தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்கா விதித்துள்ள வரிகள் உலகளாவிய வர்த்தகப் போருக்கு வித்திடக்கூடும்: பிரதமர் வோங்

3 mins read
c71e6f00-b149-472a-9d97-95484de1838f
சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்ற மார்சிலிங் - இயூ டீ நகர மன்றத்தின் ஐந்தாண்டுப் பெருந்திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங் மக்களைச் சந்தித்தார்.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்துள்ள வரிகளுக்கு உலக நாடுகள் பதிலடி கொடுத்தால் அத்தகைய நடவடிக்கை உலகளாவிய வர்த்தகப் போருக்கு வழிவகுக்கக்கூடும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்ற மார்சிலிங் - இயூ டீ நகர மன்றத்தின் ஐந்தாண்டுப் பெருந்திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினம் நெருங்கும் வேளையில், மக்கள் கொண்டாடவும், நாடு கடந்து வந்த பாதைகளை நினைத்துப் பார்க்கவும் ஏராளம் உள்ளது என்ற திரு வோங், “நாம் இன்று வலுவான அடித்தளத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். ஆனால் அதிக ஆபத்துள்ள, முன்கூட்டியே கணிக்க இயலாத உலகிற்குள் நுழைகிறோம்,” என்றும் குறிப்பிட்டார்.

அனைத்துலக நாடுகள் பலவற்றுக்கும் அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிவிதிப்புகள் உலகப் பொருளியலில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே வரவிருக்கும் அதிர்ச்சிகளை எதிர்கொள்ள சிங்கப்பூர் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், உலக நாடுகளுக்கான வரி விதிப்பை இம்மாதம் 2ஆம் தேதி அறிவித்தார். சீனா, இந்தியா, ஜப்பான், இந்தோனீசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கான வரி விகிதங்களை அவர் வெளியிட்டார்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை 34 விழுக்காடாகச் சீனா உயர்த்தியுள்ளது.

இவ்வேளையில், உலக நாடுகளுக்கிடையே வர்த்தகப் போர் ஏற்படக்கூடிய அபாயக் கூறுகள், சவால்மிக்க சூழல்கள் ஏற்படலாம் என்று கூறியுள்ளார் திரு வோங்.

“இனம், மொழி, சமயம் எல்லாவற்றையும் கடந்து பரஸ்பர அக்கறை, மரியாதையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது நம் சமூகம். இதுபோன்ற ஒரு காலகட்டத்தில், நம்மிடம் இருப்பதைப் போற்றிக் காப்பது முன்னெப்போதையும்விட மிக முக்கியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், “வருங்காலத்தில் இருள் சூழக்கூடும். எனினும் கொவிட்-19 பெருந்தொற்றைக் கடந்து வந்தது உட்பட, சவால் எத்தகையதாக இருந்தாலும், எப்போதும் சவால்களை மனவுறுதியுடனும் துணிவுடனும் எதிர்கொண்டுள்ளோம்.

“எனவே மக்கள் ஒருசேர ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டால், புயலைத் தாங்கி, சிறந்த இல்லங்களையும் ஒளிமயமான எதிர்காலத்தையும் ஒருங்கிணைந்து உருவாக்க முடியும்,” என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தல் சவாலை வரவேற்கிறோம்: மேயர் அலெக்ஸ் யாம்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வடமேற்கு வட்டார மேயரும் மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அலெக்ஸ் யாம், நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பொதுத் தேர்தல் 2025 குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திரு யாம், இக்குழுத்தொகுதியில் போட்டியிடத் திட்டமிடும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் சவாலை வரவேற்பதாகக் கூறினார். அது நாட்டின் ஜனநாயக முறைக்கு நலன் பயக்கும் என்றார் அவர்.

அக்கட்சியின் வேட்பாளர்கள் குறித்த விவரத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த திரு யாம், மக்கள் செயல் கட்சியைப் (மசெக) பொறுத்தமட்டில் தங்கள் குழுவில் எந்தவொரு வியப்பையும் எதிர்பார்க்கவில்லை என்றபோதும், இறுதி முடிவு பிரதமரிடமே உள்ளது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி ஹேனி சோ, தற்காப்பு, மனிதவள மூத்த துணை அமைச்சரும் அக்குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஸாக்கி முகம்மது ஆகியோரும் பங்கேற்றனர்.

மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியின் மசெக நாடாளுமன்ற உறுப்பினர் குழுவைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வழிநடத்துகிறார். அவர் தலைமையிலான குழு, 2020ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் 63.18 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியைத் தோற்கடித்தது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்