பின்னடைவுகளால் தொய்வு அடையாமல், சவால்களைப் பாதையாக்கி 90வது ஆண்டில் கால்பதிக்கும் தமிழ் முரசுக்கு வாழ்த்துச் சொல்லும் அதே வேளையில் நன்றியையும் தமிழ்ச் சமூகம் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமை நிர்வாகி திரு அருண் மகிழ்நன்.
“சிங்கப்பூரில் மட்டுமின்றி, தமிழ் உலகிலேயே 90 ஆண்டுகள் தமிழ் நாளிதழ் தொடர்ந்து இயங்குவது மிக அரிது. சிங்கப்பூரில் ஏராளமான நாளிதழ்களும் மாத இதழ்களும் தொடங்கப்பட்டது நிறுத்தப்பட்டு விட்டன. தமிழ் முரசு 90 ஆண்டுகளைத் தொட்டிருப்பது ஒரு பெரும் சாதனை,” என்று குறிப்பிட்ட திரு மகிழ்நன், தமிழ் முரசு துவங்கப்பட்டதற்கான நோக்கத்தையும் நினைவுகூர்ந்தார்.
சமூகத்தின் கண்ணாடி
‘‘தமிழ் முரசு தொடங்கியபோதே அது செய்தித்தாளாக மட்டுமின்றி சமூகத்தின் குரலாகவும், சமூகத்தைச் சீர்திருத்தக்கூடிய கருவியாகவும் இருக்க வேண்டும் என்று கோ.சாரங்கபாணி எண்ணினார், அதைச் செயல்படுத்தினார்,’’ என்று குறிப்பிட்டார் திரு அருண்.
ஊடகவியலாளராகவும் ஊடகக் துறை கல்வியாளராகவும் நீண்ட கால அனுபவம் உள்ள திரு அருண், தமிழ் முரசு அந்த இலக்கில் தொடர்ந்து, தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றார். தமிழ்ச் சமூகத்தின் செய்திகளையும் பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தும் கண்ணாடியாகச் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அதற்குத் தமிழ் முரசுடன் அரசாங்கமும் சமூகமும் கைகோத்துச் செயல்படுவது முக்கியம் என்பதையும் அவர் சுட்டினார்.
தமிழ்ப் பத்திரிகை நடத்துவது ஒரு சமூகத் தொண்டு
“தமிழ்ச் சமூகம் இந்நாட்டில் இருக்கும் வரைக்கும் அதற்கு ஒரு குரல் வேண்டும். சமூகத்திற்கு தேவையானதைச் சொல்லும் குரலாகவும் தமிழ் முரசு இருக்கும். இவை இரண்டும் தமிழ் முரசு புரிகின்ற மிகப்பெரிய தொண்டு,’’ என்று குறிப்பிட்டார் திரு அருண்.
தொழில்முறையில் பத்திரிகைத் துறையில் பணம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் சிலர் பத்திரிகை துவங்கியதுண்டு. அது பல நேரங்களில் நல்லபடியாக நடக்காமல் போயுள்ளது.
எவ்வளவு வசதி இருந்தாலும், சிங்கப்பூரில் தமிழ் பத்திரிகை நடத்துவது என்பது ஒரு தொண்டாகத்தான் இருக்க முடியும் என்று தாம் கருதுவதாகச் சொன்னார் தமிழ் முரசின் வாழ்நாள் வாசகரான திரு அருண்.
தொடர்புடைய செய்திகள்
இயக்கங்களைக் கடைக்கோடிவரை கொண்டு சேர்த்த தமிழ் முரசு
தமிழ் முரசு தொடங்கிய காலத்தில் இருந்தே அதனுடன் இழையோடிய முக்கிய உணர்வு என்ன என்பதை விவரித்தார் அருண்.
‘‘நிறுவப்பட்ட நாள் முதல் சமூக உணர்வுடன் வெளிவரத் தொடங்கியது தமிழ் முரசு. “நம் சமூகம் தொடர்ந்து மேம்பாடு காண வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படை எண்ணம்.
