இரண்டாக உடையும் அதிமுக; தொண்டர்கள் கவலை

இரண்டாக உடையும் அதிமுக; தொண்டர்கள் கவலை

2 mins read
bbd63b91-f23e-4f17-aedd-7b3e4f844c67
(இடமிருந்து) எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, சி.வி. சண்முகம். - படம்: த இந்து

சென்னை: தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்பு நிகழ்ச்சிக்குச் சென்ற அதிமுகவினர், இரண்டு குழுக்களாகச் சென்றது கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்) எதிராக முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், வேலுமணி ஆகியோர் போர்க்கொடி உயர்த்திய எம்எல்ஏக்களை ஒன்றாகத் திரட்டி தனி ஆலோசனை நடத்தினர்.

இதில், சட்டமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு இனி இபிஎஸ் வரக்கூடாது. விஜய் கட்சியுடன் இணக்கமாக இருக்கலாம், கூட்டணி சேரலாம் என்பது அவர்கள் வாதம்.

அதை இபிஎஸ் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் இரு குழுக்களாக அதிமுகவினர் பிரிந்துள்ளனர். ஒரு குழு இன்னொரு குழுவுக்கு எதிராக ஆள் திரட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த மோதல், திங்கட்கிழமை (மே 11) எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது.

வழக்கமாக இபிஎஸ் வரும்வரை காத்திருந்து அவருடன் சட்டமன்றத்திற்குள் நுழையும் அதிமுக எம்எல்ஏக்கள், திங்கட்கிழமை தனித்தனியாகச் சட்டமன்றத்திற்குள் சென்றனர்.

இபிஎஸ் உடன் தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பண்ணன், ஓஎஸ் மணியன் உள்ளிட்ட வெகு சிலரே வந்திருந்தனர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தோல்வி அடைந்த முனுசாமி, உதயகுமார் உள்ளிட்டோரும் இபிஎஸ் உடன் வந்தனர். இவர்களுக்கு முன்னரே லீமா ரோஸ் உள்ளே சென்றுவிட்டார்.

இபிஎஸ் உள்ளே சென்றபிறகு வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வந்தனர். அவர்களுடன் சில எம்எல்ஏக்களும் வந்தனர். அப்போது அங்கு வேறு சில எம்எல்ஏக்களும் காத்திருந்தனர். அவர்கள் வேலுமணி, விஜயபாஸ்கரை உள்ளே அழைத்துச் சென்றனர்.

இப்படி தனித்தனியாகச் சட்டசபைக்குச் சென்ற இரு குழுக்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. அதிமுக இரு குழுவாகப் பிளந்திருப்பது இந்தச் செயல்பாடுகளால் தெரியவந்தது.

இந்தக் காட்சிகளை நேரில் பார்த்த தொண்டர்கள், கட்சியின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவின் 17 எம்எல்ஏக்கள் திரு பழனிசாமியை தங்களின் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்து அவரையே தொடரச் சொல்லி, சட்டமன்றச் செயலாளர் மற்றும் தற்காலிகச் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் 47 பேரில் இதுவரை 17 பேர் மட்டுமே பழனிசாமிக்கு ஆதரவாக மனு அளித்து உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்