தைப்பூசத் திருநாளின்போது பால்குடம் சுமந்து, தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்த விரும்பும் பக்தர்களுக்கு வசதியாக முன்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கான எண்ணிக்கை வரம்பை எட்டிவிட்டதால் முன்பதிவு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பக்தர்கள் பலரும் இணையம் வழியாகத் தங்கள் ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், பால்குடம் எடுக்க விரும்பும் பக்தர்களின் நலன் கருதி, அதற்கான முன்பதிவை நீட்டிப்பது தொடர்பில் கலாசார, சமூக, இளையர்துறை துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தமது சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“குடும்பங்கள், முதியோர் உள்ளிட்ட பக்தர்கள் பலரும் பல்லாண்டுகளாகத் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். இதனால், அப்போது பக்தர்கள் பலரும் அதில் கலந்துகொண்டு, தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற வழிவகை செய்வது முக்கியம். எந்தவொரு பக்தரும் திருப்பி அனுப்பப்படக்கூடாது.
“அதனால், பால்குடம் எடுக்க விரும்பும் பக்தர்கள் சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலிலும் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலிலும் ஜனவரி 30ஆம் தேதி காலை 8 மணியிலிருந்து 31ஆம் தேதி நண்பகல் 12 வரை அதற்கு முன்பதிவு செய்யலாம்,” என்று திரு தினேஷ் தெரிவித்துள்ளார்.
இம்முறை தைப்பூசத் திருநாள் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், உரிய ஏற்பாடுகளைச் செய்திருக்கும் மற்ற இந்துக் கோவில்களிலும் பக்தர்கள் தங்கள் பால்குட நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்றும் துணையமைச்சர் தினேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலுக்கு ஜனவரி 29ஆம் தேதி சென்று, பாதுகாப்பு, தளவாட ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டார்.
தைப்பூசத் திருநாள் கொண்டாட்டம் சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்யப் பணியாற்றிவரும் இந்து அறக்கட்டளை வாரியம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில் அடங்கிய கூட்டு ஏற்பாட்டுக் குழு, தொண்டூழியர்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இவ்வாண்டு தைப்பூசத் திருநாளின் சிறப்பு விருந்தினராகத் திரு தினேஷ் பங்கேற்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

