெழுத்திட்டனர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய சிறப்பம்சமாக, ‘பயிற்சியாளர்களுக்கான பயிற்சி’ எனும் திட்டத்தின் வாயிலாக ஒய்ஐஎஸ்யு பயிற்சியாளர்கள், தொழில்நுட்பக் கல்விக் கழக நிபுணர்களிடமிருந்து மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளைப் பெறுவர். 

“கூடுதலாக, இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக அளவில் பாராட்டப்பட்ட கல்விக் கழகத்தின்  பாடத்திட்டத்தைப் பல்கலைக்கழகம் அதன் கல்வித் திட்டங்களில் ஒருங்கிணைக்க உதவுகிறது. மேலும், மாணவர்களும் பயிற்சியாளர்களும் உலகத்தரம் வாய்ந்த கல்வித் தரங்களால் பயனடைவதை இது உறுதிசெய்கிறது,” என்று தெலுங்கானா அரசின் செய்தி அறிக்கை குறிப்பிட்டது.

இதற்கிடையே, சிங்கப்பூர் பயணத்தின்போது தாம் கண்ட நகர்ப்புறக் கட்டமைப்புகள், நதி சீரமைப்பு, நீர் மேலாண்மை முன்னேற்றங்கள், பாரம்பரிய கட்டடங்களை மீட்டெடுப்பதிலும் பாதுகாப்பதிலும் சிங்கப்பூர் பெற்றுள்ள வெற்றி ஆகியவை தமக்குச் சிறந்த புரிதலை நல்கியதாக திரு ரெட்டி சொன்னார்.

“உலகத் தரம் வாய்ந்த ஹைதராபாத்தை உருவாக்கச் சிறந்த நடைமுறைகளை நாம் இன்னும் கற்க வேண்டும். அதை நாங்கள் செய்வோம்,” என்றும் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் அவர்.

புதிய ஒப்பந்தம் குறித்து குறிப்பிட்ட அமைச்சர் விவியன், வேகமாக வளர்ந்து வரும் இந்திய மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவின் வளர்ச்சியில் சிங்கப்பூர் வர்த்தகங்கள் பங்காளிகளாக இருக்க பல வாய்ப்புகள் உள்ளதாகவும் பசுமைப் பொருளியல், நகர்ப்புற மேம்பாடு உட்பட பல பிரிவுகளில் வலுவான ஒத்துழைப்பை எதிர்நோக்குவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்