தீவு விரைவுச்சாலையில் பல வாகனங்கள் ஈடுபட்ட விபத்தில் சிக்கிய மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியும் அவர்களில் ஒருவராவார். புதன்கிழமை (நவம்பர் 4) இவ்விபத்து நிகழ்ந்தது.
புதன்கிழமை காலை 7.10 மணியளவில் துவாசை நோக்கிய தீவு விரைவுச்சாலையில் எங் நியோ நுழைவாயிலுக்கு முன்புள்ள பகுதியில் விபத்து நிகழ்ந்ததாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன. இரு கார்களும் இரு மோட்டார் சைக்கிள்களும் விபத்துக்குள்ளானதாகவும் அந்த வாகனங்களில் ஒன்று போக்குவரத்துக் காவல்துறை மோட்டார் சைக்கிள் என்றும் அவை குறிப்பிட்டன.
26 வயது ஆண் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியும் 28 வயது பெண் மோட்டார் சைக்கிளோட்டியும் காரில் சென்ற 20 வயது ஆண் பயணியும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகக் காவல்துறை சொன்னது. இருவரை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் ஒருவரை இங் தெங் ஃபோங் மருத்துவமனைக்கும் அழைத்து சென்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விசாரணை தொடர்கிறது.