‘‘தமிழ்ச் சமூகம் அறிந்துகொள்ள வேண்டிய, இன்றியமையாத பல செய்திகள் தமிழ் முரசில் வெளிவந்தன,’’ என்று சொன்ன திரு அருண், அதன் வழி விளைந்த முக்கியப் பயன்களையும் சுட்டினார்.
மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய, அவர்தம் வாழ்க்கையில் மறுமலர்ச்சி உண்டாக்கக்கூடிய பெரும் இயக்கங்களைத் தமிழ் முரசு கையிலெடுத்ததுடன், ‘தமிழ் மக்களின் நல்வாழ்வு சார்ந்த இயக்கங்களையும் கடைக்கோடிவரைக் கொண்டு சேர்த்தது என்றும் குறிப்பிட்டார் திரு அருண்.
சிங்கப்பூரில் தமிழர்கள், சமூகம், தமிழ் மொழியின் 90 ஆண்டு கால வரலாற்றுப் பதிவாக தமிழ் முரசு உள்ளது என்று கூடிய விரைவில் வெளியீடு காணவுள்ள ‘சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்’ தொகுப்பின் ஆசிரியருமான திரு அருண், தமிழர் கலைக்களஞ்சியத்தின் உருவாக்கத்தில் தமிழ் முரசு பேருதவியாக இருந்தது என்று தெரிவித்தார்.
தமிழ்க் குடும்பங்களுக்கு ஒரு கோரிக்கை
“தமிழ்ச் சமூகத்திற்கான செய்திகள், தமிழ்ச் சமூகத்திற்கான பிரச்சினைகள் ஆகியவற்றை முன்வைப்பதும், அவற்றிற்குத் தீர்வு காண வழிவகுப்பதும் தமிழ் முரசின் தனித்துவம்,” என்று பாராட்டிய திரு மகிழ்நன், ‘‘இதுவரை இல்லாத அளவாக இருமொழிப் புலமை பெற்ற இளையர்கள் பலர் தமிழ் முரசில் இணைந்திருப்பது நம்பிக்கை தருகிறது,’’ என்று கூறினார்.
தமிழ்ச் சமூகத்தின் மீது அக்கறையுள்ள தலைவராகத் தமிழ்க் குடும்பங்களுக்கு ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார் திரு அருண்.
ஒவ்வொரு நாளும் பல நாளிதழ்களை வாசிக்கும் பழக்கமுடைய திரு மகிழ்நன், எப்போதும் தமது கரத்தில் முதலில் ஏந்தும் நாளிதழ் தமிழ் முரசுதான் என்றும் புன்னகைத்தார்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தமிழ் முரசின் தளங்கள் மாறலாம். அது தொடு திரையில் வாசிப்பதாக இருந்தாலும், செய்தித்தாள் வடிவத்தில் இருந்தாலும் தமிழ் நாளிதழை வாங்குவது முக்கியம், வாசிப்பதும் முக்கியம்.
அனைத்துலக செய்திகளைப் படிக்க எண்ணற்ற ஊடகங்கள் உண்டு. ஆனால் நம் சமூகத்தின் செய்திகளை உரக்கச்சொல்லும் ஒரே அதிகாரபூர்வ தமிழ் நாளிதழ் தமிழ் முரசு என்பதை மறுக்க முடியாது என்றார் அவர்.
‘‘தமிழ்க் குடும்பங்கள் வீட்டில் கட்டாயம் தமிழ் முரசு இருக்க வேண்டும். அச்சு இதழாக வாங்கினாலும் சரி, அல்லது மின்னிலக்க செய்தித்தாளாக இருந்தாலும் சரி.
‘தமிழ் முரசுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் இடையே தொப்புள் கொடி உறவு உள்ளது. அதனால்தான் தமிழ்ச் சமூகமும் எங்களுக்கென்று ஒரு நாளிதழ் இருக்கிறது என்று பெருமிதத்துடன் இன்றளவும் சொல்ல முடிகிறது,” என்றார் திரு அருண்.

