வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பைக் கையாள இவ்வாண்டு டிசம்பர் மாதம் வரை முட்டை ஏற்றுமதியை 30லிருந்து 50 விழுக்காடு வரை குறைத்துக்கொள்ளுமாறு தாய்லாந்து, நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டது.
அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் உணவு அமைப்பு, தாய்லாந்து அதிகாரிகளைத் தொடர்புகொண்டுள்ளது. இதுகுறித்து என்ன நடக்கிறது என்பதைத் தாங்கள் கவனித்துவருவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு, சிஎன்ஏ ஊடகம் கேட்ட கேள்விகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) பதிலளித்தது.
சிங்கப்பூரில் விநியோகிக்கப்படும் முட்டைகளில் 15 விழுக்காட்டுக்கும் குறைவாக தாய்லாந்திலிருந்து வருவதாக அமைப்பு தெரிவித்தது.
சிங்கப்பூர் பலதரப்பட்ட நாடுகளிலிருந்து முட்டைகளைத் தருவிப்பதாக அமைப்பு குறிப்பிட்டது. மலேசியா, இந்தோனீசியா, உக்ரேன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சிங்கப்பூர் முட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாக அமைப்பு தெரிவித்தது.
“தேவைப்பட்டால் மற்ற இடங்களிலிருந்தும் முட்டைகளைப் பெற முடியும்,” என்று அது குறிப்பிட்டது.
ஷெங் சியோங் பேரங்காடி தாய்லாந்திலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதில்லை என்று அதன் பேச்சாளர் புதன்கிழமை (அக்டோபர் 7) கூறினார். அதேபோல் இதுகுறித்து என்டியுசி ஃபேர்பிரைஸ், கோல்ட் ஸ்டோரேஜ், ஜையன்ட் ஆகியவற்றிடமும் சிஎன்ஏ கருத்து கேட்டுள்ளது.
தாய்லாந்து சென்ற ஆண்டு 1.7 பில்லியன் பாட் (50.46 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான முட்டைகளை ஏற்றுமதி செய்தது. அவற்றில் 79 விழுக்காட்டு முட்டைகள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தாய்லாந்து வேளாண் அமைச்சின் புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.
